வண்ணக் கிளிஞ்சல்கள் 02: பிரார்த்தனை

வண்ணக் கிளிஞ்சல்கள் 02: பிரார்த்தனை
Updated on
3 min read

எங்கள் குடியிருப்புக்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் அளவுக்குச் சுற்றளவைக் கொண்ட ஒரு பெரிய ஏரி இருக்கிறது. சமீபத்தில் அதன் கரைப்பகுதியைச் சமப்படுத்தி, அகல மாக்கி, சதுரமான பட்டைக்கற்களைப் பதித்து, நடைப்பயிற்சிக்குரிய பாதையாக மாற்றிவிட்டார்கள். அதற்குப் பிறகு நடைப் பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

ஒரு மாலையில் நான் நடந்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னே 20 அடி தொலைவில் சென்றுகொண்டிருந்த ஒருவரின் கைபேசியி லிருந்து ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ பாடல் ஒலிப்பதைக் கேட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாட்டின் சுவையில் லயித்தபடி அவருக்குப் பின்னாலேயே நடந்தேன்.

அலறல்... “ஐயோ தெய்வமே” என்று யாரோ அலறிய குரலைக் கேட்டு என் கற்பனை கலைந்தது. நடு வயதுப் பெண்மணி ஒருவர் பத்தடி தொலைவில் கீழே விழுந்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த பெரியவர்தான் அவருக்கு ஆறுதல் சொன்னபடி தூக்கி நிறுத்தினார்.

அப்போதுதான் நான் அந்தப் பெண்மணியைப் பார்த்தேன். அவர் முகம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அதிர்ந்தபடியே இருந்தது. அதற்கு எதிர்த்திசையில் உடல் வளைந்திருந்தது. அவருடைய உடல் தோற்றத்தில் ஏதோ ஓர் இசை வின்மையை நான் அக்கணத்தில் கண்டேன்.

“ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல. அந்தக் கல்லு தடுக்கிடுச்சிம்மா. அதோ பாரு. அந்தக் கல்லுதான். வேற ஒண்ணுமில்ல. பயப்பட வேணாம். புரியுதா?”

ஆறுதல் சொல்லிக்கொண்டே அந்தப் பெண்ணின் தோளைத் தட்டிக் கொடுத்தபடி இருந்தார் பெரியவர்.

திகைத்து நின்று ஒருகணம் அவர்களைக் கவனித்த அனைவரும், உடனடியாகப் பழைய நிலைக்குத் திரும்பி நடையைத் தொடர்ந்தனர்.

அக்காட்சியிலிருந்து அவ்வளவு விரைவாக என்னால் விலக முடியவில்லை. சிறிது தொலைவில் உருண்டோடி விழுந்திருந்த ஊன்று கோலை எடுத்துவந்து அந்தப் பெரியவரிடம் கொடுத்தேன். “தேங்க்ஸ்” என்றபடி அதை வாங்கி அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.

முகம் ஒரு திசையில் திரும்பி அசைந்தபடியே இருக்க, உடலை மட்டும் முன்னே செலுத்தி நடப்பதற்கு அந்தப் பெண் பட்ட பாட்டைப் பார்க்கச் சங்கடமாக இருந்தது..

நடக்க ஆரம்பித்த பிறகு, “இந்தப் பக்கம் புதுசா வந்திருக்கீங்களா?” என்று அந்தப் பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

பேசுவதற்காகக் காத்திருந்ததைப் போல அவர் உடனே சொல்லத் தொடங்கினார்: “ஆமாம் தம்பி. ஒரு வாரமாச்சி. சிக்ஸ்த் கிராஸ்ல செகண்ட் ஹேண்ட்ல ஒரு அப்பார்ட்மென்ட் கெடைச்சிது. நம்ம கையில இருக்கற பணத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு வீடு. எங்க ரெண்டு பேருக்கு அதுவே ரொம்ப அதிகம். நிம்ஹான்ஸ்லதான் ஒரு டாக்டரு இவள பார்க்கிறாரு. அவரு வீடு இந்தப் பக்கத்துல இருக்குது. அதனால இங்க வந்துட்டோம். ரெகுலரா வாக்கிங் போனாதான் நல்லதுன்னு அவரு சொல்லிட்டே இருந்தாரு. அதான் இங்க அழைச்சிட்டு வந்தேன்.”

அதிர்ச்சி: நாகரிகம் கருதி, கேட்க வேண்டாம் என்று நினைத்தாலும் வாய்வரைக்கும் வந்துவிட்ட கேள்வியை என்னால் விழுங்க முடியவில்லை. அந்தப் பெண்மணியைச் சுட்டிக்காட்டி, “சின்ன வயசிலிருந்தே இப்படித்தானா? இல்லை, புதுசா ஏற்பட்டதா?” என்று கேட்டேன்.

பெரியவர் ஒரு பெருமூச்சோடு தலையை அசைத்தார். “நல்லா நடமாடிட்டிருந்த புள்ளை தம்பி இவ. காலேஜ்ல லெக்ச்சரர் வேலை பார்த்திட்டிருந்தா. ஒரு கொலைகாரப்பாவி இப்படிப் பண்ணிப்புட்டான்” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.

அந்தப் பதிலை என்னால் சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. “கொலை காரனா?” என்று திகைப்போடு கேட்டேன்.

“ஒரு கொலைகாரன் தம்பி. வெட்டிட்டு ஓடிட்டான்.”

எனக்குச் சொல் எழவே இல்லை. உடலில் ஒருவிதக் குளிர் பரவியது. திகைப்புடன் அவர் முகத்தைப் பார்த்தேன்.

“எங்களுக்கு ஒரே பொண்ணு இவ. காலேஜ்ல வாத்தியாரா வேலை செய்யணும்னு சின்ன வயசுலேருந்து ஒரு கனவு. எல்லாப் புள்ளைங்களும் பி.இ., எம்.இ., முடிச்சிட்டு ஐ.டி. வேலைன்னு ஓடிட்டிருந்த சமயத்துல இவளுக்கு இப்படி ஒரு கிறுக்கு.”

“வாத்தியாரு வேலையும் நல்ல வேலைதான சார்?”

“நாங்களும் அப்படித்தான் நம்பி, அவளை அவ இஷ்டத்துக்கு விட்டுட்டோம். அவள் தகுதிக்கு அவ ஆசைப்பட்டபடியே வாத்தியாரு வேலை கெடைச்சிது. கல்யாணமே வேணாம்னு ஏழெட்டு வருஷம் அந்த காலேஜ்ல இருந்தா. அதுக்குள்ள நானும் ரிடையர்டு ஆயிட்டேன். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி அவள சம்மதிக்க வச்சி ஒரு கல்யாணத்த செஞ்சி வச்சோம்.”

“மாப்பிள்ளை யாரு? அவரும் வாத்தியாரா?”

“இல்லை தம்பி. தாசில்தாரு.”

“அதுவும் நல்ல வேலைதான சார்?”

“என்ன நல்ல வேலையோ போங்க. ஆத்து மணலைத் திருட்டுத்தனமா அள்ளறவனைப் புடிக்கப் போறேன்னு கெளம்பி, பல பேர புடிச்சி தண்டனை வாங்கிக் கொடுத்தாரு. கடைசியா யாரோ ஒரு அரசியல்வாதி இவருகிட்ட மாட்டிக்கிட்டான். மாப்பிள்ளையும் விடாக்கண்டன்னு அவனும் விடாக்கண்டனா போயிட்டான்.

ஒரு நாளு கூலிப்படை ஆளுங்கள வச்சி பட்டப்பகல்ல ஊடு பூந்து வெட்டிட்டானுங்க. நான் அப்ப வீட்டுல இல்லை. மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன்.

தடுக்கப் போன என் பொண்டாட்டி, இந்தப் பொண்ணு, இவ புள்ளை எல்லாரையும் வாழைக் கொலைய வெட்டற மாதிரி வெட்டிட்டுப் போயிட்டானுங்க. என்னமோ, இவ மட்டும் குத்துயிரும் குலையுயிருமா பொழச்சிகிட்டா. நாலு வருஷமா தேடிப் பார்த்துட்டு, யாருமே கெடைக்கலைன்னு போலீஸ்காரங்க கைவிரிச்சிட்டாங்க.”

அவர் சொன்ன தகவல்கள் எல்லாமே செய்தித்தாளில் படிக்கிற மாதிரி இருந்தது.

“பொழச்சி என்ன புண்ணியம், சொல்லுங்க? இப்படி நசுங்கிப் போன தகரப்பொட்டி மாதிரி கெடக்கறா. பேச்சு, சிந்தனை எல்லாமே அப்படியே நின்னு போயிடுச்சி. கம்ப்யூட்டர் ஹேங் ஆன மாதிரி ஆயிட்டா. நடன்னு சொன்னா நடப்பா. ஒக்காருன்னு சொன்னா ஒக்காருவா. அவ்ளோதான்.”

பிரார்த்தனை: நடைபாதையின் எல்லையில் ஜலகண்டேஸ் வரர் கோயிலையொட்டி வந்து நின்றோம். கோயிலுக்கும் நடைபாதைக்கும் நடுவில் இரும்புத்தண்டுகளாலான வேலி இருந்தது. அந்த இடைவெளி சந்நிதியைப் பார்க்கப் போதுமானதாக இருந்தது.

பெண்ணை நிற்கவைத்துவிட்டு அவர் மட்டும் கைகுவித்து ஒரு நிமிடம் கண்மூடி வணங்கிவிட்டுத் திரும்பினார். அவர் சொன்ன விவரங்கள் மனத்தில் மிகப்பெரிய பாரத்தை ஏற்றிவிட்டன. அவருக்கு ஆறுதல் கிடைக்கட்டும் எனப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.

“வருத்தப்படாதீங்க சார். எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. உங்க பொண்ணு சீக்கிரமாவே குணமாயிடுவாங்க.”

அவர் சோகம் படிந்த புன்னகையோடு என்னை ஒரு கணம் பார்த்தார். “நான் அதுக்காகப் பிரார்த்திக்கல தம்பி” என்றார். அதன் பொருளை என்னால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள இயலாமல் அவரைப் பார்த்தேன்.

“சீக்கிரமா அவளுக்கு ஒரு நல்ல ஓய்வைக் கொடுங்கறதுதான் என் பிரார்த்தனை. எனக்குப் பின்னால இவளை யாரு பார்த்துக்க முடியும்?”

ஒரு பெருமூச்சுடன் தன் மகளின் விரல்களைப் பிடித்து, நடக்கவைத்தபடி பெரியவர் சென்றார். நான் அப்படியே நின்றுவிட்டேன்.

(கிளிஞ்சல்களைச் சேகரிப்போம்)

- writerpaavannan2015@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in