

திண்ணையில் உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அமெரிக்காவில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசிவழி தொடர்புகொண்டார்.
“இங்கே தமிழர்கள் நிறைய பேர் இருக்கிறோம். சங்கமெல்லாம் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு குரூப் அவ்வளவுதான். திண்ணைப் பேச்சில் நீங்கள் எழுதுகிற விஷயங்கள் எங்களுக்கே புதுசா இருக்கு.”
“எங்களுக்கே என்றால்?”
“எங்கள் குரூப்பில் தஞ்சாவூர்க்காரர்கள், திருநெல்வேலிக்காரர்கள் இருக்கிறோம். ஒருதடவை அமெரிக்கா வந்து பேச வேண்டும்.”
“வருகிறேன். அது சரி, அமெரிக்காவில் திண்ணை இருக்கிறதா?”
நண்பர் நான் சொன்னதை நிஜம் என்று எடுத்துக்கொண்டார் போலும். தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மீண்டும் அரை மணி நேரம் கழித்து அந்த எண்ணிலிருந்து அழைப்பு.
“சார், விசாரித்துப் பார்த்துவிட்டேன். அமெரிக்காவில் திண்ணை இல்லை. திண்ணை இருந்தால்தான் வருவீர்களா?”
“நாளைக்குச் சொல்கிறேன்.”
அமெரிக்கா செல்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. என் எழுத்து திண்ணையிலிருந்து அமெரிக்கா செல்ல முடியும். என்னால் முடியாது.
திண்ணை ஒரு மாயக்கம்பளம். பெண்களுக்குத் தங்கள் கவலைகளை இறக்கி வைக்கும் சுமைதாங்கி, விருந்தோம்பலின் அடையாளம். வீட்டின் தாய்மடி என்று ஒரு கவிஞர் வர்ணிக்கிறார். குழந்தைகள் திண்ணையில்தான் விளையாடுவார்கள்; படிப்பார்கள். திண்ணை, வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது ஒருகாலம்.
தஞ்சாவூர் போன்ற பழைய நகரங்களில் தேரோடும் வீதிகளை ஒட்டிச் சந்துகளும் சந்துகளில் திண்ணை வைத்த வீடுகளும் இருந்தன. இப்படிச் சந்துகளில் ‘வசித்த’ திண்ணைகளுக்குப் பல தலைமுறைக் கதைகள் தெரியும். வாயிருந்தால் சுவாரசியமான கதைகளைச் சொல்லும். திண்ணையில் உட்கார்ந்து சாதகம் செய்வது அக்காலத்தில் சங்கீதம் பயில்வோருக்கும் வித்வான்களுக்கும் வழக்கம். ஒற்றை வயலின் இழை, வாய்ப்பாட்டின் ராகத்துணுக்கு, தவிலின் துடிப்பு சந்துகளிலிருந்து மிதந்துவரும்.
சந்துகளில் வசித்த எல்லா வீட்டாருக்கும் சந்து தொடக்கத்தில் ஒரு பொதுத் திண்ணை இருந்தது. வீதியை ஒட்டியிருந்த இந்த அகன்ற பெரிய திண்ணையில் காற்று அள்ளிக்கொண்டு போகும். சந்துவாசிகள் பலரையும் சாயங்கால வேளைகளில் அங்கே பார்க்கலாம்.
சரித்திரத்தின் மீதான ஆக்கிரமிப்பு: பாரம்பரியமான விட்டல் மந்திர் திண்ணை தஞ்சாவூர் மேலவீதியில் இருந்தது. பின்னாளில் தமிழகத்தின் மிகப்பெரும் சங்கீத வித்வான்களாக அறியப்பட்டவர்கள் இந்தத் திண்ணையில் உட்கார்ந்து சாதகம் செய்தவர்கள்தாம். தெருவாசிகளுக்கும் தேசாந்திரிகளுக்கும் ஏன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேசபக்தர்களுக்கும் புகலிடமாக இந்தத் திண்ணை இருந்தது.
நான் பார்த்ததில் மிக நீளமான திண்ணை அது. மேலவீதியில் சுவாமி புறப்பாடு ஆகிவரும் நேரம் ஊர்வலத்தில் நாகசுரம் முதலான வாத்தியங்கள் வாசித்துவரும் பெரிய வித்வான்கள் திண்ணைக்கு முன்னால் சற்றுநேரம் கண்மூடி நின்று தங்கள் முன்னோடிகளுக்கு அஞ்சலி செலுத்துவதுபோல் மெய்மறந்து வாசித்துவிட்டுச் செல்வது வழக்கம்.
அண்மையில் தஞ்சை சென்றிருந்தபோது அந்தப் பாரம்பரியச் சின்னமான திண்ணை நகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டிருந்தது. சாக்கடை மீதான ஆக்கிரமிப்பாம். இந்த இடிப்பு, சரித்திரத்தின் மீதான ஆக்கிரமிப்பு.
பாரதியின் இடிப்பள்ளிக்கூடம்: பாரதியின் இடிப்பள்ளிக்கூடம் திண்ணையில்தான் நடந்தது. வெல்லச்சு செட்டியார், எலிக்குஞ்சு செட்டியார், பிரம்மராயர் என மனிதர்களுக்குக் கற்பனைப் பெயர்களைச் சூட்டி அப்படியே கண்முன் நிறுத்தியிருப்பார் பாரதி. திண்ணையில் போட்டிருந்த மிக நீளமான பெஞ்சை இப்போது நினைவில்லத்தின் உள்ளே போட்டிருக்கிறார்கள்.
ஆளோடி நெடுகவும் நீண்ட திண்ணை. மாப்பிள்ளை தலைசாய்க்கத் திண்டுவைத்துக் கட்டிய மாப்பிள்ளைத் திண்ணை. சாக்குப்படுதா தொங்கும் திண்ணை.
வெறும் திண்ணையைப் பார்க்க முடியாது. யாருமே இல்லாவிட்டாலும் ஒரு சொம்பு உட்கார்ந்திருக்கும். வழிப்போக்கர்கள் தொண்டையை நனைத்துக்கொள்ள ஒரு பித்தளைத் தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பும் இருக்கும்.
வீடு தூங்கிய பிறகும் திண்ணை விழித்துக் கொண்டிருக்கும். திண்ணை இருட்டில் இரண்டு பீடிக்கங்குகள் பேசிக் கொண்டிருக்கும்.
திருலோக சீதாராமும் திண்ணையும்: பழம்பெரும் கவிஞர் திருலோக சீதாராம் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகள்...
‘முன்பொரு கவிதை எழுதினேன்
அதன் மூலப்பிரதி கைவசமில்லை
எரவாணத்தில் செருகிவைச்சேன்
எங்கே போனதோ தெரியவில்லை...’
எரவாணம் என்பது திண்ணையின் மேற்புறம் சாய்வாக இறங்கி உத்தரத்தோடு விளிம்புகட்டி நிற்கும் பகுதிதான். இதில் கடிதங்களைச் செருகிவைக்கும் வழக்கம் இருந்தது. திருலோகம் கவிதையைச் சொருகிவைத்திருக்கிறார்!
திண்ணை இருட்டு: திண்ணை இருட்டில் உட்கார்ந்திருப்பது தமக்குப் பிடிக்குமென்று புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். இருட்டோடு இருட்டாக இருந்துவிடலாம் பாருங்கள் என்பார். திண்ணை இருட்டு மாடப்பிறையில் சுடர்விட்டு எரியும் தீபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று தீர்த்துவிடும்.
திண்ணை சுவாமிகள்: திருவண்ணாமலையில் ரமணரை அண்டியிருந்து வாழ்ந்து மறைந்த ஞானியர் பலர். அவர்களில் ஒருவர்தான் திண்ணை சுவாமிகள். ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி 40 ஆண்டுகள் கழித்திருக்கிறார். திருவண்ணாமலையில் அந்தத் திண்ணை இன்னும் இருக்கிறது. சுவாமிகள் சமாதி அடைந்துவிட்டபோதும் திண்ணையின் ஏகாந்தம் அங்கு வீற்றிருக்கிறது.
திண்ணை நாடகம்: திண்ணை பெரிதாக இருந்தால் பாதித் திண்ணையில் படுதா தொங்கும். உள்ளே கைக்குக் கிடைத்த வண்ணங்களால் கதாபாத்திரங்களை உருவாக்குவோம். திண்ணை சிறிதாக இருந்துவிட்டாலோ வீட்டுக்குள்ளிருந்து பாரதியும் வீரபாண்டிய கட்டபொம்மனும் வெளியே வருவார்கள்.
நாங்கள் போடுகிற கூச்சல் தாங்காமல் எதிர்த்திண்ணையில் தூங்கும் தாத்தா கோபாவேசத்துடன் குச்சியை உயர்த்தியபடி வருவார். கட்டபொம்மன் வேஷம் போட்டவன்தான் முதலில் ஓட்டம் பிடிப்பான்!
சமுத்திரம் தாண்டல்: இரவில் பாட்டி சொன்ன கதைகள் பகலில் அரங்கேறும். அனுமன் சமுத்திரத்தை ஒரே தாண்டாக எப்படித் தாண்டினார் என்று எங்களுக்குள் போட்டி நடக்கும். பெரிய திண்ணையிலிருந்து சிறிய திண்ணைக்குத் தாவுவோம். எல்லாரும் சாமர்த்தியமாகத் தாவிவிட்டார்கள். நான் கொஞ்சம் தடுமாறி மோவாயில் அடிபட்டுக்கொள்ள, ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.
பழைய நினைவுகளின் தூளியில் ஆடியபடி தூங்கிவிட்டேன். திண்ணை நூலகம் வந்த வாசகர் பத்ரி என்னை எழுப்பிவிட்டார். என்னை அறியாமல் அனிச்சையாக என் விரல்கள் மோவாயைத் தடவின. சமுத்திரம் தாண்டியதற்குச் சாட்சியாக அந்தத் தழும்பு இருக்கவே செய்கிறது!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com