

தமிழ் மொழிப் பாடத்தை இன்றைய மாணவர்களும் ஆர்வமாகப் படிக்கும் விதத்தில் கற்றுக்கொடுக்கிறார் கதிரவன். தமிழாசிரியரான இவர்,சுவாரசியமான முறையில் எழுத்துக்கூட்டிப் படிக்க வைப்பது, செய்யுளைப் பாடலாக்குவது, இலக்கணத்தை இனிமையாக்கு வது போன்ற செயல்கள் மூலம் மாணவர்களுக்குத் தமிழ் மீது ஆர்வத்தை அதிகரிக்கிறார்.
“சிவகங்கை மாவட்டம், சோழபுரம் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுக்கிறேன். ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில’ என்கிற நாலடியார் பாடலை எனக்குத் தெரிந்த ராகத்தில் பாடினேன். ஒரு மாணவன் குறுக்கிட்டு, “பாகவதர் மாதிரி பாடுறீங்க...
சினிமா பாட்டு மாதிரி பாடுங்க சார்” என்றான். அந்த நேரத்தில், ‘சுட்டும் விழிச் சுடரே’ என்கிற பாடல் மெட்டை வைத்து, ‘கல்வி கரையில’ என்று பாடினேன். மாணவர்கள் உற்சாகமாகப் பாட ஆரம்பித்தனர். அந்த வரவேற்பைப் பார்த்து, செய்யுள்களை எல்லாம் சினிமாப் பாடல் மெட்டில் சொல்லிக்கொடுத்தேன். மாணவர்கள் சிரமமின்றிச் செய்யுளை மனப்பாடம் செய்துகொண்டார்கள்.”
யூடியூப் சானல்: மகிழ்ச்சி, துக்கம் என்று எந்த நிகழ்வாக இருந்தாலும் பேனர், ஃபிளெக்ஸ் வைக்கும் வழக்கம் அதிகரித்துவிட்டது. ஆனால், அந்த பேனரில் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. இதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த கதிரவன், யூடியூப் சானல் ஒன்றை ஆரம்பித்தார்.
“திருமணத்துக்காக வைக்கப்பட்டிருந்த பதாகையில் ‘மணமக்கள்’ என்பதற்குப் பதிலாக, ‘மனமக்கள்’ என்று பிழையோடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதை ஒரு குழந்தை படிக்குமேயானால், இதில் உள்ள பிழையை அறியாமல் அப்படியே மனதில் பதிய வைத்துக்கொள்ளும்.
அதை மாற்றும் முயற்சியாக, ‘கல்விச் சாலை’ என்கிற பெயரில் யூடியூப் சானலை ஆரம்பித்தேன். இதில் ண, ன, ற, ர எழுத்துகளுக்கான வேறுபாட்டைக் கூறி காணொளியாக்கினேன். அந்தக் காணொளியை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்தனர். 40 ஆயிரம் பேர் சந்தாதாரர் ஆனார்கள்.”
தமிழுக்காக உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் சாலைகளில் உள்ள பதாகை, வழிப்பலகை, கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டச் சுவரொட்டி, திருவிழாச் சுவரொட்டி ஆகியவற்றில் எவை சொற்பிழை, பொருள்பிழை, ஒற்றுப்பிழைகளோடு எழுதப்பட்டுள்ளனவோ அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி காணொளியாக்கி வருகிறார் கதிரவன்.
“அரசியல் கட்சிப் பிரமுகர் பற்றிய சுவரொட்டியில் பிழை இருந்தது. அதைச் சுட்டிக்காட்டிக் காணொளியாக்கினேன். அந்தப் பதிவைப் பார்த்த பிரமுகர், ‘தமிழாசிரியரே, இப்போதுதான் அந்தப் பிழையைக் கண்டேன். இனி அதைத் திருத்திக் கொள்கிறேன்’ என்றார். ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் ஆங்கில அகராதி இருப்பதுபோல, தமிழ் அகராதியும் இருக்க வேண்டும். தமிழைப் பிழையின்றி எழுதும் காலம் வெகு விரைவில் வரவேண்டும்” என்கிறார் கதிரவன்.