

குட்டித் தூக்கம்
விழித்தேன்
வசந்தம்
போய்விட்டது! - ஜென் கவிதை
“தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்று என்னிடம் வருகிற வயதான நோயாளிகள் புலம்புகிறார்கள்” என்றார் என் மருத்துவ நண்பர்.
நான் பேசாமல் இருந்தேன்.
“உங்கள் நிலைமை என்ன?”
“எனக்கும் தூக்கம் வருவதில்லை.”
“அதற்காகக் கவலைப்படாதீர்கள். வாழ்க்கை முறையில் சின்ன மாற்றம் போதும். நன்றாகத் தூக்கம் வரும். காந்தி ஐந்து நிமிஷம் தூங்கி யெழுந்து உற்சாகத்துடன் வேலை பார்ப்பாராம்!”
“இதெல்லாம் விதிவிலக்கு அல்லவா?”
“பொதுப்பணியில் ஈடுபட்டால் தூக்கம் ஒரு பொருட்டல்ல. காந்தி போன்றவர்கள் தமது உயிரியல் கடிகாரத்தைத் தங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வார்கள். தூக்கத்தின் அளவு முக்கியமல்ல. தூக்கத்தின் தரம் முக்கியம்.”
“நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ் வொரு நாளும் தாம் கைராட்டையில் நிர்ணயித்த சிட்டைகளின் அளவுப்படி நூற்ற பிறகே தூங்கப்போவாராம். ஒருநாள் இரவு மூன்று மணிவரை நூற்றிருக்கிறார். நான்கு மணிக்கே எழுந்துவிட்டாராம். அதே பழைய உற்சாகத்துடன் அவர் இருந்ததுதான் ஆச்சரியம்!”
“காசு, பணம், புகழ், வீடு, குழந்தைகள் என்று எல்லாவற்றையும் நினைத்து உழன்று கொண்டிருந்தால் தூக்கம் வராது.”
நான் குடும்பஸ்தன் ஆச்சே, என் தூக்கத்திற்கு மருந்து வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.
வீட்டுத் திண்ணையில் வியாழக்கிழமை சந்நியாசி உட்கார்ந்திருந்தார். வியாழன்தோறும் வருவதால் இந்தப் பெயரை நாங்கள் சூட்டியிருந்தோம்.
என்னைப் பார்த்ததும் ‘தூங்காது தூங்கி சுகம் பெறுவதெக்காலம்’ என்று பாடினார்.
மருத்துவரிடம் பேசியது இவருக்கு எப்படித் தெரிந்தது?
“துறவிகள், ஞானிகள் தூங்குவது உண்டா?” என்று அவரிடம் கேட்டேன்.
“உண்டு. அதற்குப் பெயர் அறிதுயில்!”
“அப்படியென்றால்?”
“சுற்றி நடப்பதைக் கவனித்தபடியே கண்மூடித் தூங்குவதுபோல் காட்சி தருவார்கள்.”
“எங்களைப் போன்ற சம்சாரிகள் எப்படித் தூங்குவது?”
“ஆகாரம் அரை, தூக்கம் அரைக்கால், மைதுனம் வீசம், பயம் பூஜ்யம் என்பது வள்ளலார் வாக்கு. சித்தி வளாகத்தில் செய்த உபதேசத்தில் தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் நீடிக்கும் என்று கூறுகிறார்.”
கும்பகர்ணத் தூக்கம்
கும்பகர்ணனின் தூக்கம் பற்றி இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கும்பகர்ணன் ஆறு மாதங்கள் வரை தூங்கிவிட்டு, இடையில் ஒருநாள் மட்டும் விழித்திருப்பார். பின்னர் மீண்டும் தூங்கிவிடுவார்.
கும்பகர்ணனைத் தூக்கத்திலிருந்து எழுப்புகிற வர்ணனை இப்படிப் போகிறது.
‘பெரிய பாம்பொன்று சீறுவதுபோல் அவன் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான். கும்பகர்ணனை எழுப்பப் பலரும் சேர்ந்து கூச்சலிட்டனர். அவன் காதருகே சங்குகளை ஊதினர். பேரிகை, தம்பட்ட ஒலிகளாலும் அவனை எழுப்ப முடியவில்லை. இரும்பு உலக்கையால் அவனைத் தாக்கினர். ஆயிரம் யானைகளை அவன்மீது நடக்கவிட்டனர். அவன் உடல் மெல்ல அசைந்தது.’
கம்பர், அவனது உறக்கத்தைக் கவிநயமும் தத்துவமும் கலந்து தமிழுக்குத் தந்திருக்கிறார்.
உறங்குகின்ற கும்பகன்ன!
உங்கள்மாய
வாழ்வு எலாம்
இறங்குகின்றது! இன்றுகாண்
எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்குபோல வில்பிடித்த காலதூதர்
கையிலே
உறங்குவாய் உறங்குவாய்
இனிக்கிடந்து உறங்குவாய்!
உறங்குவது போலும் சாக்காடு
‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி/விழிப்பது போலும் பிறப்பு’ என்கிறார் திருவள்ளுவர்.
தூக்கத்திற்கும் மரணத்திற்கும் பெரிய வேறுபாடில்லை. பிறப்பதற்கு முன் என்னவாக இருந்தோம் எனத் தெரியாது. இறந்த பிறகு என்ன ஆகப் போகிறோம் என்பதும் தெரியாது.
உறங்கும்போது நாம் நம்மை உணர்வ தில்லை. அதைப்போலப் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப் பட்ட காலத்தை நாம் உணர்வதில்லை. அதுதான் சிருஷ்டி ரகசியம். ஆகவே தூக்கம் என்பது இறப்புக்கான ஒத்திகை. தற்காலிக இறப்பு.
வினோபா பாவே ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்லும் முன் ‘எல்லாருக்கும் குட்பை’ என்று சொல்லிவிட்டுத்தான் செல்வா ராம். ஏனென்று ஓர் அன்பர் கேட்டார், ‘நாளை விழிப்பது நிச்சயம் இல்லை. ஆகவே குட்பை சொல்லி விடுகிறேன்’ என்பாராம் சிரித்தபடி.
ஆயர்பாடி மாளிகையில்: ‘ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்கு கின்றான் தாலேலோ’ என்கிற எஸ்பிபியின் பாடலைக் கேட்டு மயங்காதோர் உண்டா? தூக்கம் பற்றிய பழைய தலைமுறை திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போதே நமக்கும் தூக்கம் வந்துவிடும்.
தஞ்சை அரண்மனையில் தர்பார் ஹால் செல்லும் வழியில் ஒரு பெரிய மண்டப விதானம் இப்போதும் இருக்கிறது. மராட்டியர் காலத்தைச் சேர்ந்த இவ்விதானத்துக்குள் தண்ணென்று ஒரு குளிர்ச்சி நிலவும். உள்ளே இரண்டு புறமும் திண்ணைபோல் கட்டப்பட்ட மேடைகளில் எப்போதும் ஏழெட்டுப் பேர் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பார்கள். கவலை களை மறந்து அங்கே நானும் கண்ணயர ஆசைப்பட்டதுண்டு.
தூக்கத்தின் பெருமையைப் பாடவந்த புதுக்கவிஞர் அழகிய சிங்கர் தமது கவிதையில், ‘எவ்வளவோ இருக்கிறதுதான். இருந்துவிட்டுப் போகட்டும்’ என்கிற தொனியில் ‘எனக்குத் தூக்கம் வருகிறது. எழுதி என்ன பயன்... எனக்குத் தூக்கம் வருகிறது. நான் தூங்கப் போகிறேன்’ என்று சொல்லிக்கொண்டே போகிறார். பைஜூயி என்கிற சீனக் கவிஞர் ஓய்வு பெற்றபிறகு தூக்கத்தையே பிரதானமாக வைத்து எழுதிய கவிதையை நினைவூட்டுகிறார் அழகிய சிங்கர்.
வள்ளிக்குத் தூக்கமா? - பாரதியின் கந்தன் வள்ளி வசன கவிதையில், பாரதி தன் வீட்டெதிரே போட்டிருந்த பந்தலில் தொங்கிய இரண்டு துண்டுக் கயிறுகளுடன் பேசிக்கொண்டிருப்பார். கந்தன், வள்ளி என்று இரண்டு கயிறுகள்.
பாரதி சொற்களில் சொல்வதானால் ‘இரண்டும் ஒன்றை இன்னொன்று காமப் பார்வைகளைப் பார்த்துக்கொண்டும் புன்சிரிப்பு சிரித்துக்கொண்டும் வேடிக்கைப் பேச்சு பேசிக்கொண்டும் ரசப்போக்கிலே இருந்தன. இவ்வாறு நெடும்பொழுது சென்றது.’
பாரதி பக்கத்து வீட்டுக்குப் போய் தண்ணீர் அருந்திவிட்டு வருகிறார். திரும்பிவந்து பார்த்தால் வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது.
‘அம்மா நல்ல நித்திரைபோல இருக்கிறதே’ என்று கந்தனிடம் கேட்கிறார்.
அந்த க்ஷணத்தில் கயிற்றிலிருந்து வெளிப்படுகிறான் காற்றுத்தேவன்.
காற்றுத்தேவன் சொல்கிறான், ‘மகனே, ஏதடா கேட்டாய்... அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப்போய்விட்டது. நான் பிராணசக்தி. என்னுடனே உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவில்லாதது சவம். நான் பிராணன். என்னால்தான் அச்சிறிய கயிறு உயிர்த்திருந்தது. அது களைப்பெய்தியவுடன் அதனை உறங்க, இறக்க விட்டுவிட்டேன். துயிலும் சாவுதான். சாவும் துயிலே.’
துயிலும் இனிதாகும்!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com