

சமவெளிகளின் அளவுக்கு மலைப் பகுதிகளின் உணவு வகைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. கொடைக்கானல், நீலகிரி, பழநி போன்ற மேற்கு மலைத் தொடர் பகுதிகள் சுற்றுலாத் தலங்கள் என்னும் முறையில் மக்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கலாம். ஆனால், அவற்றுக்கே உரிய உணவு வகைகளைப் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.
அவற்றை அறிமுகப் படுத்தும் நோக்கில் ‘குறிஞ்சி உணவுத் திருவிழா’ சென்னையில் நடைபெறவுள்ளது. மலைப் பகுதி உணவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் திருவிழா நடைபெறுவது இதுவே முதல் முறை.
ஏப்ரல் 5 (நாளை)லிருந்து 19 வரைக்கும் சென்னை ராயப்பேட்டை அமதிஸ்ட் வளாகத்தில் உள்ள வைல்டு கார்டன் உணவகத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. சமையல் வல்லுநர் ராகேஷ் ரகுநாதன், சென்னை யில் உள்ள அமிதிஸ்ட் மையம், ‘கோடை க்ரானிக்கிள்’ மின்னணு இதழ் ஆகியவற்றோடு இணைந்து இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. உணவுத் திருவிழாவுக்கான அறிமுக நிகழ்வு, அண்மையில் சென்னையில் நடந்தது.
ராகேஷ் ரகுநாதன் சமையல் வல்லுநராக இருப்பதுடன், உணவையும் பண்பாட்டு வரலாற்றையும் இணைத்து அணுகுபவர். தொலைக்காட்சிகளில் பயண நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். குறிஞ்சி உணவு வகைகள் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
“கொடைக்கானல், நீலகிரி போன்ற இடங்களில் உள்ள பழங்குடியினர் வாழ்க்கை முறை, பாரம்பரியமான உணவு வகைகளை முற்றிலும் இழந்து விடவில்லை. மலைக்கும் மலை சார்ந்த பகுதிகளுக்கும் பழங்காலத் தமிழர்கள் வைத்த பெயர் குறிஞ்சி. அந்தப் பெயரிலேயே திருவிழா நடக்கிறது.
சங்க இலக்கியப் பாடல்கள், குறிஞ்சி நிலத்துக்கு உரியதாகக் கூறும் உணவுப் பொருள்கள் இப்போது வரை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புழங்குகின்றன. அங்கேகிடைக்கும் தேன், தினை, கிழங்கு வகை கள், மிளகு, பழ வகைகள், இறைச்சி, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருள்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவுத் திருவிழாவை நடத்த உள்ளோம்.
அறுபடைவீடுகளில் பழநி முருகன் கோயில், குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ளது. முருகனுக்குப் படைக்கப்படும் பஞ்சாமிர்தம்கூடப் பழங்குடி வாழ்க்கைமுறையின் வெளிப்பாடுதான். அதைச் செய்யத் தேவைப்படும் வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, தேன் போன்றவை மலைவாழ் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பவையே. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு உணவுத் திருவிழாவைத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார் ராகேஷ் ரகுநாதன்.
ஊற வைத்த தினை அரிசியோடு மலையில் விளையும் பழங்களை நறுக்கிப்போட்ட சாலட், மூங்கில் அரிசியுடன் சமைத்த ஆட்டிறைச்சி, தீயில் சுட்டெடுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நீலகிரி வட்டார முறையில் தயாரிக்கப்பட்ட ஆட்டிறைச்சி சூப், நெய்யில் பொரிக்கப்பட்டு வெல்லம் சேர்க்கப்பட்ட மலை வாழைப்பழம், உலர் பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான உணவு வகைகள் திருவிழா மெனுவில் இடம்பெற உள்ளன.
கடந்த 300 ஆண்டுகளில் கொடைக்கானலும் நீலகிரியும் புவியியல் நோக்கில் அடைந்திருக்கும் மாற்றங்களை அங்குள்ள உணவுப் பண்பாடு பிரதிபலிக்காமல் இருக்க முடியாது. காலிஃபிளவர், அவகாடோ, முட்டைக்கோஸ் போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் இதில் உண்டு.
நீலகிரி பகுதியில் திபெத்தியர்களும் வசித்துவருகின்றனர். அவர்களது உணவுப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஆட்டிறைச்சியை உள்ளடக்கிய ‘மோமோ’வும் விருந்தில் இடம்பெற உள்ளது. கூடவே செவிக்கு விருந்தாக மேற்கு மலைத் தொடர் குறித்த செய்திகளும் திருவிழாவில் பகிரப்பட உள்ளன.
உணவுக்காகவும் சுற்றுச்சூழல் பராமரிப்பு போன்ற பணிகளுக்காகவும் கூடுதலாகச் செலவழித்தாலும் பரவாயில்லை எனக் கருதுபவர்களுக்குக் குறிஞ்சி உணவுத் திருவிழா நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.
அமதிஸ்ட் குறிஞ்சி விழா
ஏப்ரல் 5-19,
ராயப்பேட்டை, சென்னை.
தொடர்புக்கு: 044-45991633
- anandchelliah@hindutamil.co.in