

ஊரெல்லாம் ‘குணா குகை’ பற்றிய பேச்சாக இருந்ததும் எனக்கு ‘மொட்டை மலைக் குகை’யைப் பற்றிய நினைவு வந்தது. எனக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது என் வயதுப் பெண்களும் ஆண் பிள்ளைகளும் மாடுதான் மேய்த்துக்கொண்டிருந்தோம்.
அப்போது படிப்பு என்பது எங்களுக்குக் கிடைக்காத பெரும் பொருளாக இருந்தது. எங்கள் ஊரிலிருத்து ஒரு மைல் தூரத்தில் ‘மொட்டை மலை’ இருக்கிறது. மழைக்காலம் வந்துவிட்டால் ஊரின் பக்கமெல்லாம் வெள்ளாமை வந்துவிடும். அதனால் பிஞ்சைப் பக்கம் மாடுகளை மேய்க்கவே முடியாது.
எனவே காலையில் எழுந்ததுமே பல் விளக்கிச் சாப்பிட்டுவிட்டு, அம்மா கொடுக்கும் தின்பண்டமான அரிசி, பருப்பு போன்றவற்றை மடியில் கட்டிக்கொண்டு, அதில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்துவிட்டு, மாடு மேய்ப்பதற்காகப் புறப்படுவோம். எல்லா மாடுகளையும் பத்திக்கொண்டு மொட்டை மலைக்குத்தான் போவோம். அங்கே மொத்த நிலமும் தரிசாகத்தான் கிடக்கும். மாடுகளை அங்கே விட்டுவிட்டு நாங்கள் பாட்டுக்குப் பலவித விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருப்போம்.
எங்களுடன் கோபால் என்று ஓர் அண்ணனும் மாடு மேய்க்க வருவார்.அப்போது அவர் ‘பெரிய பத்து’படித்து முடித்துவிட்டுப் பட்டாளம் போகத் தயாராக இருந்தார். அந்த மலையின் பின்னால் ஒரு பெரிய குகை இருந்தது. பெரிய மழை வந்துவிட்டால் நாங்கள் எல்லாரும் போய் அந்தக் குகைக்குள் இருந்துகொள்வோம்.
ரொம்பப் பாதுகாப்பாகவும் வெதுவெதுப் பாகவும் இருக்கும் அந்தக் குகை, கொஞ்சம் நீளமாகவும் உள்பக்கம் குறுகலாகவும் இருக்கும். அந்தக் குகை கீழூருக்குப் போவதாகவும் அந்த ஊரில் வால்முளைத்த மனிதர்கள் இருப்பதாகவும் அவர்கள் நாம் கேட்பதை எல்லாம் கொடுப்பதாகவும் பெரியவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட கோபால் அண்ணன் ஒருநாள், “வாங்க நாம இந்தக் குகைக்குள்ள இருக்கிற கீழூருக்குப் போகலாம். என்னதான் நடக்குன்னு பார்ப்போம்” என்றார்.
எங்களுக்கெல்லாம் ஒரே குதியாளம். உடனே, நான், நீ என்று முந்திக்கொண்டு ஓடினோம். அண்ணனோ, “நான் முதலில் போகிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள்” என்றார். சரி என்று அவர் பின்னால் கொஞ்ச தூரம்தான் போனோம். பெரிய குளவிக்கூடு ஒன்று கலைந்து, வீ... என்று படையெடுத்துவந்து எங்களை எல்லாம் கொட்ட, “ஐயோ... ஐயையோ... வலிக்கு... வலிக்கு...” என்று வெளியே ஓடிவந்தோம். குளவிகளும் எங்களை விரட்டிக்கொண்டே வந்து முடிந்த அளவில் கொட்டிவிட்டு ஓடிப்போயின.
உடனே ஒவ்வொருவரும், “ஒண்ணுக்கிருங்க, ஒண்ணுக்கிருங்க” என்று சொல்லி, சிறுநீரில் மண்ணைக் குழப்பி, குளவி கொட்டிய இடத்தில் எல்லாம் பூசிக்கொண்டோம். அதுதான் எங்களுக்கு அப்போது மருந்து. குளவி கொட்டி வீங்கிய முகத்தை வீட்டில் யாரும் பார்த்துவிடக் கூடாதென்று பொழுதடைய வீட்டிற்குப் போனோம்.
மறுநாள் அண்ணன் ஒரு தீவட்டி, கயிறு, பெரிய கம்பு எல்லாம் கொண்டுவந்தார். “வாங்க, இன்னைக்குத் தீவட்டியைப் பொருத்திக்கிட்டுப் போயி கீழூரைப் பார்த்துட்டு வந்துடுவோம்” என்றார். எங்களுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. நேற்று குளவியிடம் வாங்கிய கொட்டெல்லாம் மறந்துபோனது.
அண்ணன் முதுகுக்குப் பின்னால் கயிற்றைக் கட்டிக்கொண்டார். அந்தக் கயிற்றை நாங்கள் ஒவ்வொருவராகச் சுருட்டிப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் அந்தக் குகையில் போக முயன்றோம். அண்ணன் தீவட்டியைக் கொளுத்தினார். வெளிச்சம் பெரிதாக இருந்தது. குகைக்குள்ளே நுழைந்தோம். முகத்தைத் துண்டால் மூடிக்கொண்டு தீவட்டியால் குளவிகளைப் பொசுக்கினார். குளவிகள் எல்லாம் செத்து விழுந்தாலும் ஒன்றிரண்டு குளவிகள் எங்களைக் கொட்டிவிட்டுத்தான் ஓடின.
குளவிக்குப் பயப்படுகிறவர்கள் எல்லாம் வரவேண்டாம் என்று அண்ணன் முதலிலேயே சொன்னதால், குளவி கொட்டியதில் வலி எடுத்தும் கீழூருக்குப் போகும் ஆசையில் யாரும் வாயைத் திறக்கவில்லை. வலியைப் பொறுத்துக்கொண்டும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டும் போனோம்.
‘உஸ்... உஸ்...’ என்று இரண்டு பாம்புகள் எங்களைப் பார்த்ததும் அரண்டு ஓடின. அண்ணன் அந்தப் பாம்புகளை விரட்டினார். ஒரு நட்டுவாக்களி கொடுக்கைத் தூக்கிக்கொண்டு வந்தது. என் பின்னால் வந்த சீதா, “அதை அடி. அதோட பாசிய எடுத்து அக்கா மீனாட்சி மவனுக்குக் கொடுப்போம்” என்றாள். அதைக் கேட்ட அண்ணன், “வாயை மூடு” என்று அதட்ட, எல்லாரும் கப்சிப் என்று ஆனோம்.
போகப் போக குகை குறுகிக்கொண்டே போனது. ஒவ்வோர் ஆளாகக் குனிந்தபடி சென்றோம். எல்லாருக்கும் வியர்த்துக் கொட்டியது. இப்படி முப்பதடி வரையில் போனதும் குகை பாறாங்கல்லால் அடைபட்டுக் கிடந்தது.
வெளவால்கள் பறந்த பறப்பு சொல்ல முடியாது! அவற்றின் சிறகடிப்பில் தீவட்டி அணைந்துபோக எங்கும் கும்மிருட்டு. தட்டுத்தடுமாறியவாறே வெளியே வருவதற்குள் ரொம்பவும் தவித்துப் போனோம். சீதா மட்டும், “அந்த நட்டுவாக்களி பாசிய எடுக்காம போனோமே” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
- arunskr@gmail.com