

எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மணியோசை கேட்கும். அந்தப் பள்ளியில் கூடுதலாகத் தறியோசையும் கேட்கிறது. இடம், சென்னை தி.நகரில் உள்ள செ.தெ. நாயகம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. கைத்தறியின் மரச்சட்டங்கள் ஒன்றுடன் இன்னொன்று மோதும் ஒலி, இசைபோல நம்மை ஈர்க்கிறது.
கல்வி மறுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள், கட்டணமின்றிக் கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1933இல் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் இது. திருநெல்வேலி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த செட்டிகுளம் தெய்வநாயகம் நிறுவிய பள்ளிகளில் இதுவும் ஒன்று. இவர் புகழ்பெற்ற நெஞ்சக நோய் மருத்துவர் செ.தெ.நெ.தெய்வநாயகத்தின் பாட்டனார்.
இந்தப் பள்ளியில் வழக்கமான பாடங்களுடன், நெசவும் நீண்ட காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. பல கல்வி நிறுவனங்களில் இத்தகைய சிறப்புப் பாடங்களுக்கான வகுப்புகள் ஒருகட்டத்தில் சம்பிரதாயமாகி முடிவுக்கு வந்துவிடும். இந்தப் பள்ளியில் நெசவு வகுப்புகள், உயிர்ப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
6 முதல் 8ஆம் வகுப்பு வரைக்குமான மாணவர்கள் நெசவு கற்கின்றனர். ஆசிரியர் விஸ்வநாதனுக்கு இந்தப் பள்ளியில் நெசவு கற்பிக்கும் பணியில் 30 ஆண்டு அனுபவம். அவர் தம் மாணவர்கள் புடைசூழ நம்மைத் தறிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றார்.
மொட்டைமாடியின் பாதிப் பரப்பை உள்ளடக்கிய விசாலமான ஓர் அறை. வெளிச் சத்தையும் காற்றையும் போதுமான அளவு அறை உள்வாங்குகிறது. அங்குதான் தறி அமைக்கப்பட்டுள்ளது. நூலை நூற்பதற்கான ராட்டை அருகிலேயே உள்ளது. கூடவே, நூல் டப்பாக்கள், ஒரு தட்டு நிறைய நூல்கண்டுகள், பாவு நூல் போன்றவையும் உள்ளன. மாணவர்கள் தினமும் வந்துசெல்வதற்கு அடையாளமாகக் கூடம், துலக்கமாகக் காணப்படுகிறது.
துணி நெய்வதற்குக் குறைந்தபட்சம் 20 மீட்டர் நீளமாவது கொண்ட பாவு நூல் தேவை. அவ்வளவு நீளத்துக்குப் பாவுபிடிக்க அந்த அறையில் இயலாது. விளையாட்டுத்திடலில் உள்ள கோகோ தூண்தான் அதற்குக் கைகொடுக்கிறது. கோகோ தூணுக்கும் இன்னொரு கம்பிக்குமாக நூலைச் சுற்றிப் பாவு தயார் செய்யப்படுகிறது.
“மாணவர்களுக்குப் புத்துணர்வு அளிப்பதற்கு விளையாட்டு வகுப்பு இருப்பதுபோல, எங்கள் பள்ளியில் கூடுதலாக நெசவு வகுப்பும் இருக்கிறது. தறியைக் கையாலும் காலாலும் இயக்குறதே ஒரு விளையாட்டு போலதான். இரண்டுவிதமான நூலைச் சேர்த்தும் பிரித்தும் நெய்வது, ஒரு புதிரை விடுவிக்குற வேலைக்குச் சமம்.
இதனால் அவர்களின் மூளை சுறுசுறுப்படையும். ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்... கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ன்னு சொல்வாங்க. நெசவு வகுப்புமூலம் மாணவர்களுக்கு ஒரு கைத்தொழிலுக்கான அடித்தளம் உரு வாக்கிக் கொடுத்துடறோம். இந்த வகுப்பறையில் உள்ள எந்த மாணவரையும் நீங்க கூப்பிடலாம். தறி பற்றி விவரமா சொல்றதோட, ஓட்டியும் காட்டுவார்” என்கிறார் விஸ்வநாதன்.
அவர் சொன்னதுதான் தாமதம். ‘ஐயா, நான் சொல்றேன்’, ‘நான் தறி ஓட்டுறேன்’, ‘நாங்க ராட்டை சுத்துறோம்’ என மாணவர்கள் முண்டியடித்தனர்.
எட்டாம் வகுப்புப் படிக்கும் கார்த்திகேயன், பாவு நூல் தயார் செய்வதிலிருந்து துணியாக்குவது வரையான நெசவின் கட்டங்களை நம்மிடம் பட்டியலிட்டார்.
மாணவர்கள் ஒவ்வொருவராகத் தறி மேசையில் அமர்ந்து சில நிமிடங்கள் நெய்து காட்டினர். கையால் சட்டத்தை இழுப்பதும் கால்களை மாற்றி மாற்றி பெடல் (மிதிகல்) மீது வைப்பதும் அவர்களுக்கு இயல்பாக வருகிறது. குறுக்கும் நெடுக்குமாக நூலிழைகள் நேர்த்தியாகப் பின்னுகின்றன.
“நாங்க நெய்வதை செல்போனில் பதிவு செஞ்சு, ஆசிரியர் எங்கப்பாவுக்கு அனுப்பினார். அந்த வீடியோ பார்த்து என் அப்பா பாராட்டினார்” என்கிற கார்த்திகேயன் முகத்தில் பெருமிதம்.
“எனக்கு நெசவு முதல்ல புரியல. ஆசிரியர் ஒவ்வொரு ஸ்டெப்பா பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க. இப்போ நெசவு எனக்கு நல்லா வருது” என்கிறார் ஏழாம் வகுப்பு மாணவரான தீபக்.
அதே வகுப்பில் படிக்கும் கோகுல், 12 நாள்களில் தறி ஓட்டக் கற்றுக்கொண்டதாகச் சொன்னார். “பாவு நூல் கோக்குறதுன்னா எனக்குப் பிடிக்கும். கீழே கிரவுண்ட்ல அங்கும் இங்கும் நடந்து பாவு நூல் தயார் பண்றது ஜாலியா இருக்கு” என்கிறார் இவர்.
எளிதாக இருக்கும்விதத்தில் இவர்களுக்குத் துண்டு நெய்வதற்குக் கற்றுத் தரப்படுகிறது. ஒன்றரை மீட்டர் நீளம் உள்ள ஒவ்வொரு துண்டும் 1200 நூலிழைகள் கொண்டது.
மெல்லிய நூல் பெரியவர்கள் நெய்வதற்கு ஏற்றது. அது அடிக்கடி அறுபட்டுவிடும் என்பதால், இவர்களுக்குச் சற்று தடித்த நூல் தரப்படுகிறது. ஒரு துண்டு நெய்வதற்கு 8 -10 வகுப்புகள் தேவைப்படுமாம். ஒரு மாதத்துக்குச் சராசரியாக 4 துண்டுகள் நெய்யப்படுகின்றன. விஸ்வநாதன் அலமாரியைத் திறந்து காட்டினார். அதில் துண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“இது எல்லாமே எங்க பசங்க நெய்தது. எங்க பள்ளி விழாக்களுக்கு வருகை தரும் விருந்தினரைக் கௌர விக்குறதுக்கு நாங்க வெளியே துண்டு வாங்குறதில்லை. எங்க மாணவர்கள் நெய்த துண்டுகளைத்தான் போர்த்துறோம். ‘பிஞ்சுக்கரங்கள் நெய்த பொன்னாடைகள் இவை’ன்னு நாங்க அறிவிக்கிறப்போ, விருந்தினர்கள் ரொம்பவே ஆச்சரியப்படுவாங்க. சிலர் துண்டுகளை விலைக்கு வாங்கக்கூட விரும்புறாங்க. தறிக்கூடத்தைப் பார்க்கவும் நிறைய பேர் வர்றாங்க” என்கிறார் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி உமாபதி.
விளையாட்டுப்போல ஒரு கைத் தொழிலுக்கான அடித்தளத்தை அறிந்து கொள்ளும் மாணவர்கள்; அவர்களுக்குக் கற்பிப்பதைத் தவம்போலச் செய்யும் ஆசிரியர்; உழைப்பின் சுவையை இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பள்ளிக்கூட நிர்வாகம். இந்தப் பயணம் இனிதே தொடரட்டும்!
நெசவுக்கலை வகுப்பு நீடிக்குமா? - மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நெசவு வகுப்பு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இது தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்துப் பள்ளியின் செயலாளரும் அண்ணா பல்கலைக் கழக முன்னாள் கணிதப் பேராசிரியருமான சண்முகத்திடம் கேட்டோம்.
“எங்கள் நிறுவனம் அரசு உதவிபெறும் பள்ளி என்பதால், ஆசிரியர்களுக்கான ஊதியம் அரசால் வழங்கப்படுகிறது. பிற செலவுகள் அனைத்தையும் நிர்வாகம் ஏற்று நடத்துகிறது. நெசவுப் பாடம், தொடக்கத்திலிருந்து எங்கள் நிர்வாகத்தின் முயற்சியில் நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற சிறப்புப் பாடத்துக்கான ஆசிரியர் ஓய்வுபெறும் வரை மட்டுமே அவருக்கு அரசு ஊதியம் வழங்கும். அவர் ஓய்வுபெற்றுவிட்டால், புதிய ஆசிரியருக்கென ஊதியம் ஒதுக்கீடு செய்வதை அரசு நிறுத்திவிடும். அவருக்கு ஊதியம் வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு.
ஏற்கெனவே பல செலவுகளை நன்கொடை மூலமாகவும் எங்களது சொந்தப் பணத்தைப் போட்டும் சமாளித்து வருகிறோம். புதிதாகப் பொறுப்பேற்கும் நெசவு ஆசிரியருக்கு ஊதியம் வழங்குவது எங்களால் இயலாத காரியம். தற்போதைய ஆசிரியர் இன்னும் ஓராண்டுக்குப் பின்னர் ஓய்வு பெற்றுவிடுவார். ஊதியப் பிரச்சினையால் நாங்கள் புதிய ஆசிரியரை நியமிக்க இயலாது. பள்ளிக்கல்வித் துறை, நெசவு வகுப்பு தொடர்ந்து நடக்கும்வகையில் அதன் ஆசிரியருக்கு ஊதியத்தைத் தொடர்ந்து வழங்க முன்வர வேண்டும்” என்கிறார்.
- anandchelliah@hindutamil.co.in