

பேருந்துப் போக்குவரத்துப் பெரிதாக இல்லாத காலகட்டத்தில், பயணம் என்பதே பெரும்பாலும் பத்து, இருபது மைல் சுற்றளவுக்குள் ளேயே இருந்தது. பெண் கொடுப்பது, எடுப்பது எல்லாம் இந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் தான் பெரும்பாலும் இருக்கும். குலதெய்வம் கோயிலுக்குப் போவது, புனிதப் பயணம் செல்வது என்பதுகூடக் குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் முடிந்துவிடும்.
பெரும்பாலும் நடைப்பயணம்தான். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் புறப்பட்டால், காலை உணவுக்கோ மதிய உணவுக்கோ உறவினர் வீட்டுக்குச் சென்று சேர்ந்து விடுவார்கள். தோட்டம் வைத்திருக்கும் சிலரிடம் மட்டும் மாட்டுவண்டி இருக்கும். அவர்கள் மாட்டுவண்டியில் போவார்கள். குடும்பமாகச் சென்றால் பொருள்கள், குழந்தைகள், முதி யோரை மாட்டுவண்டியில் ஏற்றிவிட்டு, மீதிப் பேர் நடந்து போவார்கள்.
மிகவும் வசதியானவர்கள் மட்டும் வில்வண்டியில் செல்வார்கள்.
‘ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சலவெனச் சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே’
என இந்த வண்டிகளில் உள்ள காளைகளின் கழுத்து மணி ஓசை கேட்பதற்கு இனிமையாக இருக்கும்!
நான் சிறுமியாக இருந்தபோது அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்து களும் சொற்ப எண்ணிக்கையில் இயங் கின. பேருந்துப் பயணம் என்பதே மிக அரிதுதான். அப்போதைய பேருந்து களில் ஓட்டுநருக்குப் பின்னால் இருக்கும் இருக்கைகள், இப்போது உள்ளவை போலவே இருக்கும். அவற்றின் இடப்பக்கம் நீண்ட பெஞ்ச் போன்ற ஓர் இருக்கை இருக்கும். சில பேருந்துகளில் ஆடு, கோழி எல்லாம் ஏற்றுவார்கள்; சில பேருந்துகளில் ஏற்ற மாட்டார்கள். ஆனாலும் மக்கள் அவற்றைத் தெரியாமல் கொண்டு செல்வார்கள்.
ஒருமுறை விடியற்காலை நேரத்தில் சேவலை மறைத்து வைத்துக்கொண்டு பேருந்தில் சென்றோம். பேருந்துப் புறப்பட்டு அரைமணி நேரத்தில் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் தேநீர் அருந்துவதற்குப் பேருந்திலிருந்து கீழே இறங்கினர். அதுவரை தடதடவென்ற சத்தத்துடன் ஓடிக்கொண்டி ருந்த பேருந்து திடீரென நின்றதால் எங்கள் சேவல், ‘கொக்கரக்கோ’ எனக் கூவிவிட்டது.
ஈரத்துணியில் கோழியை மூடி வைத்தால் சத்தமிடாது என எங்கள் அப்பம்மா சொன்னதால், அவ்வாறு பாதுகாப்பாக மூடிதான் வைத்திருந்தோம். ஆனாலும் கூவிவிட்டதில் பயந்துவிட்டோம். அப்பம்மா, ‘நல்லவேளை நடத்துநர் கவனிக்கவில்லை’ என்று நிம்மதி யடைந்தார். அவர் கவனித்தும் பேசாமல் போயிருக்கலாம். எங்களை மாதிரி எத்தனை பேரை அவர் பார்த்திருப்பார்!
ரயில் பயணம் என்பதெல்லாம் மும்பை, சென்னை, டெல்லி போன்ற ஊர்களுக்குச் செல்பவர்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது. அப்போதெல் லாம் திருநெல்வேலிக்குத் தெற்கே, திருவனந்தபுரத்திற்கு வடக்கே ரயில் என்பதே கிடையாது. எழுபதுகளின் இறுதியில்தான் கன்னியாகுமரிக்கு ரயில் வந்தது. நாங்கள் அந்தக் கால கட்டத்தில் பள்ளி சுற்றுலாவாக கன்னியா குமரி ரயில் நிலையத்திற்குச் சென்று, பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலுக்கு டாட்டா காட்டியதுண்டு. அப்படித்தான் ரயில் அறிமுகமானது.
மும்பையில் வேலை செய்த எல்லாராலும் குடும்பத்தைத் தங்களுடன் வைத்திருக்க முடியாது. இடம், பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்களில் கொஞ்சம் வசதியானவர்களின் குடும்பம் மட்டும் கோடை விடுமுறைக்கு மும்பை செல்லும். திருநெல்வேலி சென்று ரயில் ஏறுவார்கள். ஊரிலிருந்து பேருந்து அல்லது காரில் திருநெல்வேலி செல்ல வேண்டும். காரில் செல்வது மிகவும் குறைவுதான்.
பேருந்தில் சரியாக ரயில் புறப்படும் நேரத்திற்குக் கொஞ்சம் முன்னால் போக முடியாது. ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ பேருந்துதான் செல்லும். அதனால், பேருந்தில் செல்பவர்கள் திருநெல்வேலி ஜங்ஷனில் இருக்கும் ஒரு கடையில் தங்கள் பெட்டிகளை வைத்துவிட்டு, தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, அந்தக் கடையில் பொருள்களும் வாங்கிவிட்டு வருவார்கள்.
பயணிகளுக்கெனவே தேவையான பொருள்களை அந்தக் கடைக்காரர் விற்பார். பொருள்களுடன் வாசிக்க வாரப் பத்திரிகைகள், காமிக்ஸ் புத்தகங்கள் போன்றவற்றையும் வைத்திருப்பார். பலரும் முன்பதிவு செய்யப்படாத (அந்தக் காலத்தில் அதற்கு ‘உடன் டிக்கெட்’ என்று பெயர்) பயணம்தான் செல்வார்கள்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் பணிபுரிந்தவர்கள் கப்பலில் சென்றிருக்கிறார்கள். மலேசியாவில் இருந்த வர்கள் எல்லாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார்கள்.
எண்பதுகளில் வளைகுடா நாடுகளுக்குப் பலரும் வேலைக்குச் செல்லத் தொடங்கி னார்கள். அவர்கள் விமானத்தில் செல்கிறார் கள் என்பதே பெரும் வியப்பாக இருந்தது. அவர்களில் சிலர் தவிர, அனைவரும் தனியாகத்தான் போவார்கள். குடும்பம் ஊரில் இருக்கும்.
அதே காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை செய்யச் சென்றவர்கள், தங்கள் குடும்பத்துடன் சென்றார்கள். அவர்களை வழியனுப்ப ஒரு கூட்டமே போகும். கட்டணம் செலுத்தினால், விமான நிலையத்தின் மேல் உள்ள மொட்டை மாடிக்குக் குடும்பத்தினர் செல்லலாம். விமானத்தில் ஏறும்வரை பார்த்துக் கையசைக்கலாம்.
அறிவியல் வளர்ச்சி இப்போது நம் பயணத்தை லகுவாக்கியிருக்கிறது. அன்றைக்கு ஆச்சரியமாக இருந்தது, இன்றைக்கு இயல்பாக மாறிவிட்டது.
- bhathilahar@gmail.com