மலைகளை காப்போம்: எழிலைத் தேடும் ஏற்காடு

மலைகளை காப்போம்: எழிலைத் தேடும் ஏற்காடு
Updated on
2 min read

அண்மையில் ஏற்காட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்தேன். ‘ஏழைகளின் ஊட்டி’ என்று சொல்லப்படும் ஏற்காட்டில் குளிர்ச்சியாக இருக்கும் என்று நம்பிச் சென்ற எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

கோடைக்காலம் என்பதால் அங்கேயும் வறட்சி. மரங்கள், செடி கொடிகள் எல்லாமே நீர்ப் பற்றாக்குறையால் பச்சையம் இழந்து நின்றன. ஏற்காட்டு ஏரியில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் இருந்ததால், படகுச் சவாரி செல்ல முடிந்தது. பகல் முழுவதும் வெப்பமாகவே இருந்தது. மாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரை கொஞ்சம் குளிர்ச்சியை உணர முடிந்தது.

தண்ணீர்ப் பற்றாக்குறையால் பல தங்கும் விடுதிகளைப் பூட்டியே வைத்திருந்தனர். சுற்றுலா வருபவர்களுக்கு இது சிரமமாக இருந்தது. காலையில் வந்து மாலையில் கீழே இறங்கிவிட வேண்டும் என்கிற நிலையிலேயே பெரும்பாலானவர்கள் வந்து செல்வதையும் பார்க்க முடிந்தது.

கோடைக்காலத்தில் எப்போதுமே இப்படித்தான் இங்கே தண்ணீர்ப் பற்றாக்குறையும் குளிர்ச்சியற்ற நிலையும் இருக்குமா என்று உள்ளூர்வாசி ஒருவரிடம் விசாரித்தேன்.

“கடந்த பத்து வருடங்களாகத்தான் இவ்வளவு மோசமாக இருக்கிறது. அதற்கு முன்பு கோடை என்றாலும் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும். இங்கே மரங்களை அதிகமாக வெட்டி, காடு களை அழிப்பதால்தான் நிலைமை மோசமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு கனிம வளங்களுக்காக இங்குள்ள மலைகளை வெட்டி எடுத்து வண்டி வண்டியாகக் கொண்டு சென்றார்கள்.

இயற்கை ஆர்வலர்களும் மக்களும் தொடர்ந்து போராடியதால் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்துவிட்டது. இப்போது யாரும் மலையை வெட்டுவது இல்லை. ஆனால், மரங்களை வெட்டுவதை நிறுத்தவில்லை.

குறைந்த அனுமதியைப் பெற்றுக் கொண்டு, ஏக்கர் கணக்கில் மரங்களை வெட்டிக் கீழே கொண்டு போய் விற்பனை செய்கிறார்கள். இங்கே விடுதிகள், பங்களாக்கள் கட்டுவதற்காகவும் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இயற்கை மீது யாருக்கும் அக்கறை இல்லை” என்று அவர் ஆதங்கப்பட்டது நியாயமாக இருந்தது.

நாம் காடுகளை உருவாக்குவதற்காகப் பல முயற்சிகளை எடுத்துவருகிறோம். ஆனால், இயற்கை நமக்குக் கொடையாகக் கொடுத்த மலைப் பிரதேசங்களை ஏன் சிதைக்கிறோம்?

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பல விளைவுகளைச் சந்தித்துவந்தாலும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வு நம்மிடம் குறைவாகவே இருக்கிறது.

சமீபத்தில் காட்டுப் பகுதிக்குச் சுற்றுலா சென்றவர் களை ஒரு யானை கோபத்துடன் துரத்துவது போன்ற காணொலியைக் கண்டேன். ‘என் இடத்தை நீ வந்து ஏன் சிதைக்கிறாய்’ என்று யானைக்கு மனிதர்கள் மீது ஏற்பட்ட கோபமாகக்கூட இருக்கலாம்.

குளிர்ச்சிக்காகவே மலைப் பகுதியை மக்கள் நாடிவருகிறார்கள். மரங்களை வெட்டிவிட்டு, விடுதிகளைக் கட்டிக்கொண்டு, குளிர்ச்சி இல்லை என்றால் அந்த விடுதிகளால்தான் என்ன பயன்?

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in