நினைவோ ஒரு பறவை: திண்ணையில் யாரு?

நினைவோ ஒரு பறவை: திண்ணையில் யாரு?
Updated on
2 min read

அந்தக் காலத்தில் கிராமங்களில் சிறு சிறு குடிசை வீடுகள்தான் இருந்தன. குடிசையின் இரண்டு பக்கங்களிலும் மண்ணாலான பெரிய பெரிய திண்ணைகள் இருந்தன. தினமும் சாணி போட்டு மெழுகுவதால் அவை குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருக்கும்.

வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் உட்கார, தானியங்களைக் காயப்போட, இரவு சாப்பிடவும் தூங்கவுமாகத் தினமும் காடுகளில் உழைத்து வரும் விவசாயிகளுக்கும் ஆடு, மாடு மேய்த்துவிட்டு வருகிறவர்களுக்கும் இந்தத் திண்ணைகள் மிகவும் வசதியாக இருந்தன.

தென்னரசுவின் அம்மாவும் அய்யாவும் ரொம்பவும் வயதானவர்கள். நடக்கக்கூட முடியாதவர்கள் என்பதால் அவர்கள் திண்ணையில் வந்து படுப்பதில்லை. கையகல வீட்டுக்குள்ளேயே படுத்துக்கொள்வார்கள். அதனால், சாவித்திரி ஆடு மேய்த்துவிட்டு இரவு ஒரு சாமம் கழித்து வரும் புருசனுக்காக வீட்டினுள்ளே காத்திருப்பார். அவர் வந்ததும் சாப்பாடு கொண்டுவந்து வைத்துவிட்டு, சாப்பாடு முடிந்தபின் சாவித்ரி இன்னொரு திண்ணையில் படுத்துக்கொள்வார்.

அன்று அமாவாசைக்கு மறுநாள் இருட்டு. எங்கும் கருமை பூத்துக்கிடந்தது. ஆடு மேய்க்கப்போன தென்னரசு இன்னும் வரவில்லை. அதே ஊரில்தான் சோணாசலம் திருட வந்தான். திருட வந்தவனுக்கு வயிற்றுப்பசி தாங்க முடியவில்லை. ஊரே தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தபோது, யாரை எழுப்பிப் பசிக்குச் சோறு கேட்பது என்று தெரியவில்லை.

நடக்கக்கூட முடியாமல் அவனுக்கு மயக்கமாக வந்தது. அங்கிருந்த திண்ணை ஒன்றில் படுக்கலாம் என்று பார்த்தான். எல்லாத் திண்ணைகளிலும் ஆள்கள் படுத்திருந்தார்கள். தென்னரசு வீட்டுத் திண்ணைதான் சும்மா கிடந்தது. உடனே அதில் ஏறிப் படுத்துவிட்டான்.

நாலாவது தடவையாக வெளியே வந்த சாவித்திரி, தன் புருசன் வந்துவிட்டதையும் ஆனால் சாப்பிடாமல் திண்ணையில் படுத்துக் கிடப்பதையும் பார்த்தார். ‘பாவம் அலுத்துக் கிடக்கார் போலிருக்கு. அதான் சாப்பாட்டைக்கூடக் கேட்காம படுத்துட்டாரு’ என்று நினைத்தார். வீட்டுக்குள்ளே போயி கும்பா நிறைய சோறு வச்சி, குழம்பு ஊத்திக் கொண்டு வந்து, “இந்தாரும் சாப்பிடும். இன்னைக்கு என்ன ரொம்ப நேரம் கழிச்சி வந்திருக்கீக” என்று கேட்க, திருடன் சோணாசலம் எதுவுமே பேசவில்லை.

சோற்றை அள்ளி அள்ளிச் சாப்பிட்டவன், கும்பாவிலேயே கையைக் கழுவிவிட்டு மீண்டும் அப்படியே படுத்துவிட்டான். கும்பாவைக் கழுவி வீட்டுக்குள் வைத்த சாவித்திரி, மறுதிண்ணையில் படுத்துக்கொண்டார். அதோடு காலையில் மாமியாரிடமும் இந்த விஷயத்தைச் சொன்னார்.

மறுநாள் கெடையிலிருந்து வந்த தென்னரசு, இரவு நான் வீட்டுக்கு வரவே இல்லை என்று சொல்லவும் எல்லாரும் திடுக்கிட்டுப்போனார்கள். உடனே ஊரே சேர்ந்து சாவித்திரியிடம், “பொறவு நீ யாருக்குச் சோறு வச்ச, சோறு மட்டுந்தேன் வச்சியா, இல்ல வேற ஏதாவது நடந்ததா?” என்று கேட்டு அடித்து, அவமானப்படுத்தினார்கள். அவர், தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்று அழுதார். ஆனாலும் அவர் மாமியார், புருசனிலிருந்து யாரும் அவர் பேச்சைக் கேட்கவில்லை.

ஊர்க்கூட்டம் போடப்பட்டது ‘இன்னொருத்தன்கூட இருந்தவளை ஊரைவிட்டுத் தள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவள் கணவன் - மனைவி உறவை அத்துவிட்டு, அவள் அப்பன் வீட்டுக்கு முடுக்கிவிடவேண்டும்’ என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட, சாவித்திரி ஓவென்று அழுதார். சோறு வைத்தது தவிர, தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அழுது மன்றாடினார்.

யாரும் கேட்பதாக இல்லை; அவரை முடுக்குவதிலேயே குறியாக இருந்தார்கள். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சோணாசலம் விறுவிறுவென்று கூட்டத்திற் குள்ளே வந்தான். தான் ஒரு களவாணி என்றும் அன்று களவாட வந்ததாகவும் திண்ணையில் ஏறிப் படுத்து உறங்கிவிட்டதாகவும், அதன் பிறகு சாவித்திரி சோறு கொண்டுவந்து வைத்ததைப் பசி பொறுக்க முடியாமல் சாப்பிட்டு, தூங்கிவிட்டு வெள்ளனத்திலேயே எழுந்து போய்விட்டதாகவும் சொன்னான்.

அதோடு ‘தன் மீதுதான் தப்பு, அதற்குத் தண்டனையாக என்னை மரத்தில் கட்டிவைத்து அடியுங்கள்’ என்றும் அந்தப் பெண்ணுக்கு எந்தத் தண்டனையையும் தர வேண்டாமென்றும் சொல்ல, ஊர் திகைத்து நின்றது!

- arunskr@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in