பொங்கிவரும் புது வெள்ளம்: வாழ்வை வளமாக்கும் அமிர்தம்!

பொங்கிவரும் புது வெள்ளம்: வாழ்வை வளமாக்கும் அமிர்தம்!
Updated on
2 min read

இன்னும் மங்காமல் அந்தக் காட்சி அப்படியே மனதில் இருக்கிறது. ஆற்றோரமாக நுரைபொங்க ஓடிவரும் புது நீர். வாழ்வின் சிக்கல்களில் அகப்படாத அந்த வயதில் ஏற்பட்ட அனுபவம் கடைசிவரை பசுமையாக அலையடித்துக்கொண்டே இருக்கும்!

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. எண்பதுகளில் மேட்டூர் அணையில் நீர்திறப்பு ஜூன் 12ஆம் தேதி தவறாமல் நடந்துவிடும். சில ஆண்டுகளில் மாதமும் தேதியும் தள்ளிப்போகும். அதுவும் பருவமழை பொய்த்துப்போனால் நீர்வரத்து குறைந்து, அணையின் நடுவில் கோயில் கோபுரம் தெரியும். தஞ்சாவூர் விவசாயிகளும் நிலைமையைப் புரிந்துகொண்டு மெல்ல விவசாயப் பணிகளைச் செய்யத் தொடங்குவார்கள்.

மே மாதத்தில் வீடுகளில் எருக்குழிகளைத் தோண்டி, வயல்களுக்குப் பாரவண்டிகள் மூலம் எடுத்துச் சென்று எரு அடிப்பார்கள். விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, என்னவெல்லாம் செய்து நிலத்தை வளமாக்க முடியுமோ அவற்றை எல்லாம் செய்துபார்ப்பார்கள். இன்றுவரை அந்தப் பழக்கம் ஊர் பக்கம் தொடர்கிறது.

எல்லாம் சரிதான். ஆனால், மேட்டூர் அணை திறக்காமல் இங்கே ஒரு வேலையும் செய்ய முடியாது. தினசரி பத்திரிகைகளில், ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் நீர் திறப்பு தொடர்பான செய்திகளைக் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். எங்களுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லை. நீர் திறந்தால் முசிரியம் கிராமம் வரை நடந்து சென்று, பாண்டவையாற்றில் அலைபுரண்டு வரும் புதுத் தண்ணீரை வரவேற்கும் தருணத்திற்காகக் காத்திருப்போம்!

கொரடாச்சேரி பக்கம் சென்றவர்கள் யாராவது வந்து தகவல் சொன்னால்தான் தண்ணீர் வருவது தெரியும். அதுதான் ஊருக்குப் பக்கத்தில் உள்ள சிறு நகரம். தீபாவளிக்குப் புதுத் துணி எடுப்பது முதல், பொங்கலுக்கு வெல்லம், கரும்பு வாங்குவது வரை அந்த ஊரை நம்பித்தான் இருந்தோம்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு, பத்து நாள்களில் ஊருக்குத் தண்ணீர் வந்துவிடும். அப்படி ஒருவர் வந்து சொன்னதும், இதுதான் தக்க சமயம் என்று நண்பர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து புறப்படுவோம். ஆற்று மணலில் விளையாடிக்கொண்டே பக்கத்து கிராமமான முசிரியம் சென்றுவிடுவோம். புதுத் தண்ணீர் வருவதைப் பார்க்கவும் வரவேற்கவும் வணங்கவும் சுத்துப்பட்டு கிராம மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

சில நேரம் நள்ளிரவில் ஆற்றில் புது நீர் வந்துவிடும். விடிந்தால்தான் தண்ணீர் வந்ததே தெரியும். பகலில் வந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம். அதுவும் பள்ளி விடுமுறை நாளில் வந்தால், எந்த நேரமாக இருந்தாலும் ஓடிச் சென்றுவிடுவோம். எங்களைப் போன்ற வயதுள்ள பையன்களும் பெண்களும் ஆற்றில் இறங்கி, ஆவலுடன் புதுநீருக்காகக் காத்திருப்போம். அதுதான் வாழ்வை வளமாக்கும் அமிர்தம். அதுதான் எங்களுக்கு வரம்தரும் சாமி.

நெஞ்சு படபடக்கக் காத்திருப்போம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் வரும் சத்தம் கேட்கும். அங்குள்ள சிறார்கள் ஊரில் உள்ள மற்றவர்களுக்குத் தகவலைத் தெரிவிப்பார்கள். புதுநீர் நுரைபொங்க வேகமாக ஓடிவரும். வறண்டு கிடந்த ஆற்றில் நீர் நிறைந்ததும் நண்டுகளும் பூச்சிகளும் வெளியே வரும். காய்ந்து கிடந்த சருகுகள், மரக்கிளைகள் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு புதுநீர் ஓடும்.

முசிரியத்தைத் தொட்டதும் நுரை பொங்க ஓடிவரும் நீரை அழைத்துக்கொண்டே எங்கள் ஊருக்குச் செல்வோம். இடையிடையே அந்தந்த ஊர் மக்களும் சிறார்களும் புதுத் தண்ணீரை உற்சாகம் பொங்க வரவேற்பார்கள். வாழைப் பழம், வெற்றிலைப் பாக்கு, பூ எல்லாம் வைத்துச் சூடமேற்றி பெண்கள் வரவேற்கும் காட்சிகள் மனக்கண்களில் தளும்பி நிற்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in