

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பு வீடுகளிலும் கடைகளிலும் உள்ள சுவர்களில் சாட்சியாக உறைந்துபோயிருந்தது.
ஒன்றிரண்டு சாலைகள், சிறிய பாலங்கள் நிலைகுலைந்து போயிருந்தன. “சாலைக்கு மேல் ஆறடி உயரத்துக்கு வெள்ள நீர் இருந்தது” என்றார் ஓட்டுநர். மற்றபடி மனிதர்களும் இயற்கையும் மீண்டெழுந்திருந்ததைக் காண நிம்மதியாக இருந்தது. ஆங்காங்கே வயல்களில் பயிர்கள் செழித்திருந்தன.
பயிரிடாத இடங்களில் மாடுகளும் வெண் கொக்குகளும் உணவு தேடிக்கொண்டிருந்தன. திடீரென்று மிகப் பெரிய குளம் ஒன்று சாலையின் இடதுபக்கம் தெரிந்தது. குளம் முழுக்க வெண் தாமரைகளும் ஊதா அல்லிகளும் பூத்திருந்தன. சட்டென்று காரிலிருந்து இறங்கினோம். தலைநகரில் வசிக்கும் எங்களுக்கு ஒன்றிரண்டு தாமரைப் பூக்களைப் பறிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், இறங்கிப் பறிக்கும் அளவுக்குத் தாமரைகள் கரைக்கு நெருக்கத்தில் இல்லை.
அப்போதுதான் குளத்தில் ஒருவர் தாமரை மலர்களைப் பறிப்பது தெரிந்தது. அவர் உடலைச் சுற்றி ஒரு பெரிய கூடையைக் கட்டிக்கொண்டிருந்தார். பூக்களைப் பறித்துப் பறித்து அந்தக் கூடையில் போட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று சில தாமரைகளையும் அல்லிகளையும் பறித்துக் கொடுக்கு மாறு கேட்டோம். உடனே சம்மதித்தார்.
சில நிமிடங் களில் கைநிறைய தாமரை, அல்லி மலர்களோடு எங்களிடம் வந்தார். விலை கேட்டோம். 50 ரூபாய் கொடுக்கச் சொன்னார். சென்னையில் ஒரு தாமரையின் விலையை யோசித்தபோது, அவர் கொடுத்த பூக்களுக்கு விலை மிக மிகக் குறைவாக இருந்தது. அவரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தோம். அவர் சில்லறையைத் தேடினார். “நீங்கள் கொடுத்த பூக்களுக்கான சரியான விலையைத்தான் கொடுத்திருக்கிறோம்” என்றோம்.
சில நொடிகள் யோசித்தவர், ஒரு பை தருவதாகச் சொல்லி குளக்கரைக்குச் சென்றார். திரும்பி வரும்போது ஏற்கெனவே கொடுத்த தாமரை மலர்கள் அளவுக்கு மீண்டும் மலர்களைக் கொண்டுவந்து கொடுத்தார்.
அவரால் அந்த மலர்களுக்கு நாங்கள் கொடுத்த விலையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! அவ்வளவு மலர்களை வைத்து நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று மறுத்தோம்.
ஆனாலும் நாங்கள் சொல்வதை அவர் பொருள்படுத்தவே இல்லை. பூக்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் குளத்தை நோக்கிச் சென்றார். நன்றி என்று உரக்கக் கத்தினோம். தலையை ஆட்டிக்கொண்டே தண்ணீருக்குள் இறங்கினார். எதிர்பாராமல் சந்தித்த ஒரு மனிதர் எங்கள் பயணத்தில் முக்கியமானவராக மாறிப்போனார்!