

ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்று சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்க்காத மலைவாசஸ்தலம் மேக மலை. தேனியிலிருந்து காலையிலும் மாலையிலும் ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே மேகமலைக்குச் சென்று வருகின்றன. அதனால், நாங்கள் ஒரு வேனில் மேகமலைக்குக் கிளம்பினோம். வழியில் உள்ள கிராமங்களில் திராட்சைத் தோட்டங்களைப் பார்த்துக்கொண்டே சின்னமனூரை அடைந்தோம். அங்கிருந்து மலைப்பயணம் ஆரம்பித்தது.
மலையை நோக்கிச் செல்லச் செல்ல, காற்றில் குளுமையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. மேகமலை ஊருக்குச் சில கி.மீ.களுக்கு முன்பு ஒரு தனியார் விடுதியில் நுழைந்தோம். அந்த விடுதி மலையின் பக்கவாட்டில் அமைந்திருந்ததால், சில்லென்ற அடர்த்தியான காற்று நம் மீது மோதிக் கொண்டே இருந்தது. மலையின் ஓரத்தில் நின்றால், அதலபாதாளத்தில் விழுந்துவிட வேண்டியதுதான்.
சூரிய வெளிச்சத்தில் நம் தலையில் இடிக்குமோ என்கிற அளவுக்கு வெண்மேகக் கூட்டங்கள் திரண்டிருந்தன. ‘மேக’மலை என்று எவ்வளவு பொருத்தமான பெயர்!
ஜெனரேட்டர் மின்சாரம் என்பதால், மின்விளக்கு களை அவசியம் கருதி உபயோகித்துக்கொள்ளச் சொன்னார்கள். வெளியில் இருந்த அளவுக்கு அறைக்குள் குளிர் நடுக்கவில்லை. உயரமான கண்ணாடி ஜன்னல் வழியே மலையின் அழகு வசீகரித்தது. காற்று, தூறல், மழை, மென் வெயில் எனக் காட்சிகள் மாறிக்கொண்டே இருந்தன. குரங்குகள் சில ஜன்னலருகே வந்து, ஹலோ சொல்லிவிட்டுச் சென்றன.
குளிருக்கு இதமாகச் சூடான, சுவையான உணவு வகைகள் வழங்கப்பட்டன. மாலை ஆறு மணிக்கு மேல் ஊருக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதால், உடனே ஜீப்பில் புறப்பட்டோம் (வெளிவாகனங்கள் ஊருக்குள் அனுமதிக்கப் படுவதில்லை).
அமைதியான எழில்மிக்க ஏரி, வியூபாயின்ட், தேயிலைத் தோட்டம் போன்றவற்றைக் கண்டு களித்தோம். குடியிருப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன. மனித நடமாட்டம் மிக மிகக் குறைவாக இருந்தது. எங்கு நோக்கினாலும் தேயிலைத் தோட்டங்களே தென்பட்டன. பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் ஒன்றிரண்டு விடுதிகளும் உணவகமும் இருந்தன.
அருகிலிருந்த மளிகைக்கடையில் பொருள்களை வாங்கிக்கொண்டார் எங்கள் விடுதியின் பொறுப் பாளர். தங்கும் விடுதியை இருளில் அடைந்தோம். ஊருக்குள் இருந்த குளிரைவிட அறை இருந்த இடத்தில் குளிர் பல மடங்கு அதிகமாக இருந்தது. சூடான பஜ்ஜியும் தேநீரும் அந்தக் குளிருக்கு அமிர்தமாக இருந்தன.
குறைந்த வெளிச்சத்தில் டிவி, போன் இன்றி எல்லாரும் கலந்துரை யாடியது நிறைவாக இருந்தது. இரவு உணவுக்காகக் கீழே இறங்கினோம். காற்றும் சாரலும் குளிரும் பயமுறுத் தின. நடுங்கிக்கொண்டே உணவகத் துக்குள் சென்று சாப்பிட்டுவிட்டு அறைக்குத் திரும்பினோம். பகல், இரவு எனப் பாராமல், ஒரு நொடிகூட ஓய்வெடுக் காமல் காற்று வீசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
காலை ஏழு மணிக்கு மேல் சூடான தேநீரைக் குடித்துவிட்டு, விடுதியை ஒட்டியுள்ள பகுதியில் நடந்தோம். ஓரிடத்தில் வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. எதற்காக என்று கேட்டபோது, ‘இரவு சிறுத்தை போன்ற விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்.
தண்ணீர் இருந்தால் தொந்தரவு செய்யாமல் சென்றுவிடும்’ என்றதும் குளிரில் அல்லாமல் பயத்தில் உடல் நடுங்கிவிட்டது. அத்துடன் நடையை நிறுத்திவிட்டு அறைக்கு வந்துவிட்டோம். ‘பயப்படாதீங்க, அவரவர் வேலையை மட்டும் பார்த்தால், மனிதர்களால் விலங்குகளுக்கோ விலங்குகளால் நமக்கோ பிரச்னை இல்லை. பகலில் எதுவும் வராது’ என்றார்கள்.
ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டு, மேக மலையை விட்டு இறங்கினோம். குளிர்ச்சியையும் மலையின் அழகையும் அமைதியையும் அனுபவித்து விட்டு வருவதற்கு மேகமலை மிகச் சிறந்த இடம். மேகமலைக்குச் செல்பவர்கள் சீசனை விசாரித்து விட்டுச் சென்றால், ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.