

அப்போதெல்லாம் ஐந்து வயது நிறைவடைந்தால்தான் பள்ளியில் சேர்ப்பார்கள். ரொம்பவும் சேட்டை செய்யும் குழந்தைகளை, ‘பள்ளிக்கொடத்துல சேர்க்க வேண்டியதுதான்' என்று பயமுறுத்துவார்கள். அப்படிச் சொல் வதைக் கேட்டு வளரும் குழந்தை பள்ளிக்கூடம் என்றாலே பயந்துவிடும்.
நிஜமான பள்ளிக்கூடம் என்பது எவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் இருந் தாலும் பெற்றோர் அதன் மனதில் ஏற்றி வைத்திருக்கும் பிம்பம்தான் குழந்தையின் முன்னால் வந்து நிற்கும். இன்றிருப்பது போல எல்.கே.ஜி, யு.கே.ஜி. எல்லாம் கிடையாது. நேராக ஒண்ணாங்கிளாஸ்தான்.
ஐந்து வயதில் நான் ஒண்ணாங்கிளாஸ் சேர்ந்த முதல் நாளை மறக்கவே முடியாது. கரும்பலகையே ஓர் ஆச்சரியம். இருட்டைப் பிட்டு வைத்த மாதிரி இது ஏன் நிற்கிறது என்று யோசித்தேன். வகுப்பறை ஜில்லென்று காற்றோட்டமாக இருந்தது. சுவருக்குப் பதிலாக மூங்கில் பிளாச்சுகள். அவற்றின் இடைவெளி வழியாக வேடிக்கை பார்க்கலாம். அங்கிருந்த தரைப் பலகைகள் மீது என்னைப் போலவே மிரள மிரள சிரித்துக்கொண்டும் அழுதுகொண்டும் குழந்தைகள். டீச்சர் உள்ளே நுழைந்தார்.
எங்கள் எல்லாரையும் பார்த்து, ‘குட்மார்னிங் குழந்தைகளே’ என்றார் டீச்சர். நாங்கள் அமைதியாக உட்கார்ந் திருந்தோம். ‘பதிலுக்குக் குட்மார்னிங் சொல்லணும் குழுந்தைகளா’ என்று சொல்லித் தந்தார் ஆசிரியர். உடனே கோரஸாக குட்மார்னிங் என்கிற கூக்குரல் எழுந்தது.
வகுப்பறையின் மூங்கில் பிளாச்சு இடைவெளியில் எங்கள் பெற்றோரின் முகங்கள் தெரிந்தன. டீச்சர் வெளியே சென்று, ‘தயவுசெய்து வீட்டுக்குப் போங்கள். உங்கள் குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறோம்’ என்று உறுதிமொழி கொடுத்த பின்னர் ஒவ்வொருவரும் கலைந்து சென்றனர்.
டீச்சர் உள்ளே வந்து சாக்பீஸால் கரும்பலகையில் ஒரு காக்கை படம் வரைந்து, ‘இது என்ன பறவை?’ என்று கேட்டார். குழந்தைகள் டீச்சர் முகத்தைப் பயத்துடன் பார்த்தன. “இதோ பாருங்கள் உங்களுக்கெல்லாம் தெரிந்த காக்கை தான். இப்படிக் கரும்பலகையில் நான் பறவை, பூச்சி என்று என்ன வரைந்து காட்டினாலும் சொல்லணும்” என்றார்.
‘அ’ என்று எழுதினார்.
பக்கத்திலிருந்த பையன் என்னிடம், ‘இது என்ன பூச்சி’ என்று கேட்டான்.
‘‘அதுக்குப் பேரு ‘அ’’ என்றேன். எனக்கு வீட்டில் ஏற்கெனவே எழுதும் பயிற்சி கிடைத்ததால் என்னிடம், ஓர் அறிவாளி தோரணை வந்துவிட்டிருந்தது.
திடீரென்று டாண்... டாண்... என்று மணிச்சத்தம் கேட்டது. நான் வாழ்க்கையில் கேட்ட முதல் பள்ளி மணிச்சத்தம்.
எல்லாரும் வெளியே ஓடினோம். ஒரு சிறிய தண்டவாளத் துண்டிலிருந்து அந்த மணி ஒசை வெளிப்பட்டது. அதன் பெயர் ‘ஒண்ணுக்கு பெல்’. மத்தியானம் சாப்பாடு வேளையில் அடிப்பது ‘சாப்பாட்டு பெல்’. பள்ளிக்கூடம் முடிந்தபின் அடிப்பது ‘கடைசி பெல்’. இதெல்லாம் பின்னால்தான் தெரிந்தது.
தண்டவாளத் துண்டில் மணி அடிக்கும் வேலை என் நண்பன் ரங்கனிடம் தரப்பட்டது. தண்டவாளத்தில் ஓர் இரும்புத் துண்டால் மணி அடிப்பது ஒரு கலை. அது அவனுக்கு மட்டுமே தெரியும். நான் ஒரு தடவை முயற்சி செய்தேன். டாண் என்று பலவீனமான ஒற்றை மணிச்சத்தம் கேட்டதும் தலைமை ஆசிரியர் கோபத்துடன் வெளிவந்தார்.
“யார் இப்போ மணி அடிச்சது?”
“சும்மா அடிச்சிப் பார்த்தேன் சார்.”
தலைமை ஆசிரியரிடம் அன்று அடிவாங்கினேன். பள்ளி மணி அடிப்பதை விட்டுவிட்டேன்.
அடுத்தடுத்து ஆச்சரியங்கள் காத்திருந்தன. எல்லா வகுப்புக்கும் சட்டாம்பிள்ளைகள் இருந்தார்கள். எங்கள் வகுப்பு சட்டாம்பிள்ளை எதுக்கெடுத்தாலும் தலையில் குட்டுவான்.
மூக்குப்பொடி வாத்தியார் என்று ஒரு வாத்தியார் இருந்தார். மேஜைமீது தூங்கி வழிவார். அப்போதுதான் சட்டாம் பிள்ளையின் ராஜ்யம் நடக்கும்.
வாத்தியார் தூங்கும்போது நாங்கள் நைசாக வகுப்பைவிட்டு நழுவிக் குள்ளநரிப் பூச்சி பிடிக்கப் போவோம்! மைதானத்தில் உள்ள மரத்தடிகளில் வட்டம் வட்டமாக மண் குவியல்கள் இருக்கும். ஒவ்வொரு மண் குவியலுக்கு உள்ளேயும் குள்ளநரிப்பூச்சி இருக்கும். யார் அதிகம் குள்ளநரிப்பூச்சி பிடிப்பது என்பதில் எங்களுக்குள் போட்டி நடக்கும்.
நான் ஒருநாள் அம்மாவிடம், “ஒண்ணாங்கிளாஸ் படிச்சப்புறம் என்ன பண்ணுவாங்க?” என்று கேட்டேன்.
“பாஸ் ஆயிட்டா ரெண்டாங்கிளாஸ்ல போட்ருவாங்க!”
நான் பயந்துவிட்டேன். “ரெண்டாங் கிளாஸ்ல தூக்கிப் போட்டால், அடிபடாதா?’
“கொண்டுபோய் உட்கார வைப்பாங் கடா” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் அம்மா. தலைமை ஆசிரியர் அறையில் பால் பவுடர் மூட்டை மூட்டையாக அடுக்கி இருக்கும். எல்லாம் அமெரிக்க உதவியில் கிடைத்தது என்று பேசிக்கொள்வார்கள்.
பால்பவுடர் மதிய இடைவேளையில் பெரிய பெரிய வாளிகளில் கரைக்கப்பட்டு மாணவர்களுக்கு டம்ளர்களில் தரப்படும். எத்தனை தடவை வேண்டுமானாலும் வாங்கிக் குடிக்கலாம். பால்பவுடரை அப்படியே வாங்கியும் சாப்பிடுவோம். அதேபோல மதிய உணவு உப்புமா, சாதமும் சுவையாக இருக்கும்.
குழுப் படம்: ஆரம்பப் பள்ளியில் நான் பயின்றதன் மெளன சாட்சியாக ஒரு கறுப்பு வெள்ளைப் படம் புகைபடிந்து மிச்சமிருக்கிறது. காரை பெயர்ந்த பள்ளிக்கூடத்தின் பின்புறச் சுவரை ஒட்டிப் போடப்பட்ட பெஞ்சின் மீதும் கீழேயும் வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள்.
பெண்பிள்ளைகள் வரிசையில் கடைசியில் உட்கார்ந்து கொண்டிருப்பது தான் அமராவதி. கறுப்பு வெள்ளைப் படத்தில் காணவே முடியாது அமராவதியின் அழகை. சாயம்போன ஊதா பாவாடை சட்டையுடன்தான் பார்க்கவேண்டும். எப்போதும் என் தோள்மீது கைபோட்டுத் திரியும் குமரேசன் 60 வருடங்களாகத் தள்ளியே உட்கார்ந்திருக்கிறான் படத்தில்.
காணாமல் போன பள்ளி: நான் பயின்ற ஆரம்பப் பள்ளிக்கூடத்தைக் காண அண்மையில் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். மூங்கில் பிளாச்சுகளால் ஆன வகுப்பறைகள், நான் படித்த ஒண்ணாங்கிளாஸ், மதிய உணவு பரிமாறப்படும் மிக நீளமான வராந்தா, பால்பவுடர் டின்கள் அடுக்கிவைக்கப்பட்ட தலைமை ஆசிரியர் அறை ஒன்றையும் காணோம். என்னுடன் நடந்துவந்த தலைமை ஆசிரியரிடம் கேட்டேன், ‘பழைய பள்ளியைக் காண முடியவில்லையே?’ என்று.
ஒரு தகவல் பலகையைச் சுட்டிக்காட்டி னார். அரசு நிதி உதவியில் பள்ளி புதுப் பிக்கப்பட்டுள்ளது என்றது அறிவிப்புப் பலகை.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com