திண்ணைப் பேச்சு 44: பட்டாணிக் குருவிகளின் தோழர்!

திண்ணைப் பேச்சு 44: பட்டாணிக் குருவிகளின் தோழர்!
Updated on
3 min read

என் கல்லறையின் மேல்
இரண்டு சொற்களை மட்டும் பொறியுங்கள்
‘ட்ஸ்வீ... ட்ஸ்வீ...’
இப்படித்தான் பட்டாணிக் குருவி கூப்பிடுகிறது.
- ரோசா லக்சம்பர்க்

கம்யூனிஸ்டுகள் கலை இலக்கியத் துக்கு எதிரானவர்கள்; கலையும் இலக்கியமும் வர்க்கப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் மயக்க மருந்துகள் என்று ஒரு கருத்து இருந்தது. அதனாலேயே பாறைபோல் இறுகிய மனம் கொண்டவர்களாகவே கம்யூனிஸ்டுகளைச் சித்தரிப்பார்கள். பாறையின் இடுக்குகளிலிருந்து பசுந்தளிர் எட்டிப்பார்ப்பது போல் கம்யூனிஸ்டுகளின் மனங்களிலும் பசுந்தளிர்போல் கலை எட்டிப்பார்க்கிறது.

இதற்கு எண்ண முடியாத எடுத்துக் காட்டுகள் உள்ளன. உலகின் ஆகச்சிறந்த இலக்கியங்கள் கம்யூனிஸ்டுகளால் படைக்கப்பட்டிருக்கின்றன. போராட்டத்தில் உயர்ந்த முஷ்டிகளைப் பார்த்த மாசேதுங்குக்கு அவை நூறு பூக்களாகத் தென்படவில்லையா? கம்யூனிஸ்ட் பாசறையில் உருவான தஞ்சை ப்ரகாஷ் அடிக்கடி சொல்லும் வாக்கியம்: ‘நீங்கள் எல்லாம் வாழ்க்கை யைப் பார்க்க மட்டுமே செய்கிறீர்கள். வாழ்க்கையை உற்று நோக்கவேண்டும்.’

எங்களுக்குப் புரிந்தது போலவும் இருக்கும். புரியாதது போலவும் இருக்கும். ஞானவான்கள் பேசுவது அப்படித்தான். நகுலன் சொல்வதுபோல் யோசிக்கவேண்டும். க.நா.சு., ‘காண்பதுவும் காண்பதில் தோய்வதும்தான் வாழ்க்கை’ என்பார். எழுத்து ஆளுமைகள் பலரின் படைப்புகள் நமது மனதைத் தொடு வதற்குக் காரணம், அவர்கள் வாழ்வின்மீது கொண்டிருக்கும் லயிப்பும் அக்கறையும்தான். நல்ல இலக்கியம் இவற்றைக் கவனிக்கவும் கண்டுகொள்ளவும் கற்றுக்கொடுக்கிறது.

இந்த உணர்வு வாய்த்துவிட்டால் நீங்கள் எவ்வளவு மோசமான நரகத்துக்குள் தள்ளப்பட்டாலும் அதைச் சொர்க்கமாக மாற்றிக்கொள்வீர்கள். அப்படி மாற்றிக்கொண்டவர்களில் ஒருவரான ரோசா லக்சம்பர்க் என்கிற பெண்மணியைச் சொல்ல வேண்டும். ரோசா, பள்ளியில் படிக்கும்போதே புரட்சிக்காரர்களின் குழுவில் இணைந்தார்.

இவருக்குப் புரட்சிக்காரர் களுடன் தொடர்பு இருந்ததால் முதல் மதிப்பெண் பெற்றும் தங்கப் பதக்கம் மறுக்கப்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததுமே அவர் புரட்சிகர சோஷலிச அமைப்பில் உறுப்பினராகிவிட்டார். மார்க்ஸ், எங்கெல்சின் எழுத்துகளைக் கற்கத் தொடங்கிவிட்டார்.

1889ஆம் ஆண்டில் ரஷ்யாவில் ரகசிய போலீசின் பதிவேடுகளில் ரோசா லக்சம்பெர்கின் பெயர் இடம் பெற்றுவிட்டது. ஒரு மாபெரும் சோஷலிஸ்ட் ஆன அவர், தனது நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்: ‘என் ஆழ்ந்த அன்பு, தோழர்களைவிட என் சின்னஞ்சிறு பறவைகளுக்குத்தான் சொந்தமானது!’ அந்தப் பறவைகள் சிறைக் கொட்டடியினுள் சின்னஞ்சிறு சாளரத்தின் வழியே தெரிந்த ஒரு துண்டு வானத்தில் குறுக்கும் நெடுக்கும் கீச்சிட்டபடி பறந்தவை!

ஆகவேதான் அவர் எழுதினார், ‘என் கல்லறையின் மேல் இரண்டு சொற்களை மட்டும் பொறியுங்கள்’ என்று. ‘ட்ஸ்வீ, ட்ஸ்வீ” - இப்படித்தான் பட்டாணிக் குருவி (The Great Tit) கூப்பிடுகிறது. ஆனாலும், இந்த வேண்டுகோளைக் கூட அவரது எதிரிகள் நிறைவேற்ற வில்லை. அதனால் என்ன? பட்டாணிக் குருவிகள் இருக்கும்வரை ரோசாவின் பெயரும் இருக்கும்!

ஆபத்தானவர்கள் பட்டியல்: மக்கள் கவிஞர் இன்குலாப் நோய்வாய்ப்பட்டு, தமது அவயங்களில் ஒன்றை இழக்கும் நிலைக்கு ஆளானபோது, ‘இப்போதும் என் பெயர் போலீசின் ரகசியப் பதிவேடுகளில் இருக்கிறது - ஆபத்தான வர்கள் பட்டியலில்’ என்று சொல்லிச் சிரிப்பார். அவர் எழுதிய கவிதை ஒன்று இப்படித்தான் ஆரம்பமாகும், ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்!’ கவிஞர் இன்குலாபின் பெயர் இயற்கையின் பதிவேட்டில் இடம்பெற்றி ருப்பதை அவருடைய கவிதைகள் பலவும் உணர்த்தும்.

சாலியமங்கலத்துக்கு மணிக்கொடி எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தியுடன் அளவளாவ தஞ்சை ப்ரகாஷ் முதலான நண்பர்களுடன் செல்வோம். எவ்வளவு தீவிரமான இலக்கிய உரையாடலாக இருந்தாலும் சட்டென்று தன் பேச்சை நிறுத்திவிட்டுச் சற்றுநேரம் கழித்து, “சொல்லுங்கள்” என்பார். ஒருமுறை இதற்குக் காரணம் கேட்டார் ப்ரகாஷ்.

“அதோ உங்களுக்குக் கேட்கிறதா? செம்போத்து கூவுகிறது பாரும்! அதன் குரலில் என்ன ஒரு ராகம், என்ன ஒரு சோகம்!” இந்த மனநிலை சுதந்திர மனிதர்களின் மனங்களில் உதிப்பதில் வியப்பில்லை. சிறைக் கொட்டிலில் அடைக்கப்பட்ட போது அப்படியான மனநிலை மரத்துவிடாமல் மகிழ்ச்சியில் திளைக்க முடியும் என்றால், அது குழந்தைகளாலும் ஞானிகளாலும்தான் முடியும். ரோசா ஒரு மனித ஜீவனாகச் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்டு அதில் லயிப்பவர், கவிமனம் உடையவர், காருண்யம் மிக்கவர் என்பதையே காட்டுகிறது.இத்தகைய மனிதரைச் சிறைப்படுத்த ஏலுமோ? சிறைக்குள்ளும் பிரபஞ்சம் கண்டு சிந்தித்திருப்போருக்கு உடலைப் பிணிக்கும் கயிறும் கம்பியும் எந்தமட்டு?

மன்னிப்பு வேண்டாம்! - ரோசா முதன்முறையாகச் சிறை சென்றபோது, ‘இங்கே என்னால் அமைதியாக ஓய்வெடுக்க முடிகிறது. காற்று, கதிரவன், நூல்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், அரசர் ஃப்ரெடரிக் அகஸ்டின் முடிசூட்டு விழாவின் நிமித்தம் எனது தண்டனைக் காலம் குறைக்கப்பட்டதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசரின் மன்னிப்போ கிருபையோ எந்த வடிவத்தில் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை’ என்று எழுதினார்.

நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் அவரின் கடித வரிகளைப் பார்க்கலாம். ‘கீழே பசுமை கொழிக்கும் ஒலிவமரத் தோப்புகள். செர்ரி பழக் கொடிகள், பெருமதிப்புக்குரிய தவிட்டுநிற ஸ்பானிஷ் மரங்கள். இவை எல்லா வற்றுக்கும் மேலாகப் பரவிக்கிடக்கும் ஆதிகாலத்துப் பேரமைதி. நேற்று திடீரென்று நீலப் பூனைக்குட்டி ஒன்று என்னைச் சில நொடிகளே சந்தித்து வாழ்த்திப் போய்விட்டது.

நான் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டடியின் சன்னலுக்கு வெளியே ஒரு நீலப்பறவை அடிக்கடி பறந்துசெல்லும். அது மிகவும் புத்திசாலித்தனமாகத் தன் ‘சிசியே’ என்கிற மகிழ்ச்சிப் பாடலைப் பாடியது. ஒரு குறும்புக் குழந்தை எப்படித் தொந்தரவு கொடுக்குமோ அப்படிப் பாடியது. அரசர் சாலமோன் பறவைகளின் மொழியைப் புரிந்துகொண்டவர் என்று என் தாய் உறுதியாக என்னிடம் சொல்வார். என் தாயின் எளிமையைக் கண்டு நான் புன்முறுவல் செய்வேன்.

அரசர் சாலமோன் போன்று நானும்கூடப் பறவைகள், விலங்குகளின் மொழிகளைப் புரிந்துகொள்கிறேன். அவற்றின் மொழி மனிதப் பேச்சு போல் இல்லைதான். ஆனால், அவை தம் குரல்களை மாற்றி மாற்றி பல்வேறுபட்ட அர்த்த பாவங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதை நான் புரிந்துகொள்கிறேன்.

எவர் அசட்டை செய்கிறாரோ அவரின் செவிகளுக்குத்தான் பறவையின் பாட்டு கர்ணகடூரமாக இருக்கும். சிறையிலிருந்து மாற்றப்படும் வேளை யில் சிறைச்சாலை மதிலை ஒட்டிச் செல்லும் அந்தக் குறுகிய கற்களிடமும் பாறையிடமும் ‘நான் உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்’ என்று எழுதுகிறார்.

குளியலறையின் மேலே சன்னலில் சிக்கிச் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுகிறார். மென் உணர்வும் மேதைமையும் மிக்க ரோசா லக்சம்பர்க் என்கிற அந்த இளம்போராளியின் மேன்மை தெரியாத ஒரு பட்டாளத்துச் சிப்பாய், ரோசா அடைக்கப்பட்டிருந்த விடுதி அறையிலிருந்து வெளிவரும்போது துப்பாக்கியால் அவர் பின்மண்டையில் அடித்தான். மற்றொருவன் அவர் தலையில் சுட்டான்.

லேண்டர்வேர் கால்வாயின் பாலத்திலிருந்து ரோசாவின் சடலம் தூக்கி எறியப்பட்டது. தன்னையே தன் கனவுக்காகக் காவுகொடுத்த ஒரு கம்யூனிஸ்ட் போராளியின் வாழ்க்கை இவ்விதம் முற்றுப்பெற்றது.

(பேச்சு அடுத்த வாரம் முடியும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in