

புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் செல்லும் ரயிலுக்காக வளவனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். வழக்கமான வருகைநேரம் கடந்து கூடுதலாக அரைமணி நேரம் ஓடிவிட்டது. ஆனாலும் ரயில் வரவில்லை. ரயில் வருவதற்கு முன்பு மழை வந்துவிடுமோ என அச்சமாக இருந்தது. அந்த அளவுக்கு வானம் இருண்டிருந்தது.
ஆறேழு கல்லூரி மாணவர்கள், வெள்ளைத்துணியால் முக்காடு போட்டிருந்த இரண்டு இஸ்லாமியக் குடும்பங்கள், கூடை வியாபாரிகள், நிறைமாதக் கர்ப்பிணி ஒருவர், மணமக்களை அழைத்துச்செல்லும் உறவினர் கூட்டம், பிச்சைக்காரர்கள் எனப் பலரும் என்னைப் போலவே வெவ்வேறு இடங்களில் காத்திருந்தார்கள்.
நாங்கள் ஆறேழு பேர் ஒன்றாகப் பயணச்சீட்டு கொடுப்பவரிடம் சென்றோம். சுவரில் மாட்டப் பட்டிருந்த நடராஜர் படத்தின் மீது வாடியிருந்த பூச்சரத்தை எடுத்துவிட்டு, புதிய சரத்தைச் செருகிக்கொண்டிருந்தார் அவர். ஒருகணம் இடதுபாதம் தூக்கி நடனமிடும் நடராஜரின் பாதத்தைத் தொட்டுக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டபடி, எங்கள் பக்கமாகத் திரும்பினார்.
“ஏன் தம்பி, வண்டி கெளம்பிடுச்சா இல்லையான்னு கொஞ்சம் போன் பண்ணிக் கேட்டுச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டோம். அவர் மேசையின் மீது வைத்திருந்த கைபேசியைத் தொட்டு நேரம் பார்த்தார். “ஏற்கெனவே பேசிட்டேன் சார். இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துரும்” என்று சொன்னார். ‘த்ச்’ என்று நாக்குச் சப்புக்கொட்டியபடி நாங்கள் திரும்பிவந்தோம்.
எதிர்பாராத மழை: அதுவரை காற்றில் வீசிக்கொண்டிருந்த வெப்பம் திடீரெனக் குறைந்து, குளிர்ந்து வீசத் தொடங்கியது. வியர்வையில் நனைந்திருந்த உடலுக்கு அந்தக் காற்று இதமாக இருந்தது. அதை முழுமையாக உணரும் முன்பே சடசடவென மழை தொடங்கிவிட்டது.
தொடங்கும்போதே மத்தளத்தைப் போல ஒரு வேகம். சரம்சரமாக மழைத்தாரைகள் தரையில் விழுந்து பரவி பூமியை நனைத்தன.
அதுவரை ஆங்கங்கே திட்டுத்திட்டாக நின்றிருந்தவர்கள் அனைவரும் ஓட்டமாக ஓடிவந்து, பயணச்சீட்டுக் கொடுப்பவர் அமர்ந்திருந்த அறைக்குள்ளேயே புகுந்து ஒண்டிக்கொண்டனர். அங்கே இடம் கிடைக்காதவர்கள் அந்த அறையை ஒட்டியிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே ஒதுங்கி நின்றனர்.
எல்லாருக்கும் கடைசி யாகத் துணிபோட்டு மூடிக் கட்டிய இரண்டு கூடைக ளோடு ஒரு கணவனும் மனைவியும் வந்து நின்றார்கள். அவர்கள் முழங்காலோடு ஒட்டியபடி பின்னாலேயே மூன்று சிறுவர்கள் வந்தார்கள். அவர்களைப் பார்த்தபோது ஏதோ ஊருக்குக் குடியேறச் செல்வதுபோல இருந்தது.
நனையும் நாய்க்குட்டி: ஐந்து நிமிடங்களில் மழையின் ராகம் மாறிவிட்டது. மழைத்தாரைகள் தரையில் மோதும் வேகம் மத்தளத்தை அடிப்பதுபோல இருந்தது. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.
அனைவரும் அமைதியாக மழையையே பார்த்தபடி இருந்தனர். அந்த நேரத்தில் சாலையிலிருந்து ரயில்நிலையத்தை நோக்கி ஒரு நாய்க்குட்டி ஓட்டமாக ஓடிவந்தது. நடைமேடைக்கு அருகில் சென்று வேடிக்கை பார்த்தது.
காதுகளை அசைத்தபடி தலையை வளைத்து ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குள் ஒதுங்கி நின்றவர்களை வேடிக்கை பார்த்தது. ஒரு கணம் உடலைச் சிலிர்த்தது. அதன் முதுகின்மீது படிந்திருந்த மழைநீர் முத்துகளாக எங்கெங்கும் சிதறின.
மழையின் வேகம் பெருகப் பெருக தடுப்புக்குள் சாரல் அடித்தது. முழங்காலுக்குக் கீழே அனைவருடைய ஆடைகளும் நனைந்தன. எல்லாருடைய முகத்திலும் பதற்றமும் எரிச்சலும் சலிப்பும் தாண்டவமாடின. மூன்று சிறுவர்கள் மட்டும் அந்தச் சூழலுக்கே தொடர்பில்லாதவர்களைப் போல ஒருவருக்கு இன்னொருவர் எதையோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட பிறகுதான் அவர்களை நான் கவனிக்கத் தொடங்கினேன். அவர்கள் தமக்குள் ஏதோ ஒரு விளையாட்டு விளையாடினார்கள். ஒருவன் தன் இரண்டு கைகளையும் கால்சட்டையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள பைகளுக்குள் விட்டு, கண நேரத்துக்குப் பிறகு மூடிய நிலையில் வெளியே எடுத்து முன்னால் நிற்பவனிடம் நீட்டினான்.
இரண்டு கைகளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அவன் உத்தேசமாக ஒரு கையைத் தொட்டான். அவன் சிரித்துக்கொண்டே அந்தக் கையைப் பிரித்தான். அதற்குள் ஒன்றுமில்லை. இன்னொரு கையைப் பிரித்துக் காட்டினான். அதில் ஒரு புளியங்கொட்டை இருந்தது.
ஆட்டமும் பாட்டமும்: அவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தபடி அமைதியாக நின்றிருந்த மூன்றாவது சிறுவன் சட்டென வெளியே ஓடி, நாய்க்குட்டிக்கு அருகில் நின்றுகொண்டு சிரித்தான். மற்ற இரண்டு பேரையும் பார்த்து உடலை வளைத்து வளைத்து ஆடினான். ஒரே நிமிடத்தில் அவன் தொப்பலாக நனைந்துவிட்டான். அதைப் பற்றிய கவலையே இல்லாமல் நாயைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடினான் அவன்.
அவன் முகத்தில் படிந்திருந்த மகிழ்ச்சியைப் பார்த்து எனக்கும் ஓட்டமாக ஓடி அவனோடு சேர்ந்து நின்றுகொள்ள வேண்டும்போல உடல் பரபரத்தது. ஆனாலும் நாகரிகம் கருதி அமைதியாக இருந்தேன்.
ஆனால், ஒதுங்கி நின்றிருந்த சிறுவர்கள் வேகமாக ஓடி அவனோடு சேர்ந்துகொண்டனர். ஒருவன் அந்த நாய்க்குட்டியைத் தூக்கித் தலைமீது வைத்துக்கொண்டு ஆடினான். அவர்களுடைய பெற்றோர் அந்த நடனத்தைப் பார்த்துச் சிரித்தபடி அமைதியாக இருந்தனர்.
‘நாய்க்குட்டி நாய்க்குட்டி சேட்டை பண்ணாதே
நாக்குப்பூச்சி ரயிலுவருது மாட்டிக்கிடாத
நாய்க்குட்டி நாய்க்குட்டி சேட்டை பண்ணாதே
நார்த்தங்கா மரத்துமேல மோதிக்கிடாத…’
தாமாகவே பாட்டுக்கட்டிக் குதித்தார்கள் சிறுவர்கள். தலை மீது வைத்திருந்த நாய்க் குட்டியைக் கீழே இறக்கி நிற்கவைத்தபோது, இன்னொருவனுடைய கால் இடைவெளி வழியாக நாய்க்குட்டி தப்பி ஓடியது. குதிக்கும் தோறும் காலடியிலிருந்து தண்ணீர் தெறித்துப் பறப்பதைப் பார்க்கச் சிறுவர்களுக்கு ஆனந்த மாக இருந்தது.
ஏற்கெனவே சற்றுத் தாழ்வாக இருந்த பகுதியொன்றில் தண்ணீர் நிறைந்து வழிந்தது. குட்டைபோல இருந்த அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடினார்கள்.
‘சின்ன சின்ன குட்டை, குட்டைக்குள்ள தண்ணி, தண்ணிக்குள்ள கப்பல், கப்பலுக்குள்ள ஆளு, ஆளு பேரு தொரை, அவன் விட்டான் பார் ஒரு அறை.’
அவர்கள் ஆடியதெல்லாம் நடனமானது; பாடியதெல்லாம் பாட்டாக மாறியது!
“ஐஸ் ஐஸ் ஐஸ் அஞ்சு ரூபா ஐஸ்” என்றான் ஒருவன். அடுத்தவன் உடனே, “ஜூஸ் ஜூஸ் ஜூஸ் ஆப்பிள் பழ ஜூஸ்” என்றான். மூன்றாவது சிறுவன் கையை உயர்த்தி “லூஸ் லூஸ் லூஸ் நீ சரியான லூஸ்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.
ரயிலின் வருகை: நீண்ட நேரமாக எல்லாரும் எதிர்பார்த்திருந்த ரயில் ஸ்டேஷனுக்கு வந்துநின்றது. ஒதுங்கி நின்ற இடத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்து நனைந்துகொண்டே பெட்டிக்குள் ஏறினர். கைக்குட்டையை விரித்துத் தலைமீது போட்டுக்கொண்டு ஒரு பெட்டிக்குள் நானும் ஏறினேன். சிறுவர்களின் பெற்றோர் மூட்டைகளைச் சுமந்துகொண்டுவந்து, நான் நின்றிருந்த பெட்டிக்குள் ஏறினர்.
அந்தச் சிறுவர்களும் உள்ளே வந்து நின்றார்கள். வேடிக்கை பார்த்தபடியே சட்டையைக் கழற்றிப் பிழிந்து உதறினார்கள். அதே துணியால் தலையைத் துவட்டிக்கொண்டு மீண்டும் அணிந்துகொண்டனர். அவர்கள் கைகளும் கால்களும் இன்னும் நடன அசைவிலேயே இருந்தன. ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கிண்டலோடு, ‘லூஸ் லூஸ் லூஸ் நீ சரியான லூஸ்” என்று பாட்டுப் பாடிச் சிரித்தார்கள்.
(கிளிஞ்சல்களைச் சேமிப்போம்)
| பாவண்ணன் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று பல தளங்களில் இயங்கிவருபவர். இயல் விருது, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, சிறந்த நாவலுக்கான இலக்கியச் சிந்தனை விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். - writerpaavannan2015@gmail.com |