

அவள் வீட்டில்
என் ஞாபகமாய்
சுற்றுச் சுவரேறி
காய்த்து நிற்கிறது
அன்றொரு நாள்
அவளுக்கு
நான் தந்த மாம்பழம்
மரப்பாச்சி பொம்மைகளுக்கு
கல்யாணம் செய்துவைத்தபடி
இன்றதன் நிழலில் விளையாடுகின்றன
அவளது குழந்தைகள்.
- பழநிபாரதி
அயல்நாடுகளில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பொம்மைகள் கொள்முதல் செய்ய ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகச் செய்தி கூறுகிறது. நாட்டில் பொம்மை உற்பத்தி புத்துயிர் பெறும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
இந்தச் செய்தி பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய கவிதையை நினைவூட்டுகிறது.
‘குடியரசுத் தலைவராக ஒரு குழந்தையை
நியமித்தார்கள்
நாடெங்கும் பொம்மை உற்பத்தியைப் பெருக்குமாறு
உத்தரவிட்டது குழந்தை.
போதுமான அளவு பொம்மைகள் இல்லாததுதான்
உங்கள் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்
என்று அறிவித்தது குழந்தை...
வேறென்ன உத்தரவு என்று வாய்பொத்திக் கேட்டுப்
புடை சூழ்ந்த அதிகாரிகளையும்
அமைச்சர்களையும் வழிவிடச் சொல்லி
தன் பொம்மையோடு
விளையாடப் போய்விட்டது குழந்தை!’
முயல் பொம்மை: தெருவோடு போய்க் கொண்டிருந்தபொம்மை விற்பவரைக் கூப்பிட்டேன். திண்ணையில் பொம்மைக் கூடையை இறக்கிவைத்தார்.
ஒவ்வொரு பொம்மைக்கும் யானைவிலை, குதிரை விலை சொன்னார். பொம்மைகளும் சுமார் ரகம்தான். வர்ணங்களும் மங்கல்தான். “நான் வாங்கி விக்கிறவன் சாமி. பொம்மை செய்யிறவன் இல்ல” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொண்டிருந்தார்.
தனியாக பேப்பரில் சுற்றிய முயல் பொம்மை தத்ரூபமாக இருந்தது. என் பேரன் ரொம்ப நாளாக முயல் பொம்மை கேட்டுக்கொண்டிருந்தான். வாங்கிவிட வேண்டியதுதான்.
“அந்த முயல் பொம்மை என்ன விலை?”
“அது விக்கிறது இல்லீங்க. என் கொளந்தைக்குக் கொண்டு போறேன். அவனுக்கு முயல் பொம்மைன்னா ரொம்ப இஷ்டம். பயபுள்ளைக்குச் சொரம்ங்க...”
நூறு ரூபாய் நோட்டைப் பார்த்ததும், பொம்மையை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.
பணத்தையும் பொம்மையையும் கொடுத்து, “உன் குழந்தைக்குத்தான்” என்றேன். குழந்தைக்குப் பொம்மை வேண்டும். யாருடைய குழந்தை என்பது முக்கியம் அல்ல.
சாலை ஓரம் நிற்கும் பொம்மைகள்: சாலை ஓரம் விற்பனைக்கு நிற்க வைத்திருக்கும் பொம்மைகள், வாங்குபவரை எதிர்பார்ப்பதைப் பார்த்து மனம் வலிக்கும். நடக்காவிட்டாலும் புழுதி படிந்திருக்கிறது அவற்றின் கால்களில். எல்லா பொம்மைகளுக்கும் வயிறு காலியாகவே இருக்கிறது. கிருஷ்ணனோ கம்சனோ, சிங்கமோ புலியோ, சிறுத்தையோ மானோ எந்த பொம்மையாக இருந்தாலும் சாயங்காலமானால் கூடைக்குள்தான் ஐக்கியமாக வேண்டும், பேதங்கள் மறந்து.
ஆதரவற்ற பொம்மைகள்: சீனா பொம்மை, சிங்கப்பூர் பொம்மை, சாவி கொடுத்தால் பாடும் பொம்மை, பறக்கும் பொம்மை, பேசும் பொம்மை, கண் சிமிட்டும் பொம்மை எல்லாம் வந்த பிறகு பழைய காலத்து மரப்பாச்சி பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை எல்லாம் ஆதரிப்பார் இன்றிக் கிடக்கின்றன. குழந்தைகள் இவற்றைக் கைவிட்டுவிட்டன. அரிதாகக் கொலு வரிசையில் மரப்பாச்சி பொம்மையைப் பார்க்கும்போது, மடியில் வைத்துக்கொள்ளத் தோன்றும்.
பொய்மை, மெய்மை இரண்டும் சேர்ந்ததுதான் பொம்மை என்கிறார் ஒரு புலவர். அதாவது ஒருவர் கண்ணனாகப் பார்ப்பதை, மற்றொருவர் களிமண்ணாகப் பார்க்கிறார். ஆகவே இரண்டுமே ஒன்றான அதன் பெயர்தான் பொம்மை.
மரப்பாச்சி பொம்மைகள்: கருங்காலி மரத்திலும் செம்மரத்திலும் செய்யப்படும் கரும்பழுப்பு நிற மரப்பாச்சி பொம்மைகளைக் குழந்தைகள் முத்தமிடுகின்றன. கருங்காலி மரத்தின் மருத்துவக்குணம் குழந்தைகளின் உடல் நலம் காக்கிறது என்று சொல்வார்கள். ரசாயனம் பூசப்பட்ட சீன பொம்மைகள் குழந்தைகளின் உடல் நலத்துக்கு அச்சுறுத்தல் என்று அரசு எச்சரிக்கிறது. ஆந்திர மாநிலம் கொண்டம்பள்ளியில் இப்போதும் மரப்பாச்சி பொம்மைகள் தயாரிக்கப் படுகின்றன.
பொம்மைக்காரத் தெரு: காஞ்சிபுரத்தில் பொம்மைக்காரத் தெரு என்று ஒரு தெருவே இருக்கிறது. இங்கே பொம்மை தயாரிக்கும் தொழிலில் 120 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. களிமண், காகிதக்கூழைப் பயன்படுத்தி, தங்கள் கற்பனைகளுக்குப் பொம்மை வடிவம் கொடுக்கிறார்கள் இங்குள்ள கலைஞர்கள். கொலு பொம்மைகள், பெரிய விநாயகர் பொம்மைகள் மட்டுமன்றி, கோயில்களில் காணப்படும் சுதை பொம்மைகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளையும் அந்த மண் பொம்மைகள் மீது இருந்து வரும் வண்ணங்களின் வாசனையையும் மறக்க முடியுமா? அந்தப் பொம்மைகளுக்கு இன்று மவுசு இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், வாழ்க்கை நம்மை எப்படி உருட்டிவிட்டாலும் மீண்டெழுந்து அமர்ந்துவிடும். தன்னம்பிக்கையைச் சொல்லித்தரும் தஞ்சாவூர் பொம்மைகளின் தத்துவம் அருமையானது.
மண்குதிரைகள்: பண்ருட்டியிலும் புதுவையில் உள்ள குயவர்பாளையத்திலும் சுடுமண் குதிரை பொம்மைகள் செய்யும் கலைஞர்கள் வசிக்கிறார்கள். இத்தகைய மண் குதிரைகள் செய்வதில் நிபுணரான முனுசாமி புதுவையைச் சேர்ந்தவர். இவருக்கு அரசு பத்ம, கலைமாமணிப் பட்டங்கள் வழங்கிக் கெளரவித்துள்ளது.
எங்கே என் பொம்மைகள்? என் அமெரிக்க நண்பர் எரிக் மில்லர் ஆய்வுக்காக இந்தியாவந்திருந்தார். சென்னையில் எங்கள் வீட்டுக்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் என் மகன் வீறிட்டு அழ ஆரம்பித்துவிட்டான். எவ்வளவோ தின்பண்டங்கள் கொடுத்தும் அழுகை நின்றபாடில்லை.
எரிக் மில்லர் சட்டென்று தன் பையைத் திறந்து இரண்டு பழுப்புநிற சிங்க பொம்மைகளை எடுத்துக் கொடுத்தார். ஒன்று அம்மாவாம். மற்றொன்று அதன் குட்டியாம். அவ்வளவுதான் அழுகை சட்டென்று நின்றுவிட்டது. அந்தப் பொம்மைகளை வாங்கிக் கொண்டு தன் அறைக்குள் ஓடிவிட்டான்.
எரிக் சிரித்தார். “பரவாயில்லை. அவனிடமே இருக்கட்டும். அடுத்த முறை வரும்போது வாங்கிக்கொள்கிறேன்”.
அடுத்த சந்திப்பு பத்தாண்டுகள் கழித்து நிகழ்ந்தது.
குழந்தை பெரியவனாகிவிட்டான். எரிக் மில்லரின் முன்சிகை நரைத்திருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி, “எங்கே என் பொம்மைகள்?”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. வீடு மாற்றும்போது தொலைந்து விட்டது. உண்மையைச் சொல்லித்தான் தீரவேண்டும்.
“மன்னிக்க வேண்டும். அதுபோன்ற பொம்மைகள் இங்கேயே கிடைக்கின்றன. நான் புதிதாக வாங்கித் தந்துவிடுகிறேன்.”
“உங்களால் முடியாது. சாகும் தருவாயில் என் அம்மா என்னிடம் கொடுத்த விலை மதிப்பில்லாத சொத்து, அந்த இரண்டு பொம்மைகள்தாம். நிச்சயம் அவை காணாமல் போயிருக்காது.”
“பின்னே?”
“அவை என் அம்மாவைத் தேடிப் போயிருக்கும்!”
(பேச்சு தொடரும்)