தெருப் புராணம்: மனித வாழ்க்கை அறியாத குரலற்ற தெருக்கள்

தெருப் புராணம்: மனித வாழ்க்கை அறியாத குரலற்ற தெருக்கள்
Updated on
2 min read

ஓசைகள் பிறக்கும் இடங்களே தெருக்கள்தாம். கோபத்தோடு தெருக்குழாயில் சண்டை போட்டுக் கண்ணீர் பெருக வரும் என் தாய்க்காக, சினம் பொங்கத் தெருவில் வம்புக்கு நிற்கும் என் குரல், காலையில் அழைக்கும் பால்காரரின் குரல், காய்கறிக்காரரின் குரல், பிள்ளைக்குச் சோறூட்டும் தாயின் குரல், பசிக்கு யாசகம் கேட்பவரின் குரல் எனக் குரல்களால் நிறைந்தது தெரு. குரல்கள் இல்லாத அமைதியான தெரு, மனிதர்களின் வாழ்க்கை அறியாத தெரு.

வெயில் சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் எங்கள் தெரு வேறு மாதிரி காட்சிகொள்ளும். இரவிலும் பகலிலும் வேறு குரல்கள் ஒலிக்கும். முதலில் பகல் குரல்கள். இவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள் என்கிற புதிரே மனதிற்குள் கிளைத்தபடி இருக்கும்.

நீண்ட வெள்ளை அங்கி, தலையிலே வெள்ளை மராட்டிய சிவாஜி பாணியில் பெரிய தலைப்பாகை, தலைப்பாகை மேலே பொன் நிறத்தில் பிறை பதித்து அதற்கு மேலே ஒரு நட்சத்திரம் மின்னியபடி சொருகியிருக்கும்.

தலைப்பாகையின் மத்தியில் வெண்கலத்தால் ஆன சூரியன், கழுத்தில் பல்வேறு நிறங்களில் ஸ்படிக மாலைகள் அணிந்தபடி, ஏதோ வேற்றுக் கோளிலிருந்து பூமிக்கு வந்ததைப் போலத் தோற்றம் கொண்டு, கையில் ஒரு பெரிய மணியுடன் ஓசை எழுப்பியபடி தெருக்களில் வருவார்.

வயிற்றுப் பிழைப்புக்காக வருபவர் அல்ல என்பது போலத் தோற்றம் இருக்கும். அவர் எழுப்பும் மணியின் ஓசையைப் போல் எந்தக் கோயிலிலும் கேட்க முடியாது. அப்படி ஒரு கணீரென்ற ஓசை அந்த மணியிலிருந்து பெருகி, தெருவையே அதிர வைக்கும். அதன் ஓசை எத்தகைய மனதையும் ஒரு நிமிடம் கட்டிப்போடும். அந்த ஓசை கேட்டவுடன் தெருப்பிள்ளைகள் எல்லாம் அவர் பின்னாலே சுற்றுவோம்.

ஒரு வீட்டை அடைந்தவுடன் மணி ஓசை எழுப்பி, அந்த வீட்டின் இறந்த காலத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்வார். தான் காசிக்குச் செல்வதாகவும் அங்கே உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கேட்பேன் என்றும் சொல்வார். அரிசி, பணம் தவிர வேறு எதையும் வாங்க மாட்டார்.

வீட்டை விட்டுப் புறப்படும் முன் கையில் ஒரு காவிக்கட்டியை எடுத்து, வீட்டில் உள்ளவரின் பெயர், அவர் அப்பாவின் பெயரைக் கேட்டு இரண்டு பேரின் முதல் எழுத்துகளையும் ஒரு கையெழுத்துப் போடுவது போல வீட்டுச் சுவரில் அடையாளமிடுவார்.

ஏதோ வேற்று உலகவாசி ஒருவர் பூமியிலே இறங்கியது போலவும் நமது பிரச்சினைக்காக அவதரித்தவர் போலவும் நினைத்து, மிரட்சியிலிருந்து மீளமுடியாமல் அவர் பின்னாலேயே நாங்களும் வீடு வீடாகச் செல்வோம். சில வீடுகளில் அடையாளங்களைப் போட மாட்டார்.

இவரின் மந்திரச் சொல்லுக்கு மயங்கிய நபராக இருந்தால், வேறு ஒருவர் வருவார் என்று சொல்லிவிடுவார். இவரின் அடையாளப்படுத்தப்படாத வீடுகளுக்கு, பின்னால் வேறொருவர் இதுபோல் வேடங்களின்றி சாதாரணமாக வந்து, வசூல் வேட்டை நடத்திச் செல்வதாகப் பின்னர் அறிய நேர்ந்தது.

இந்தச் சாமிகள் சிறிது காலத்துக்குப் பிறகு காணவில்லை. ஒரு நாள் பள்ளியில் சக மாணவர்கள் அவர்களைப் பற்றிப் பத்திரிகையில் செய்தி வந்திருப்பதாகவும் அவர்கள் சித்தேரி என்கிற ஊரிலிருப்பதாகவும் ஏராளமானவர்களிடம் ஏமாற்றிப் பணம் பறித்துவிட்டதாகவும் சொன்னார்கள்.

இதே கோடைக்காலம்தான். ஆனால், பொழுது நடுச்சாமம். சுடுகாட்டுச் சுடலையிடம் ஆசிவாங்கி, தலைவிரித்தபடி ஊருக்குள் வருவார் அவர். தான் வந்திருப்பதை அறிவித்தபடி கையில் ஓர் உடுக்கையை ஒலித்தபடி, ‘ராப்பாடிக்குப் படிபோட்டுப் போகச் சொல்லுங்க’ எனத் தெரு அலற குரல் கொடுத்துச் செல்வார்.

யாரும் அவரை வந்து பார்க்கக் கூடாது. முக்கியமாகப் பெண்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் உடுக்கை அடித்தபடி ஒவ்வொரு வீட்டின் முன்பும் வருவார். அதற்குள் வாசலில் தானியம் வைத்து, வீட்டிற்குள் அமர்ந்தபடி அவர் சொல்லப்போகும் வாக்குக்காகக் காத்திருப்பார்கள். ஊருக்கு வரப்போகும் நன்மை, தீமை, நிற்கும் வீட்டிற்கு வரப்போகும் நல்லது, கெட்டது என அவர் நா சுழன்றபடி இருக்கும்.

எங்கள் வீட்டுப் பாட்டிகள் இரவில் சேட்டை செய்பவர்களை ராப்பாடியிடம் பிடித்துக் கொடுப்போம் என்று பயம் கொள்ளச் செய்தது எங்கள் தலைமுறையோடு முடிந்து போனது. எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு மட்டும் தெரியும் வருபவர் யாரென்று!

விவசாயம் ஊர் சார்ந்த ஒன்றாக இருந்தது மாறி, தானியங்களை மற்றவர்களுக்கு அளிப்பதும் நின்றுவிட்டதால் ராப்பாடகர், பகல் மணி ஓசை, சித்தேரி சாமியார்கள் என யாருமற்ற தெருவாக மாறி, வீட்டுக்கு வீடு நிலத்தடி நீர்க்குழாய் வந்து, தெருச்சண்டைகூட இல்லாமல் உறங்கும் தெருவில் இன்று ஏதோ காணாமல் போய்விட்டது.!

- maharajanswaminathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in