

‘திண்ணைப் பேச்சு' வாசிப்பு அனுபவம் சுவாரசியமானது. வாசித்தவுடன் கட்டுரையாளரை அழைத்துத் தொடரும் அந்தப் பேச்சு இன்னும் சுவாரசியமானது. வகுப்புவாதத்துக்கு எதிராகக் கலைஞர் கருணாநிதியின் அணில் குஞ்சு குறித்த விவாதம் போல் பல அரிய செய்திகளை எடுத்துச் சொன்ன திண்ணைப் பேச்சில், ரோசா லக்ஸம்பர்க் போன்ற உலக ஆளுமைகளை அறிமுகப்படுத்திய பாங்கு சிலிர்க்க வைத்தது.
அன்றாடம் கடந்து போகும் வீதியில் எல்லார் கண்களுக்கும் படாத எண்ணற்ற காட்சிகள், ஒரு திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது கண்களில் படத்தானே செய்யும்! தஞ்சாவூர்க் கவியராயருக்கும் இந்து தமிழ் திசை நாளிதழுக்கும் பாராட்டுகள். - எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.
மெளனம், உறக்கம், வெயில், திண்ணை, ஆரம்பப் பள்ளி, பொம்மை, சைக்கிள், கையெழுத்து எனப் பல கட்டுரைகள் திண்ணைப் பேச்சில் எனக்கு மிகவும் பிடித்தவை. இது வெறும் திண்ணைப் பேச்சு அல்ல, தித்திப்புப் பேச்சு! - கே. ராதா, மன்னார்குடி.
வியாழன்தோறும் காலைப் பொழுதை அழகாக்கிய ‘வாழ்வு இனிது’ பக்கங்களில் தஞ்சாவூர்க் கவிராயருக்கு முக்கியப் பங்கு உண்டு. உறையூர் சுருட்டு, பானுமதி, கலைஞர், ரோசா லக்சம்பர்க் போன்ற கட்டுரைகள் என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்! - எம். பழனிச்சாமி, ஈரோடு.
திண்ணைப் பேச்சில் பல கட்டுரைகள் எனக்குப் பிடித்திருந்தாலும் சட்டென்று என் நினைவில் வருவது ‘சந்தித்த வேளையில்’ கட்டுரைதான். கவிராயரின் அஞ்சாத கேள்வி களுக்கு, பானுமதியின் அழகான பதில்கள் அருமையாக இருந்தன.
- மங்கையர்க்கரசி, திருச்சி.