

இலங்கைத் தமிழர்கள் மூலம் சொதி, சம்பல், ஆப்பம், இடியாப்பம் போன்ற உணவு வகைகளைப் பற்றியும் அவற்றின் சுவை பற்றியும் கேள்விப்பட்டிருந்தாலும் இலங்கை உணவு வகைகளை ருசித்ததில்லை. சென்னையில் பெசன்ட் நகரில் ‘தி கண்டியன்’ என்கிற உணவகத்தில் இலங்கையின் பிரத்யேக உணவு வகைகள் கிடைக்கின்றன என்கிற தகவல் அறிந்ததும் சென்றோம்.
இரவு 8 மணிக்கு மாடியில் அமைந்திருந்த உணவகத்துக்கு இரும்புப் படிக்கட்டுகளில் ஏறி உள்ளே நுழைந்தோம். ஓர் அறையில் 4 பேர் அமரக்கூடிய பெரிய மேஜையும் 2 பேர் அமரக்கூடிய சிறிய மேஜைகள் இரண்டும் இருந்தன. அவற்றில் ஏற்கெனவே ஆள்கள் அமர்ந்து, உணவுக்காகக் காத்திருந்தனர்.
உணவகத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து, எங்களை இன்னோர் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே 3 பெரிய மேஜைகள் இருந்தன. சுவர் முழுவதும் இலங்கை ஓவியங்கள் தீட்டப்பட்டி ருந்தன. ஆடம்பரம் இன்றி அமைதியாக இருந்தது அந்த அறை. சற்று நேரத்தில் ஒருவர் வந்து மெனுவைக் கொடுத்து, ஆர்டர் எடுத்தார்.
தமிழ்நாடு, இந்திய உணவு வகைகள் இருந்தாலும் நாங்கள் இலங்கை உணவைச் சாப்பிடவே வந்திருப்பதால் ஆப்பம், முட்டை ஆப்பம், சொதியை ஆர்டர் செய்தோம். என்ன சொதி என்று கேட்டதும் விழித்தோம். அதுவரை நாங்கள் காய்கறிகளால் செய்யப்பட்ட சொதியை மட்டுமே சாப்பிட்டிருந்தோம். காய்கறி சொதி, மீன் சொதி, கோழி சொதி, இறால் சொதி எனப் பல சொதிகள் இருப்பதாகச் சொன்னார்கள். காய்கறி சொதியும் கோழி சொதியும் ஆர்டர் செய்தோம்.
சிறிது நேரத்தில் சுடச்சுட ஆப்பங்களும் சொதியும் வந்து சேர்ந்தன. சிவப்பரிசியில் செய்த ஆப்பமும் சொதியும் சிறந்த ‘காம்போ’வாக இருந்தன. கோழி சொதியில் வாடை எதுவும் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. சுவையும் அபாரம். ஆப்பம் சாப்பிட்ட பிறகு இடியாப்பமும் சம்பலும் கேட்டோம்.
சம்பலிலும் சைவம், அசைவம் இரண்டும் இருந்தன. சற்று நேரக் காத்திருப்புக்குப் பிறகு, ஆவிபறக்கச் சிவப்பு இடியாப்பம் வந்து சேர்ந்தது. சூடான இடியாப்பத்தில் சொதியைச் சேர்த்துச் சாப்பிட்டால், சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்! சம்பலும் சுவையில் குறை வைக்கவில்லை.
கூட்டம் அதிகமில்லை. மேஜை காலியாகும்போது யாராவது வந்துவிடுகிறார்கள். உணவகத்தில் இருப்பது போன்று தோன்றாமல், அரட்டையடித்தபடியே சாப்பிட்டது நல்ல அனுபவமாக இருந்தது. நேரம் இருப்பவர்கள் மட்டுமே இந்த உணவகத்துக்குச் செல்வது நல்லது.