

மெளனமே கடவுளின் மொழி
மற்றவை மோசமான மொழிபெயர்ப்புகள் - ஜலாலுதீன் ரூமி
இருட்டென்பது குறைந்த வெளிச்சம் என்பார் பாரதி. அவ்வாறெனில் மெளனம் என்பதைச் சிற்றோசை என்று கூறலாம்தானே?
இருட்டை ஏற்க மறுக்கிறது பாரதியின் உள்ளம். மெளனம் என்பது ஓசையின் மிகமெல்லிய இழைகளால் பின்னப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட டெசிபலுக்கு மேலேயும் கீழேயும் உள்ள ஓசைகளை நம்மால் கேட்க முடியாது. மனிதர்கள், விலங்கு கள், பறவைகள் ஏன் எல்லா ஜீவராசி களும் ஓசைகளைக் கவனிக்கவும் உள் வாங்கவும் செய்கின்றன. எதிர்வினை ஆற்றுகின்றன.
தென்னை மரங்கள் காய்க்காமல் இருந்தால் அவற்றின் கீழே நின்று நான்கு பேர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தால் போதும், அவை குலைதள்ள ஆரம்பித்து விடும் என்று கிராமத்தில் சொல்வார்கள்.
தாவரங்கள் பார்ப்பதற்கு மெளன மாக இருப்பதுபோல் தோன்றினாலும், அவை உரையாடவே செய்கின்றன. உயிரோடு இருப்பவை எல்லாம் உரை யாடவே செய்யும். இது இயற்கையின் விதி.
கானகத்தின் மெளனத்தில் பிறந்து வளர்ந்த நம் மூதாதையர் மரங்களிடம் தாம் மெளனத்தைக் கற்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாக வார்த்தைகள் இன்றி வாழ்ந்தனர்.
பறவைகளையும் விலங்குகளையும் போல் ஒருவரை இன்னொருவர் உணர்ந்து வாழ்ந்த மனித இனத்துக்கு மொழி தேவைப்படாததாகவே இருந்தது.
அசாம் காடுகளில் வாழும் ஆதிவாசி களில் பல இனக்குழுக்களுக்கு இடையே பேச்சுமொழி மட்டுமே உள்ளது. இவ்வாறு எழுத்து/வரிவடிவம் இல்லாத பல மொழிகள் அங்கு பேசப்படுகின்றன.
எழுத்தறிவு பெற்ற ஆதிவாசிக் குழுவைச் சேர்ந்த ஓர் இளைஞன், மொழி அறிவு இல்லாத மற்றோர் ஆதிவாசியை ஏளனமாகப் பார்க்கிறான்.
பழைய எழுதப்பட்ட பிரதிகளை மிகக் கவனமாக ஒழுங்குபடுத்தி, பட்டுத் துணியில் சுற்றிக்கட்டி, பெட்டிக்குள் வைக்கிறான். அவை விலை மதிப்புடையவை என்கிறான்.
“உன்னுடைய யோசனைகளைக் கட்டி மடித்து வைப்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது?” என்று கேட்கிறான் படிக்காத மனிதன்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட காகிதங்கள் இவை. பல தலைமுறைகள் கைமாறி வந்தவை. இவற்றைப் பற்றி உனக்கு அக்கறை வராது. ஏனென்றால் எழுத்து என்றால் என்ன என்றே உனக்குத் தெரியாது. தெரிந்திருப்பதால்தான் நாங்கள் பலசாலிகளாகவும் யாராலும் வெல்ல முடியாதவர்களாகவும் இருக்கிறோம்” என்கிறான் அந்தப் படித்த மேதாவி.
“சொற்கள் இன்றி வாழ்வது நல்லது.’ உரக்கப் பேசினால் வார்த்தைகள் சக்தி அற்றுப் போகும். அமைதியாக வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பதுதான் நல்லது.எனக்கு வார்த்தைகள் அவசியமில்லை. என்னுடைய மூதாதையர்கள் மெளனமாகத்தான் இருந்தார்கள். பாறைகளையும் மரங்களையும் மட்டுமே நான் மூதாதையரிடமிருந்து பெற்றேன். எதையும் செய்வதற்கு வார்த்தைகளுக்குச் சக்தி இல்லை. செயல்தான் தேவை!”
மேற்கண்ட உரையாடல் அசாமைச் சேர்ந்த ‘மமாங்தய்’ ஆங்கிலத்தில் எழுதிய கருங்குன்றம் (Black Hill) என்கிற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூலின் தமிழாக்கத்துக்கு கண்ணையன் தட்சிணாமூர்த்தி 2023க்கான சாகித்ய அகதெமி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மெளன விரதம் இருப்பவர்கள் மனதளவில் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். மனதின் பேச்சு ஓய்வதே இல்லை என்று ஒருமுறை இறையன்பு தனது உரையில் குறிப்பிட்டார். மனதில் உறங்கும் மெளனத்தை வார்த்தைகள் விழுங்கிவிடுகின்றன!
பால் பிரண்டன் - ரமணர் சந்திப்பு: பால் பிரண்டன் என்கிற மேலைநாட்டு எழுத்தாளர் தத்துவ விசாரத்தில் மூழ்கி, தமது விடைதெரியாத கேள்விகளுக்கு விடைதேடி உலகம் முழுவதும் சுற்றி அலைந்து, பல தத்துவ ஞானிகளைச் சந்தித்தார். அவர் கேள்விகளுக்கு விடை கிடைக்கவே இல்லை. ரமணரிடம் வந்தார்.
மெளனக் கம்பளத்தில் ரமணர் வீற்றிருந்தார். அங்கே யாருமே பேசவில்லை. நேரம் போய்க்கொண்டே இருந்தது. ஒரே ஒரு கணம் ரமணரின் பார்வை பால் பிரண்டன் மீது பட்டு விலகியது. அவ்வளவுதான், தாம் கேட்க விரும்பிய கேள்விகளைக் கேட்காமல் நாடு திரும்பிவிட்டார் பால் பிரண்டன். அவற்றைக் கேட்பதற்கான தேவை எழவில்லை அவ்வளவுதான்!
மெளனியின் மெளனம்: Reading in between lines என்று ஆங்கிலத்தில் ஒரு கருத்து உண்டு. வாக்கியங்களுக்கு இடையில் உள்ளதைப் படிப்பது. அங்கே வெற்றிட மல்லவா இருக்கிறது! ‘சொல்லப்பட்ட வார்த்தைகளில் அல்ல, சொல்லப்படாத வார்த்தைகளில்தாம் சத்தியத்தை நீ தேடவேண்டும்’ என்பார் க.நா.சு.
மெளனத்தையே புனைபெயராகச் சூட்டிக்கொண்டு பதினாறு கதைகளை மட்டுமே எழுதி, இலக்கிய உலகில் பெரும் சலசலப்பை உண்டாக்கிய எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவர் மெளனி. அவருக்கு அந்தப் பெயரைச் சூட்டியவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா.
மெளனி எழுதிய இந்த ஒரு வரியையப் பாருங்கள்.
‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’
எண்ணத்தையும் (மெளனமான) வார்த்தையையும் (ஓசையையும்) இணைக்கும் அற்புதம் இந்த வரி என்று லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் என்கிற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
‘வாயினால் பேசா மெளனத்தை வைத்திருந்தும்
தாய் இலார் போல் நான் தளர்ந்தேன் பராபரமே’ என்றும்
‘சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணம் என்று எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே’ என்றும் பாடுகிறார் தாயுமானவர்.
சும்மா இருக்கும் சுகம் அரிதுகாண் என்கிற சித்தர் வாக்கில் சும்மா என்பது வாக்குமனம் ஒன்றுபட்ட வார்த்தையே என்பது புலனாகும்.
மெளனம் பலவிதம்: வகுப்பறை மெளனம், யாருமில்லா வீட்டின் மெளனம், மதிய வேளை தெருவில் நிலைகொண்டிருக்கும் மெளனம், அரைக்கண் மூடி படிக்கட்டில் அமர்ந்திருக்கும் பூனையின் மெளனம், கல்லறைத் தோட்டங்களில் நிலவும் மெளனம், மருத்துவமனைகளின் மெளனம், எழுதப்படாத காகிதத்தின் மெளனம் (எழுதியதும்தான் அது பேச ஆரம்பித்துவிடுகிறதே!) நூலகத்தின் மெளனம், கானகத்தின் மெளனம், ஒளிப் படங்களின் மெளனம், புத்தர் சிலை மெளனம் - இப்படி மெளனங்களைத் தேடி கண்டடைவது ஆனந்தம்.
திண்ணையில் இப்போது மெளனம் நிலவுகிறது. பேச்சு புரிந்ததுபோல் மெளனமும் புரிதல் வேண்டும்.
மெளனத்தின் பேச்சு புரியவில்லை என்றால் என் நாவின் பேச்சால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்று கேட்டார் மெஹர்பாபா. தன் வாழ்நாளில் 42 ஆண்டுகள் பேச்சற்று மெளனமாகச் சைகை மொழி பேசிச் சிரித்தவர், இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மிக குருவான மெஹர்பாபா.
மெளனம் பேசுகிறது.
வார்த்தைகளை வாசிப்பது ஓர் அனுபவம் எனில், வார்த்தைகள் அற்ற மெளனத்தையும் வாசிப்பது இன்னோர் அனுபவம்.
மெளனம் பேசட்டும்!
(பேச்சு நிறைந்தது)
- thanjavurkavirayar@gmail.com