

பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோரின் புத்தகங்களை எப்பாடுபட்டாவது வாங்கிவிடுவார் அப்பா. பாடப் புத்தகங்களைவிட இவற்றைப் படிப்பதில் எனக்கு ஈடுபாடு உண்டாக அப்பாதான் காரணம்.
பள்ளியில் படித்த பாடங்கள் எல்லாம் மறந்துவிட்டன. கலைஞரின் கதைகளும் அண்ணாவின் கருத்தாழ மிக்க கட்டுரைகளும் பெரியாரின் சீர்திருத்தச் சிந்தனைகளும் என் மனதில் பதிந்துவிட்டன.
கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல் தமிழில் சிறுகதைகளின் வடிவம், பேசுபொருள், உத்தி இவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சமூக அரசியல் மாற்றங்கள், வாசக மனோபாவத்தில் ஏற்பட்டிருக்கும் பரிணாம வளர்ச்சி இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் கலைஞரின் எழுத்தில் இருக்கிறது. கதைகளில் அது மறைபொருளாகச் செயல்படுகிறது.
தாம் வாழ்ந்த நாளெல்லாம் இலக்கியம் பேசி, இலக்கியம் படைத்து, புதிய எழுத்தாளர்களுக்கு எழுத்தின் நுட்பங்களைக் கற்பித்த தஞ்சை ப்ரகாஷ், கலைஞரின் கதைகளை, எழுத்தை ஆணித்தரமாக நல்லிலக்கியத்தில் வைத்துக் கொண் டாடியவர்.
நவீன எழுத்தாளர்கள், பின் நவீனத்துவம் பேசுபவர்கள், ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் தடுமாறுபவர்கள், தத்துவப் பார்வை என்று சொல்லிக்கொண்டு தங்களுக்குத் தாங்கள் போட்டுக் கொண்ட அட்சதையில் தங்களின் பரிவாரங்களோடு பீடாதிபதிகளாகி விட்டவர்கள்...
இவர்கள்தாம் கலைஞரின் கதைகளைப் பிரச்சார எழுத்து என்றும் எதுகை மோனைப் பிதற்றல் என்றும் புறம்தள்ளி, இலக்கிய அந்தஸ்தைத் தர மறுத்து வந்திருக்கிறார்கள். தமிழக விமர்சக சாம்ராட்டுகளுக்குக் கலைஞரின் எழுத்து பிடிக்கவுமில்லை, பிடிபடவு மில்லை. கலைஞர் எழுத்தின் நுட்பத்தை உலகறிய எடுத்துரைத்தவர் இலங்கை எழுத்தாளர் மு.தளையசிங்கம் மட்டுமே.
இது கலைஞர் நூற்றாண்டு.
கலைஞரின் கதைகள் எல்லா வற்றையும் ஒன்றுசேர்த்துப் படிக்கும் ஆசையில் அவற்றைத் திரட்டுவதில் ஈடுபட்டேன். ஏறத்தாழ 40 கதைகள் இருக்கும். அவரது கதைகள் அனைத்தையும் செம்பதிப்பாகக் கொண்டுவர இதுவே தக்க தருணம்.
அணில் குஞ்சும் அயோத்தி ராமரும்: தொண்ணூறுகளில் கலைஞர் எழுதிய ‘அணில் குஞ்சு’ என்கிற கதை பாபர் மசூதி இடிப்பைப் பற்றிப் பேசுகிறது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் ஓர் இஸ்லாமியச் சிறுவன், பொதுக்கூட்ட ஒலிபெருக்கிகளில் பாபர் மசூதி இடிப்புப் பற்றிக் கேட்க நேர்கிறது.
பாபர் மசூதியை இடித்தது அநியாயம் என்று ஒரு சாராரும் ராமர் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்தது தவறல்ல என்று மற்றொரு சாராரும் பேசுவதைக் கேட்டு குழம்பிப் போகிறான்.
போகிற வழியில் ஒரு மரக் கிளையிலிருந்து அணில் குஞ்சொன்று கீழே விழுகிறது. அதை வீட்டில் வளர்ப்பதற்காக எடுத்துப் போகிறான். ஆனால், அணில் குஞ்சை வீட்டில் வளர்க்கச் சிறுவனின் தந்தை இடம்தரவில்லை. “இந்த அணில் குஞ்சு ராமபக்தன் என்று சொல்கிறார்கள். நாம் வளர்த்தால் பிரச்சினை வரும்.
இதைக் கொண்டுபோய் விட்டுவிடு” என்கிறார். மறுநாள் பையன் அணில் குஞ்சை நெஞ்சோடு அணைத்து எடுத்துப்போகிறான். எதிரில் வந்தவரிடம் தான் வளர்ப்பதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறுகிறான். “நீ எப்படியடா அணிலை வளர்க்கலாம்?” என்று அந்த மாற்று மதத்தவர் கேட்க, அங்கே சிறுவனின் தந்தை கூறியபடியே இரண்டு சாராரிடையே பெரும் சச்சரவு உருவாகிறது.
சிறுவனின் தந்தை அங்குவந்து, “அணில் குஞ்சைப் பத்திரமாகக் கீழே விட்டுவிட்டு வீட்டுக்குப் போ. இல்லாவிட்டால் இங்கே பத்துக் கொலைகள் விழுந்துவிடும்” என்று எச்சரிக்கிறார்.
பையன் அணில்குஞ்சை மெல்ல கீழே வைக்கிறான். எங்கிருந்தோ வந்த பருந்து அணில் குஞ்சைத் தூக்கிக்கொண்டு பறந்துவிடுகிறது.
மூளவிருந்த சண்டை நின்றுவிட்டது. இரண்டு சாராரும் கலைந்து சென்றனர். ஊரின் அமைதியை அணில்குஞ்சு காத்தது, தன் உயிர் தந்து என்று கதை முடியும்.
அணில் குஞ்சை ஒரு பாவமும் அறியாத மனிதர்களுக்கு உவமித்தும் மதவெறியைப் பருந்துக்கு உவமித்தும் அப்பாவி மனிதர்கள் மதவெறிக்கு இரையாவதைச் சித்தரிப்பது வாசகனைச் சிந்திக்க வைக்கிறது. ‘கதையின் நோக்கத்தைப் பூரணமாக உணர்ந்தவர் கலைஞர்’ என்கிற மு.தளையசிங்கத்தின் கூற்று மெய்ப்படுகிறது.
எழுத்தாளர் ஏகலைவனின் கதை: ஒரு பெரிய பத்திரிகையிலிருந்து கதை கேட்டு எழுத்தாளர் ஏகலைவனுக் குக் கடிதம் வந்திருக்கிறது. கதையைத் தேடிக் கடற்கரைக்குப் போகிறார். அங்கே காணும் காட்சிகளைக் கதையாக்க முயல்கிறார். ஆனாலும் அவை அவருக்கு மனநிறைவு தரவில்லை.
சுண்டல் விற்கிற பையனிடம் பேச்சு கொடுக்கிறார். சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்த அப்பா தீவிபத்தில் மாண்டு போனதையும் அம்மாவின் கை எரிந்துபோனதையும் இப்போது குடும்பத்தை இவனே காப்பாற்று வதாகவும் சொல்கிறான்.
சிறுவனின் வாழ்க்கையைக் கதையாக்க நினைக்கிறார் ஏகலைவன். அந்த நேரம் ஒரு சிறுவன் ஓடிவந்து, “டேய் உங்க அம்மா பஸ்சில் அடிபட்டுச் செத்துட்டாங்கடா” என்று கத்துகிறான்.
பையன் சுண்டல் பாத்திரத்தை எழுத்தாளர் கையில் கொடுத்துவிட்டு ஓடுகிறான்.
கையில் சுண்டல் பாத்திரத்துடன் நடக்கிறார் கதாசிரியர். கடற்கரை மணலில் ஒரு ஜோடி, “இந்தாய்யா, சுண்டல், முறுக்கு கொண்டா இங்கே” என்று கேட்கிறது.
எழுத்தாளர் நிற்கிறார். அவரிடம் அசைவில்லை.
“என்ன கூப்பிடுகிறேன்... சிலை மாதிரி நிக்கிறே...” என்று அதட்டுகிறது குரல்.
கதை தேடிவந்த கதாசிரியர் தானும் அந்தக் கதையின் பாத்திரமாக மாறி விட்டதாகக் கதை சூசகமாக முடிகிறது.
ஏகலைவன் கதை எனக்கு மிகவும் பிடித்ததற்குக் காரணம் கலைஞர் கதைகள் சிலவற்றைக் குறும்படமாக எடுத்தபோது, இக்கதையில் எழுத்தாளர் ஏகலைவனாக நான் நடித்திருந்தேன்.
குப்பைத் தொட்டி, சங்கிலிச்சாமி, ஏழை, வாழ முடியாதவர்கள், ஐயோ ராஜா போன்ற கதைகளின் காட்சிகள் எல்லாம் மனத்திரையில் திரைப்படமாக ஓடுகின்றன.
கலைஞர் நூற்றாண்டில் அவர் கதைகள் காணொளி வடிவில் புதுவடிவம் பெறும் முயற்சி கைகூட வேண்டும்.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com