

முன்பெல்லாம் தெருவில் நடந்தாலே ஆங்காங்கே பல விலங்குகள் தென்படும். இப்போதெல்லாம் நாய்களையும் பூனைகளையும் தவிர எந்த விலங்கையும் பெரிதாகப் பார்க்க முடிவதில்லை.
பெரும்பான்மையான ஊர்களின் செல்வமாக இருந்தவை மாடுகள்தாம். ஒவ்வொரு தெருவிலும் மாடு வளர்க்கும் ஒன்றிரண்டு வீடுகள் இருக்கும். தோட்டம் வைத்திருந்தவர்கள் வீட்டில் பெரும்பாலும் பசுக்களும், மாட்டுவண்டி வைத்திருந்த வர்கள் வீட்டில் வண்டிமாடுகளும் இருந் தன. ஏர் ஓட்டுவதற்காகச் சில வீடுகளில் காளை மாடுகளை வைத்திருப்பார்கள்.
வீடுகளில் பசு வளர்க்கும் பெண்கள், பகல் வேளையில் அவற்றை மாட்டு மந்தைக்கு அனுப்புவார்கள். மாடு மேய்ப்ப வர் அவற்றை மேய்ச்சல் நிலங்களுக்குக் கொண்டு சென்றுவிட்டு மாலையில் கொண்டுவருவார்.
மாடு வளர்ப்பதையே தொழிலாக வைத்தி ருந்தவர்கள் பசு, காளை மட்டுமல்லாமல் எருமை மாடுகளையும் வளர்த்தார்கள். ஊரில் பால்பண்ணை எனப்படும் கூட்டுறவுச் சங்கம் இருந்தது. பலர் மாட்டை அங்கே ஓட்டிக் கொண்டு போய், அங்கேயே பால் கறந்து, பால் சங்கத்திற்கு விற்பார்கள். உள்ளூர்த் தேவை போக மீதி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும். பால்காரர்கள் பால்பண்ணையில் பால் வாங்கி, வீடு வீடாகச் சென்று விற்பார்கள்.
ஒன்றிரண்டு மாடுகளை வைத்திருப்ப வர்கள், கிடைக்கும் பாலை அருகில் உள்ள வீடுகளுக்கு விற்பார்கள். அப்போது எருமைப் பால் விலை குறைவு என்கிற நிலை இருந்தது.
அதனால், பால் பண்ணையில் பசும்பாலுடன் எருமைப் பால் கலப்படம் செய்வார்கள் எனச் சொல்லி, வீடுகளில் பால் வாங்குபவர்கள் பலர் இருந்தார்கள். பிறகு எருமைப் பாலின் விலை பசும்பால் விலையைவிடக் கூடுதலானது.
தோட்டம் வைத்திருந்தவர்கள் மாடுகளை வைத்திருந்தார்கள் என்றால், தோப்பு வைத்திருந்தவர்கள் ஆடுகளை வைத்திருந்தனர். தோட்டம் செல்பவர்கள் கையில் மாட்டைப் பிடித்துக்கொண்டு செல்வதும், தோப்பு வைத்திருந்தவர்கள் கையில் ஆட்டைப் பிடித்துக்கொண்டு நிலத்திற்குச் செல்வதும் வழக்கமான நிகழ்வு.
கடுமையான பஞ்சக்காலத்தில் ஊரில் வெள்ளாடு வளர்க்கக் கூடாது எனக் கட்டுப்பாடு வைப்பார்கள். ஏனென்றால், உடை மரத்தில் உள்ள பசுமையைக்கூட வெள்ளாடு விட்டு வைக்காது. இதனால் ஊரில் உள்ள மரங்கள் அனைத்தும் அந்த ஆண்டே பட்டுப்போகும். மீண்டும் மீட்டுருவாக்க ஆண்டுகள் பல ஆகும். அப்படிப்பட்ட காலத்தில் செம்மறி ஆடு மட்டுமே வளர்ப்பார்கள்.
சில வீடுகளில் பன்றிகள் வளர்க்கப் பட்டன. சில வீடுகளில் கழுதைகள் நிற்கும். குட்டிக் கழுதைகள் மிகவும் அழகாக இருக்கும். சில வீடுகளில் நாய், பூனை வளர்ப்பார்கள். இவை அடைத்து வைக்கப்படுவதில்லை.
பல வீடுகளில் சாப்பிட்டு வாழுபவையாகவே பெரும்பாலும் இருந்தன. இவற்றை எல்லாம் விலைக்கு வாங்கி வளர்க்க மாட்டார்கள். அருகில் உள்ள வீடுகளில் கிடைக்கும் குட்டிகளை எடுத்து வளர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
நாங்கள் அணில்கூட வளர்த்திருக்கி றோம். பெரும்பாலும் கூண்டில் அடைத்து வளர்த்ததில்லை. அணில் சில நாள்கள் பழகினாலே வெளியே போய்விட்டு வீடு திரும்பிவிடும்.
- bhathilahar@gmail.com