இது புதுசு: சமூக ஊடகப் பிரபலங்கள்தாம் சிறப்பு விருந்தினர்களா?

இது புதுசு: சமூக ஊடகப் பிரபலங்கள்தாம் சிறப்பு விருந்தினர்களா?
Updated on
3 min read

சமூக ஊடகங்களில் 30 நொடிகளுக்கு முகங்களைக் காண்பித்து, பொழுது போக்கான விஷயங்களைச் செய் தாலே அவர்களை நிகழ்ச்சிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்து விடுகிறார்கள். சிறப்பு விருந்தினருக்கு என்று சில தகுதிகளை வைத்திருந்த சமூகத்தின் நம்பிக்கை உடைகிறது.

தாங்கள் செல்லப் போகும் இடத்திற்கும் அல்லது துறைக்கும் சம்பந்தமில்லாத நபர்களைச் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது ஏன்? அதற்கான காரணங்களை ஆய்வாளர்கள் உளவியல் ரீதியாக ஆய்வு செய்துள்ளனர்.

1981இல் தியோடர் லெவிட் எழுதிய Globalization of Markets என்கிற புத்தகத்தின் சாராம்சத்தை வைத்துத்தான், உலகமயமாக்கும் சந்தை என்கிற கருத்து உருவானது. மனிதர்கள் வாழும் நிலப்பரப்பையும் பிற சமூகத்துக்கிடையேயான உறவையும் வளர்த்தெடுக்க இந்தப் புத்தகம் பொருளாதார நிபுணர்களின் பார்வையை இன்னும் விரிவுபடுத்தியது.

அதற்குப் பிறகே இந்தியாவும் உலகமயமாக்கலுக்குள் நுழைய வேண்டும் என்கிற மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில்தான் Dotcom, Yahoo, Google போன்றவை நமக்கு அறிமுகமாகின.

வழிநடத்தும் தொழில்நுட்பம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங் வளர்ச்சி யின் அதீத வேகம் எதுவென்றால், முதலில் புவியியல் சார்ந்த கட்டமைப்புகளை உடைத்து, அனைத்து இடங்களிலும் பொருள்களையும் மனிதர் களையும் காலூன்ற வைப்பதுதான். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் அடிப் படை Search Engine Optimization. இது, மனிதர்களைத் தனி நபராகவும் குழுவாகவும் நிறுவனமாகவும் பிரிக்கிறது.

தனிநபருக்குச் சர்க்கரை வேண்டுமென்று கிளிக் செய்தால், சர்க்கரை பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொடுத்துவிடும். குழுவாகச் சேர்ந்து மலையேற்றம் செய்ய வேண்டுமென்று தேடினால், எந்தெந்த இணையதளங்களைப் பார்க்க வேண்டுமென்று காட்டும். அதன் மூலம் மதுரையில் இருந்து குற்றாலம் போகலாம் என்று முடிவெடுத்தவர்கள், டெல்லிக்குக்கூடச் செல்வார்கள்.

அந்த அளவிற்கு ஒரு குழுவைப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், பண்பாட்டு வளர்ச்சி சார்ந்து வளர்த்தெடுக்க இந்த மார்க்கெட்டிங் உதவுகிறது. அடுத்தபடியாக நிறுவனங்கள், வசதி படைத்தவர்களின் மூலம் ஸ்டார்ட்அப் தொழில்களை ஆரம்பிக்க வைத்து, இன்னும் பல இடங்களுக்கு பிராண்டை எடுத்துச்செல்ல முடியும் என்று நிரூபிக்கவும் செய்வார்கள்.

இப்படி டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இவை எல்லாவற்றையும் வைத்து, மனிதர்களைப் பல வகையாகப் பிரித்திருக்கிறார்கள் என்றால், மற்றொருபுறம் மனித உணர்வுகளையும் பல வகையாகப் பிரித்துச் செயல்படுத்துகிறார்கள். இன்றைக்கு மனிதர்களுக்குத் தேவையான உடற்பயிற்சிகள், உணவு வகைகள், நற்சிந்தனைகள், சமூகநீதி, பொழுதுபோக்கு போன்றவற்றை அடிப்படையாக வைத்து யாரெல்லாம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயல்படுகிறார்களோ அவர்கள்தாம் பிரபலங் கள் என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.

சமூக ஊடகத்தின் தாக்கம்: ஒருவர் பிரபலமாக நீடிக்க வேண்டுமென்றால் அவரது திறமை, குடும்பத்தின் மீதுள்ள ஈடுபாடு, ஆன்மிக ஈடுபாடு உள்ளிட்ட பலவும் அவர்களிடம் தொடர்ந்து சீராக இருக்க வேண்டும். இதில் எந்தவொரு செயலாவது பிசகினால் ஒட்டுமொத்த சமூக ஊடகங்களும் அவர்களை விமர்சித்துவிடும். ஏனென்றால் இந்தச் சமூக ஊடக அல்கரிதம் பிரபலங்களின் செயல்பாடுகளை நான்கு விதமாகப் பிரித்து வைத்துக் கையாள்கிறது. அந்த விதத்தில்தான் பிரபலங்கள் மீதான நம்பிக்கையைச் சமூக ஊடகம் மக்களிடம் பிரதிபலிக்கிறது.

1. பிரபலமாக இருப்பவர்கள் புதிய தகவல்களைக் கொடுப்பவராகவும் சமூக விஷயங்களுக்கு உடனடி கருத்துகளைத் தெரிவிப்பவராகவும் இருப்பார்கள்.

2. எந்தவொரு செய்தியாக இருந் தாலும் அவற்றைப் பற்றிய துல்லியமான தகவல்கள் மற்றும் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் செய்யும் செயல்பாடுகள் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து தரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

3. தரமான, சிறந்த விலையில் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தொடர்ந்து விற்றுக் கொண்டிருப் பார்கள். அல்லது பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.

4. பொருள்கள், நிறுவனங்கள், இயக்கங்கள் பற்றி எது சரியானது, எது தவறானது என்பதைத் தொடர்ந்து பதிவுசெய்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்யும்போது, அந்த நபர்களின் சிந்திக்கும் ஆற்றல், தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி, குடும்பக் கஷ்டங்களைக் கடந்து அவர்களின் உழைப்பு மீது மக்களுக்கு என்றுமே மிகப்பெரிய மரியாதை உணர்வு இருக்கும். அந்த மரியாதை உணர்வால்தான், பிரபலங்கள் செய்யும் சிறு தவறைக்கூட மக்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

சில பிரபலங்களால் இந்தச் சமூக ஊடக மக்களின் கோபத்தைக் கையாள முடியாமல் போய்விடுகிறது. அதனால், சிறந்து விளங்குபவர்களைக் காட்டிலும் பல திறமைகள் இருக்கும் நபர்களைத் தேர்ந்தெடுக்கும் செயலைச் சமூக ஊடக அல்கரிதம் தற்போது இன்னும் புதிதாக மாற்றியுள்ளது.

அதாவது சமூக ஊடகப் பிரபலமாக இருக்க வேண்டுமென்றால், சமூக ஊடகத்தைக் கையாளும் திறனும், அதில் கிடைத்த சிறந்த, மோசமான அனுபவங்களை வைத்து அதை அறிவாக மாற்றிவிடத் தெரியக்கூடிய சாதுரியமும் இருக்க வேண்டும். எதிர்கருத்துகள் தெரிவிப்பவர்களை இணைத்து, தெளிவான உரையாடல் மேற்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால், இவர்கள்தாம் இன்று பேச வேண்டுமென்று நம்ப வைக்கப்படுகிறார்கள்.

யாரெல்லாம் விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படாமல் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தாம் இன்றைய டிஜிட்டல் மார்கெட்டிங்கின் பிராண்டாக மாறுகிறார்கள். ஒரு கல்லூரிக்கு அல்லது மேடைப் பேச்சுக்கு இவர்களை அழைக்கும்போது பிராண்டின் பெயர் சமூக ஊடகங்களில் வைரலாகும்.

அப்போது அந்த பிராண்ட் இயல்பாகவே ஓர் இலவச மார்க்கெட்டிங் என்கிற ரீதியில் அமைந்துவிடும். சமூக ஊடக அல்கரிதம் கூற்றின்படி, ஒரு கிளிக் செய்யும்போது அந்த பிராண்ட் செயல்படும் ஊர், அந்த ஊரின் சிறப்பம்சங்கள் என்கிற ரீதியில் பரவிவிடும்.

அதனால் இனி, ஏன் சமூக ஊடகப் பிரபலங் களை அழைக்கிறார்கள் என்று கேட்பது வீண். ஏனென்றால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றான பின், அனைத்தையும் சந்தைப்படுத்தும் மனித எண்ணங்களின் தீவிரத்தின் முன், உணர்வுகளை உணர்ச்சியாக மாற்றாமல் கையாளும் நபர்கள்தாம் இனி தேவைப்படுவார்கள்.

இனி சமூக ஊடகப் பிரபலங்களை மட்டும்தான் சிறப்பு விருந்தினராக அழைப்பார்களா என்று கேட்டால், இல்லை என்கிற பதில்தான் வரும். ‘எப்படி ஒரு காட்டில் யானைக்கு இடமிருக்கிறதோ, அதே போல் எறும்புக்கும் இடமுண்டு.’ இனி இவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இருப்பார்கள் என்பதே நிஜம்.

- gayapsychologist@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in