வனச் சுற்றுலா: குரங்குகளின் கூக்குரலும் மயில்களின் தரிசனமும்

வனச் சுற்றுலா: குரங்குகளின் கூக்குரலும் மயில்களின் தரிசனமும்

Published on

அரக்கப் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு, புத்துணர்வு பெறுவதற் காகச் சுற்றுலாவை நாடுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். சுற்றுலாவிலும் இப்போது சூழலியல் சுற்றுலா, வனச் சுற்றுலா, வரலாற்றுச் சுற்றுலா, அறிவியல் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா எனப் பல வந்துவிட்டன.

அடர்ந்த காடு, மலை, அருவி, பறவை களின் ரீங்காரம், விலங்குகளின் தரிசனம், குறைவான மனித நடமாட்டம் போன்ற காரணங்களால் வனப் பகுதிக்குச் சுற்றுலா செல்ல பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். டிரெக்கிங் (மலையேற்றம்), கேம்பிங் (கூடாரத்தில் தங்கல்), ஹைக்கிங் (நீண்ட நடை) போன்ற நிகழ்வுகள் புதிய அனுபவங்களைத் தருவதோடு இயற்கையோடு இயற்கையாகச் சில நாள்களைக் கழித்த நிறைவையும் அளிக்கின்றன.

இதுபோன்ற சுற்றுலாக்களைப் பல நிறுவனங்கள் வனத்துறையின் அனுமதியோடு ஏற்பாடு செய்துவருகின்றன. பயணிகளோடு ஒரு பயிற்சியாளரையும் அனுப்பி வைக்கிறார்கள். வனத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்த இடம் பாதுகாப்பானது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் இந்தப் பயிற்சியாளர் களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அச்சமின்றி வனச் சுற்றுலா செல்கிறார்கள். அப்படி ஒரு கேம்பிங் பயிற்சியாளராக இருக்கிறார் லூனா.ஜெ.

“எனக்குப் பயணங்கள் மீது ஆர்வம் அதிகம். முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, கரோனா காலத்தில் வைல்டு லைஃப் டூரிசம் குறித்து ஒரு வருடப் படிப்பை மேற்கொண்டேன்.

சென்னை பாம்புப் பண்ணை, தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்றும் இணைந்து அளித்த பட்டயப் படிப்பு இது. பாம்பை எப்படிப் பிடிப்பது, முதலையை எப்படிக் கையாள்வது, எப்படிக் காட்டின் சூழலைக் குலைக்காமல் பாதுகாப்பாக உள்ளே சென்று வருவது என்றெல்லாம் கற்றுக்கொண்டேன். அதுதான் என்னை கேம்பிங் பயிற்சியாளராக மாற்றியது” என்கிறார் லூனா.

படிப்பை முடித்த பிறகு பயிற்சியாளராக எங்கே வேலை கிடைக்கிறது? - “வனச் சுற்றுலாவைப் பல நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன. அவர்களிடம் நாம் பயிற்சியாளராக இருக்க விரும்புவதைத் தெரிவித்துவிட வேண்டும். அவர்கள் ஏற்பாடு செய்யும் சுற்றுலாக்களில் நமக்கு நேரமும் விருப்பமும் இருந்தால், பயிற்சியாளராகச் செல்லலாம். நான் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால், மாதத்துக்கு இரண்டு முறைதான் இந்தப் பணியை ஏற்றுக்கொள்கிறேன்.”

வனச் சுற்றுலாவுக்குப் பெண்கள் வருகிறார்களா? - “ஆண்கள், பெண்கள் பேதமின்றி வருகிறார் கள். வயது வித்தியாசமின்றிப் பெண்கள் குழுக்களாகவும் வருகிறார்கள். இவர்களில் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி வருகிறவர்கள் பெண் பயிற்சியாளரை விரும்புகிறார்கள். அருவியில் குளிக்க, நீந்த ஆசை இருந்தாலும் பல பெண்கள் தயங்குவார்கள். அவர்களின் தயக்கத்தைப் போக்கி, ஆசையை நிறைவேற்றுவது பயிற்சியாளராக என்னுடைய பணி.”

எந்தெந்த இடங்களுக்கு நீங்கள் பயிற்சியாளராகச் சென்றிருக்கிறீர்கள்? - “ஆந்திரத்தில் தடா அருவிதான் நிறைய பேருக்குத் தெரியும். நாகலாபுரம் அருகில் இன்னும் நான்கைந்து சிறு அருவிகளும் உள்ளன. அங்கே இயற்கை வாழ்க்கை முறையை அனுபவிக்க ஒரு பண்ணை இருக்கிறது. பம்பு செட் குளியல், வீட்டுச் சாப்பாடு, மரத்துக்கு இடையில் தூளி கட்டித் தூக்கம் என்று நிம்மதியாகப் பொழுதைக் கழிக்கலாம்.

காட்டுக்குள்ளே நீண்ட தூரம் நடந்து செல்வது, அணைக்கட்டுப் பகுதியில் படகு ஓட்டுவது என்று உடலுக்கு வேலை கொடுத்தும் நேரத்தைச் செலவழிக்கலாம். ஏலகிரி போன்ற சில மலைகளில் சாகசப் பூங்காக்கள் உள்ளன.

வயநாடு போன்ற மலைகளில் கேம்பிங் செல்வதற்குச் செல்லும் ஜீப் பயணமே சாகசமாக இருக்கும். அதன் பிறகு மலையில் கூடாரத்தில் தங்கி, இரவில் நெருப்பு மூட்டி ஆடிப்பாடி மகிழ்வதெல்லாம் போனஸ்தான். அதிகாலை மலையேற்றம் செய்து சூரிய உதயம் பார்ப்பதெல்லாம் அற்புதமான அனுபவமாக இருக்கும்.”

வனச் சுற்றுலாவில் சாகசம் மட்டும்தானா? - “இல்லை. ஒருமுறை வனச் சுற்றுலா வந்தீர்கள் என்றால், வனத்தைப் பற்றிய புரிதல் உங்களுக்கு உண்டாகிவிடும். பளிச்சென்று உடை, பாடல் கேட்பது, குப்பை போடுவது, மது, புகை, வாசனை திரவியம் ஆகிய வற்றுக்குத் தடை.

பயணிகளின் பாதுகாப்பைப் போலவே விலங்குகளின் பாதுகாப்பும் காட்டின் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் நடந்துகொள்வதும் மிகவும் முக்கியம். அந்தந்தக் காட்டின், மலையின் வரலாற்றைச் சொல்வோம். விரும்பினால் கூடாரம் கட்டுவதற்குக்கூடச் சொல்லித் தருவோம்.”

சில இடங்களில் கூடாரம் மட்டுமன்றித் தனி அறைகள், குழுவாகத் தங்கும் காட்டேஜ்கள்கூட உள்ளன. முறையான தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிவறைகள் இருக்கும். எந்த இடத்தில், எத்தனை நாள், எப்படி நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதைப் பொறுத்துக் கட்டணம் அமையும்.

“ஒரே இடத்துக்கு மீண்டும் மீண்டும் செல்பவர்களும் உள்ளனர். மழைக்காலத்தில் நீங்கள் பார்க்கும் காட்சிகள் வெயில் காலத்தில் வேறு மாதிரி இருக்கும். நடு இரவில் குரங்குகளின் குரல்களைக் கேட்கலாம். அதிகாலையில் கூடாரத்தின் வாயிலில் மயில் காலை வணக்கமும் சொல்லலாம். வாழ்தல் இனிது. காட்டு அனுபவம் அதனினும் இனிது” என்கிறார் லூனா.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in