அந்தக் காலத் தேர்தல்: தென்னைமரத்தில் ஒரு குத்து; ஏணியில் ஒரு குத்து

அந்தக் காலத் தேர்தல்: தென்னைமரத்தில் ஒரு குத்து; ஏணியில் ஒரு குத்து
Updated on
3 min read

திரைக்கலைஞர் வடிவேலுவின் தேர்தல் நகைச்சுவைகள் புகழ்பெற்றவை. அத்தகைய திரைப்பட நகைச்சுவைகளுக்குச் சற்றும் குறைந்தவையல்ல இயல்பு வாழ்க்கையில் நடைபெறும் நகைச்சுவை சம்பவங்கள். அப்படியான தேர்தல் கால அனுபவங்களில் சில...

தேர்தல் என்கிற வார்த்தையைக் கேள்விப் பட்டவுடன் சற்குணத்துக்குப் படபடப்பாக வந்தது. வீட்டில் யாரும் இல்லை என்பதால் விசாலாட்சி மகனைப் பார்க்கப் புறப்பட்டார்.

“என்ன சற்குணம், இந்த வேகாத வெயில்ல வர்றா?” என்று விசாரித்த விசாலாட்சி, ஜில் லென்று மோர் கொண்டுவந்து கொடுத்தார்.

“உன் மகன் இருக்கானா? கூப்பிடு.”

“என்ன சின்னம்மா” என்று கேட்டுக் கொண்டே வந்தார் விசாலாட்சியின் மகன் சரவணன்.

“ஏப்பா, எலெக்‌ஷன் வருதாம்ல? என் மகன் இருக்கிற கட்சி யாரோட கூட்டு வச்சிருக்கு?”

“என்ன சின்னம்மா, இதைக் கேட்கத்தான் இப்படி ஓடிவந்தீங்களா?”

“ஆமா, என் மகனுக்குத் தெரியாமல் பத்துப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வச்சேன். இந்த அரசியல் பொருத்தம் பார்க்காததுதான் நான் செஞ்ச குத்தம்.”

“என்ன சொல்றீங்க? இளஞ்செழியன் ரொம்ப நல்லவர் சின்னம்மா.”

“நல்லவன்தான்... அரசியல்னு வந்துட்டா பொண்டாட்டின்னுகூடப் பார்க்காமல் மல்லுக்கு நிக்கிறான். இவன் ஒரு கட்சியில் இருக்கான். என் மருமக ஒரு கட்சியில் இருக்கா. அவகிட்ட புருஷனுக்காகக் கட்சி மாறுன்னு எல்லாம் சொல்ல முடியுமாப்பா? அடிக்கடி ரெண்டு பேருக்கும் சண்டை வந்துருது. அதான் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“அதெல்லாம் சும்மா ஜாலிக்குச் சண்டை போட்டிருப்பாங்க சின்னம்மா. அண்ணன் அப்படிப்பட்ட ஆள் இல்ல.”

“நீதான் மெச்சிக்கணும்... பத்து வருசத் துக்கு முன்னால வந்த ஒரு எலெக்‌ஷன்ல என் மகன் கட்சியும் என் மருமக கட்சியும் தனித்தனியா போட்டி போட்டுச்சு... இவன் தன் கட்சிக் கூட்டணிக்குத்தான் பொண்டாட்டி ஓட்டுப் போடணும்னு சொன்னான். அந்தப் பிள்ளை சரி, சரின்னு சொல்லிட்டு அவங்க பரம்பரையா ஓட்டுப் போடுற கட்சிக்கு ஓட்டுப் போட்டுட்டு வந்துருச்சு. யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு இவன் கேட்க, அந்தப் புள்ளை உண்மையைச் சொல்ல, மூணு மாசம் அவகிட்ட பேசவே இல்ல...”

“அடக் கொடுமையே...”

“இவன்தான் இப்படி இருக்கான்னா, அந்தப் புள்ளையாவது உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம்ல? பொய் சொல்ல மாட்டேங்கிது... என்னத்தைச் சொல்ல?”

“கஷ்டம்தான். இப்போ ரெண்டு கட்சியும் ஒரே கூட்டணிதான் சின்னம்மா. சண்டை போட்டுக்க வாய்ப்பில்லை.”

“நிம்மதிப்பா... இல்லைன்னா வீடு ரெண்டு பட்டுரும்... நான் வர்றேன் விசாலாட்சி.”

“நீங்க எந்தக் கட்சி சின்னம்மா?” என்று சிரித்தார் சரவணன்.

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “நா எப்பவும் எனக்குப் பிடிச்ச அந்தக் கட்சிக்குத் தான் போடுவேன்... இவன் கேட்டா இவன் கட்சிக்குன்னு சொல்லிடுவேன்...” என்றார் சற்குணம்.

“நீங்க வெவரம்தான் சின்னம்மா...”

“எல்லாமே குடும்பத்துக்காகத்தான் செய்றேன். இது ஒண்ணையாவது என் இஷ்டத்துக்குப் போடறதுல என்ன தப்பு சொல்லு?” என்றபடி வேகமாக நடந்தார் சற்குணம்.

காய்கறி வாங்குவதற்காகக் கிளம்பிய கற்பகம், முந்தானையை இழுத்துத் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு நடந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஒரு மாதிரி பார்த்தார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார். திடீரென்று ஒரு புல்லட் சத்தம் கேட்டது. காக்கி உடையில் ஒருவர் புல்லட்டை ஓட்டிக்கொண்டு வருவது தெரிந்ததும் சட்டென்று லட்சுமி வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் கற்பகம்.

“என்ன கற்பகம், என்ன ஆச்சு?” என்று கேட்டார் திண்ணையில் அமர்ந்திருந்த லட்சுமி.

“ஒண்ணுமில்லக்கா... சும்மா...”

“ஏதோ பயந்துகிட்டு ஓடிவந்த மாதிரியிருக்கு... என்ன திடீர்னு முக்காடு?”

“வெயில் தாங்க முடியலக்கா...”

“ஏழு மணிக்கு அப்படி ஒண்ணும் வெயில் வரலையே... என்ன விஷயம் சொல்லு...”

“வீட்ல யாரும் இருக்காங்க ளாக்கா?”

“இல்ல...”

“யார் கிட்டேயும் சொல்லக் கூடாது. நாலு நாளைக்கு முன்னால நான் ஓட்டுப் போட்டுட்டு வந்தேன். என் மகன் யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு கேட்டான். நம்ம வனஜா புருஷன் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடச் சொன்னார்... அந்தப் புள்ளைய எனக்குப் பிடிக்கும். அதனால அதுல ஒரு குத்து குத்துனேன்.

அப்புறம்தான் கனகா அண்ணன் நினைவுக்கு வந்தாரு. அவருக்காக அந்தக் கட்சியில் ஒரு குத்துக் குத்தினேன்னு சொன்னேன். ரெண்டு சின்னத்துல குத்தினா, போலீஸ் புடிச்சிட்டுப் போயிரும்னு சொன்னான். அதுக்குப் பயந்துகிட்டுதான் அக்கா இப்படி முக்காடு போட்டுட்டு நடமாடுறேன்... இப்போ ஒரு போலீஸ் புல்லட்ல வர்றதைப் பார்த்ததும், என்னைத்தான் கைது பண்ண வர்றாங்களோன்னு பயந்து ஒதுங்குனேன்.”

“அடி கற்பகம், நீயும் அஞ்சாவது வரைக்கும் படிச்சவதானே... உன் மகன் சொன்னா நம்பிடுவீயா? நீ ரெண்டு சின்னத்துல குத்தினது யாருக்குத் தெரியும்?”

“அப்போ அவன் சொன்னானே...”

“விளையாட்டுக்குச் சொல்லிருப்பான்... அதைப் போய் நம்பிட்டுத் திரியறே... உன் ஓட்டு செல்லாது. இனிமே இப்படிப் பண்ணாதே” என்றார் லட்சுமி.

முக்காடை எடுத்துவிட்டு, கம்பீரமாக நடந்தார் கற்பகம்.

ராணியம்மாவை அவர் வீட்டுச் சூழல் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனால், அவருக்கு எழுதப் படிக்க ஆர்வம் அதிகம். வீட்டுப் பக்கத்தில் உள்ள பள்ளிக்குச் சென்று, ஜன்னல் வழியே பாடங்களைக் கவனித்து, மணலில் எழுதிப் பார்த்து, படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.

அவர் வேலை செய்த நிறுவனத்தில் சமையல் வேலைகளை முடித்துவிட்டு, செய்தித்தாளை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிடுவார். எழுத்துக்கூட்டிப் படித்து, அரசியலை அக்குவேறு ஆணிவேறாக விமர்சிப்பார். அவருடைய விமர்சனங்களை எல்லாம் பார்த்து, அவருக்கு அந்தக் கட்சி பிடிக்காது என்கிற முடிவுக்கு வந்திருந்தோம்.

அன்று தேர்தலில் ஓட்டுப் போட்டுவிட்டு, தன் பேரப் பிள்ளையுடன் வந்தார். யாரோ ஒருவர் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று ராணியம்மாவிடம் கேட்டர். அவர் ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிவிட்டு நடந்தார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “உங்களுக்குத்தான் அந்தக் கட்சியைப் பிடிக்காதே, அப்புறம் ஏன் ஓட்டுப் போட்டீங்க?” என்று அதே நபர் கேட்டார்.

“எனக்கு அந்தக் கட்சி பிடிக்காதுதான்... ஓட்டுப் போட வரிசையில் நின்னப்ப யோசிச்சேன். பேப்பர் படிச்சுப் பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டதால, மத்த கட்சிகளைவிட இந்தக் கட்சி ஜனங்களுக்கு நல்லது பண்ணிருக்குன்னு தோணுச்சு. அதான் குத்திட்டேன்” என்றார் ராணியம்மா.

“போன எலெக்‌ஷனுக்கு எல்லாம் எங்க ஆயா சின்னத்தைப் பார்த்துதான் குத்தும்... இந்தத் தடவைதான் கட்சியைப் பார்த்துக் குத்திருக்கு” என்றான் அவர் பேரன்.

“ஆமாண்டா, அப்போவெல்லாம் பேப்பர் படிக்க நேரமே இருக்காது... இங்கேதான் பேப்பரும் இருக்கு, நேரமும் இருக்கு” என்று சொல்லிவிட்டுச் சென்றார் ராணியம்மா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in