தொழில் புதிது: நுண்ணறி அபிநயா

தொழில் புதிது: நுண்ணறி அபிநயா
Updated on
2 min read

‘செய்யறிவு’ என அழைக்கப்படும் ஜெனரேட்டிவ் ஏஐ, எல்லாத் துறைகளிலும் கூடிய விரைவில் வந்துவிடும். உள்ளூர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வளித்து, கடைக்கோடி மனிதனும் பயன்படுத்த முடிந்தால்தான் புதிய தொழில்நுட்பம் செழுமையடைகிறது. அதற்கான முயற்சிகளில் இறங்கும் பலரில் ஒருவர்தான் ‘நுண்ணறி லேப்ஸ்’ இணை நிறுவனர் அபிநயா மகேந்திரன்.

பொள்ளாச்சி அருகில் உள்ள சோமந்துறை சித்தூரில் பிறந்து வளர்ந்தவர். எம்.டெக் படித்து, பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றால் யாரோ விதை ஊன்றி, உரமிட்டு, வேர்களைப் பலமாக்கும் வேலைகளைப் பார்த்திருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு நம் அனைவருக்கும் பலனளித்துச் சிறப்பாகச் செயல்பட தரவுகள்தாம் வேர்கள். அந்த டேட்டா சயின்ஸ் துறையில்தான் அபிநயா பணிபுரிகிறார். பெருந்தொற்றுக் காலத்தில் ஊர் திரும்பியபோது இங்கே தொழில்துறைக்கும் கல்வித் துறைக்கும் இடையே இருக்கும் இடை வெளியை அவரால் உணர முடிந்தது.

“பெங்களூருவில் நிறைய பயிலரங்குகள் நடந்து கொண்டே இருப்பதால் மாணவர்கள் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்வது எளிது. நம்மூரில் அது குறைவாக இருந்ததைக் கண்டு தன்னார்வலராக ‘ஏஐ தமிழ்நாடு கம்யூனிட்டி’யில் இணைந்துகொண்டேன்.

தனிப்பட்ட ஆர்வத்தால் தமிழ்நாட்டில் இப்படிச் சில டெக்னாலஜி கம்யூனிட்டிகள் நடத்தப்படுகின்றன. ஏஐ தமிழ்நாடு முதலில் கோவையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. சமீபத்தில் சேலம், திருச்சி, சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது.

விரைவில் சிறு நகரங்களிலும் கவனம் செலுத்த உள்ளது. செயற்கை நுண்ணறிவில் ஆர்வமுள்ள துறைவல்லுநர்கள், பேராசிரியர்கள், தொழில் வல்லுநர்கள், மொழி வல்லுநர்கள், மாணவர்கள் எல்லாரும் இணைந்த கம்யூனிட்டி இது” என்கிறார் அபிநயா.

லாப நோக்கமற்ற அமைப்பென்பதால் அனைத்துமே ஓபன் சோர்ஸ். ஒவ்வொருவரும் தங்கள் துறை சார்ந்த பங்களிப்பைத் தருவதன் மூலம் கிடைக்கும் பலன்களைப் பொதுவில் வைக்கிறார்கள், அனைவரின் பங்களிப்பில் செழிக்கும் மாந்தோப்பின் பழங்களை யார் வேண்டுமானாலும் பறித்து உண்ணலாம் என்பதுபோல.

கம்யூனிட்டியில் உள்ளோர், பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று ஏஐ பற்றிய வகுப்புகள், பயிலரங்குகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். தமிழ் ஜிபிடி, மொழி சார்ந்த ஏஐ பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதால் தமிழ்நாடு அரசு அபிநயா உள்பட நான்கு பேருக்கு இந்த கம்யூனிட்டியில் இருந்து கணித்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பளித்தது.

எந்தப் பொதுநலப் பணியும் ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பி வரும். ஓபன் சோர்ஸ் பணிகளால் இந்த கம்யூனிட்டியில் இருப்பவர்களின் வேலைவாய்ப்பு பெருகுகிறது. சொந்த நிறுவனம் ஆரம்பிக்க முடிகிறது. அதற்குத் தேவையான டேட்டா ஓபன் சோர்ஸ் பணிகள் தயாராக இருக்கின்றன.

இங்கே பயிற்சி பெற்றவர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கிறார்கள். 2000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதால் நெட்வொர்க் விரிந்து பரவிவருகிறது. ‘நுண்ணறி லேப்’ஸும் அப்படித் தொடங்கப்பட்டதுதான்.

“பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி தெளிக்கும் ஏஐ கருவிகள் மாதிரி, சமூகத்துக்குப் பயனுள்ள கண்டுபிடிப்புகளில் ஈடுபடுகிறோம். கம்பெனிகளுக்கு ஏஐஎம்எல் தீர்வுகளை அளிக்கிறோம்.

ஏஐ பயிற்சிகள் கொடுக்கிறோம். இடைநிறுத்தம் செய்து மீண்டும் வேலைக்குச் சேரும் பெண்கள் எனில் 50 சதவீதம் குறைவான கட்டணம் பெறுகிறோம். எதைச் செய்தாலும் சமூக நோக்கத்தோடு செய்கிறோம். தொடர்ந்து ஏஐ தமிழ்நாடு மூலம் கட்டணமில்லாப் பயிற்சிகளிலும் எங்கள் பங்களிப்பைக் கொடுக்கிறோம்” என்கிறார் அபிநயா.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளை ‘ஸ்டெம் (STEM)’ என்று குறிப்பிடுகிறோம். ஸ்டெம் துறைகளில் சாதிக்கும் பெண்களைப் பற்றிய தரவுகள் பொதுவெளியில் பரவலாக இல்லை.

ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் இணைந்து ‘ஹிடன் வாய்சஸ்’ என்கிற புராஜெக்ட் தொடங்கி விக்கிபீடியாவில் ஸ்டெம் துறைப் பெண்கள் பற்றிய பக்கங்களை அதிகப்படுத்துகின்றனர். இதிலும் தன்னுடைய பங்களிப்பைச் செலுத்தி வருகிறார் அபிநயா.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in