

பிரபலமான ஒரு கோயிலுக்கு அண்மையில் சென்றிருந்தேன். கோயிலின் வாசலில் முதியவர் ஒருவர், வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். பலரும் அலட்சியப் பார்வையுடன் அவரைக் கடந்து சென்றனர். வெகு சிலரே கையிலிருந்த சில்லறையைப் போட்டுவிட்டுப் போனார்கள்.
கிடைத்த சில்லறையை எடுத்துக்கொண்டு, எதிரே இருந்த உணவகத்துக்குச் சென்றார் அந்தப் பெரியவர். இட்லிகளை வாங்கிக்கொண்டு, தன் பழைய இடத்திற்கே வந்து அமர்ந்தார். சாப்பிட அவர் பொட்டலத்தைப் பிரித்ததும் எங்கிருந்தோ பறந்துவந்த காகங்கள், அந்தப் பெரியவரின் அருகில் அமர்ந்துகொண்டு, ‘கா கா’ என்று கரைந்தன.
பரிவோடு அந்தக் காகங்களைக் கண்ட முதியவர், “என்னடா, உங்களுக்கும் பசிக்குதா?” என்று கேட்டுவிட்டு, இட்லிகளைப் பிட்டு, சாம்பாரில் நனைத்து, காகங்களுக்குப் போட ஆரம்பித்தார். அந்தக் காகங்களோடு மேலும் சில காகங்களும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தன.
முதியவர் சிரித்துக்கொண்டே, “என்ன, உங்களோட கூட்டத்தை எல்லாம் சாப்பிடக் கூப்பிட்டீங்களா?” என்று கேட்டபடி இரண்டு இட்லிகளையும் காகங்களுக்கே போட்டுவிட்டார்! வயிறு நிறைய சாப்பிட்ட காகங்களைப் பார்த்த முதியவரின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்!
தன் பசிக்குச் சாப்பிடாத சோகம் துளியும் அவர் முகத்தில் தெரியவில்லை. காகங்களைப் பசியாற்றிய மகிழ்ச்சியே அவர் முகத்தில் எஞ்சி நின்றது.
இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. பிறரிடம் யாசகம் பெற்றுச் சாப்பிடுபவராக இருந்தாலும் இன்னொரு ஜீவனின் பசியைக் கண்டு பொறுக்க முடியாமல், தன் உணவை வழங்கிய அந்தப் பெரியவர் என் மதிப்புக்குரியவராக உயர்ந்து நின்றார்!
அவரைப் போல் நம்மில் எத்தனை பேர் குறைந்தபட்ச மனித நேயத்துடன் நடந்துகொள்கிறோம் என்கிற கேள்வி என் முன் வந்துநின்றது. தோற்றவருக்கு எத்தனை பேர் தோள் கொடுக்கிறோம்? யாசிப்பவருக்கு எத்தனை பேர் உதவி செய்கிறோம்?
ஏழையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறான் என்று சொல்லிக்கொண்டு, அந்த ஏழைக்கு இல்லை என்று சொல்வதில் அர்த்தம் எதுவும் இல்லை.
-ஏ.மூர்த்தி