திண்ணைப் பேச்சு 39: தயாராக இருங்கள்!

திண்ணைப் பேச்சு 39: தயாராக இருங்கள்!
Updated on
3 min read

‘தயாராக இருங்கள்’ என்பது சாரணர் இயக்கத்தின் நோக்கம். பள்ளிக்கூடத்தில் ஸ்கவுட் மாஸ்டராக இருந்தார் அப்பா. பள்ளி மைதானத்தில் சாரணர் சீருடையில் நாங்கள் ராணுவ வீரர்கள்போல் அணிவகுத்துச் செல்வோம். எங்கள் தொப்பிகளை ஒற்றை ரோஜா குஞ்சலம் அலங்கரிக்கும்.

அவர் சொல்லச் சொல்ல நாங்கள் திருப்பிச் சொல்லும் வாசகங்கள் நன்றாக நினைவிருக்கின்றன.

1.யாவருக்கும் கீழ்ப்படிந்து நடப்பேன்.

2. என் கடமைகளை உரிய நேரத்தில் செய் வேன் - பிறருக்கு உதவுவதே பெரும் கடமை.

3.விருப்பத்துடன் வேலை செய் வேன்.

4. உடலை வலிமை செய்வேன்.

5. உடல்நலம் காப்பேன்.

6. எப்போதும் விழிப்புடன் இருப்பேன்.

கடைசியாக உரத்த குரலில் அவர் முழங்குவார்.

“தயாராக இருங்கள். எப்போதும் எது வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். Be prepared!”

ஒவ்வொரு வாசகத்துக்கும் ஒரு கதை சொல்வார். கீழ்ப்படிதலுக்கு உதாரண மாக அவர் சொன்ன காசா பிளாங்கா கதையை மறக்கவே முடியாது.

ஒரு கப்பல் கேப்டனின் மகன் காசா பிளாங்கா. கப்பல் பார்க்க ஆசைப்பட்ட அவனை அழைத்துச் சென்றார். கப்பல் புறப்படும் நேரம் அவனை ஓரிடத்தில் இருந்த நாற்காலியில் உட்காரவைத்து, நான் சொல்லும்வரை இங்கிருந்து நகரக் கூடாது என்று தன் வேலைகளைப் பார்க்கச் சென்றார்.

நடுக்கடலில் கப்பல் தீப்பற்றிக்கொண்டது. பலரும் கடலில் குதித்துத் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காசா பிளாங்காவின் அப்பா இறந்துவிடுகிறார். எல்லாரும் காசாபிளாங்காவைத் தப்பிக்கச் சொல்லிக் கத்துகிறார்கள். உயிர்காக்கும் படகு காத்திருக்கிறது. காசா பிளாங்கா மறுத்து விடுகிறான். அப்பா வந்து சொன்னால்தான் வருவேன் என்று சொல்லிவிட்டு, கப்பலோடு எரிந்து சாம்பலாகிறான்.

சாரணர் இயக்கம் என்பது வீரநடை போட்டுச் செல்லும் உடற்பயிற்சி அல்ல. பிரச்சினைகள் எது வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வாழ்க்கை முறை. அப்பா கடைசிவரை ஒரு சாரணராகவே வாழ்ந்தார். ‘சாரணிய வாழ்க்கை முறை’யை நாங்கள்தாம் கைவிட்டு விட்டோம்.

அற்ப விஷயங்கள் என்று நாம் நினைப்பவற்றை அக்கறையோடு செய்து முடிப்பது அவர் வழக்கம். தனது கடிதங்களைத் தானே அஞ்சல் பெட்டியில் சேர்ப்பார். கைராட்டையில் தானே நூல்நூற்று, காதி வஸ்திராலயத்தில் கொடுத்து சட்டை தைத்து, அணிந்து கொள்வார்.

குண்டூசியிலிருந்து கடப்பாரை வரை அவர் கைவசம் எப்போதும் இருக்கும். “ஒரு நல்ல சாரணியரைப் பார்த்தாலே தெரிய வேண்டும். அப்படி ஓர் ஒழுங்கு உடம்பிலும் மனதிலும் துலங்க வேண்டும்” என்பார்.

எளிமையான வேலைகளுக்குப் பிறரை எதிர்பார்க்காது நாமே செய்வதற்குச் சாரணியம் கற்றுத்தந்தது. அப்பாவுக்கு முப்பது வகையான முடிச்சுகளைப் போடத் தெரியும். அந்த முடிச்சுகளை அவ்வளவு லேசாக அவிழ்த்துவிட முடியாது.

பொட்டலம் கட்டுவதிலும் அவர் சமர்த்தர். இட்லி போன்ற சிற்றுண்டி வகைகள், கட்டுச்சாத வகைகளை அவற்றின் தன்மைக்கேற்ப அவிழ்ந்துவிடாமல் பொட்டலம் கட்டுவார். எல்லாம் சாரணர் இயக் கத்தில் அவர் கற்றவை, கற்பித்தவை.

பாடப் புத்தகங் களுக்கு அட்டை போடுவது ஒரு கலை. அப்பா அதில் நிபுணர். அவர் அருகில் இருந்து கவனித்தபோதும் இன்றுவரை நான் கற்றுக் கொள்ள முடியவில்லை. ஸ்குரூ டிரைவர், ஸ்பானர், ஆணிகள், கம்பி, வயர் துண்டுகள் ஆகியவற்றை ஒரு தகரப் பெட்டியில் போட்டு வைத்திருப்பார். பழைய குடையைக்கூட அவர் பல காலம் பாதுகாத்து வந்தார். குடை ரிப்பேர்காரர் எங்கள் வீட்டுப் புங்கமர நிழலில்தான் முகாமிடுவார்.

மின்சார வசதி இல்லாத கிராமத்தில் வசித்தோம். அரிக்கேன் விளக்குகள் துடைப்பதை ஒரு தியானம்போல் செய்வார். அதில் திரி ஏற்றித் தீபச்சுடரின் மஞ்சள் வெளிச்சம் வீடு பூராவும் நிறையும்படி செய்வார்.

எந்த வேலையாக இருந்தாலும் அதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது சாரணியக் கருத்து. எடுத்துக்காட்டாக, காந்தியின் வாழ்க் கையிலிருந்து இரண்டு சம்பவங்கள்.

கூழாங்கல் எங்கே? - காந்தி கிராமங்களில் கால்நடையாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊர் செல்வதற்கான ஆயத்தங்களை ஆசிரமவாசிகள் பிரித்துக் கொண்டனர். காந்தி அவ்வாறு செல்லும்போது, குளியலின்போது அவர் பயன்படுத்தும் சிறிய கூழாங்கல்லை எடுத்துவைக்க அவருடைய உதவியாளர் மறந்துவிட்டார். இரவுதான் காந்தி கூழாங்கல் இல்லை என்பதைக் கவனித்தார்.

கூழாங்கல்லைத் தேடி எடுத்து வருமாறு குக்கிராமத்துக்கு அந்தப் பெண்ணைத் தனியாக அனுப்பினார். அந்தப் பெண்ணும் எடுத்து வந்துவிட்டார். காந்தி சொன்னார்: “எப்போதும் துணிவுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். அதற்கான பாடம் இது!”

சிறிய பென்சில்: காந்தி பயணத்தின்போது அவரது உடைமைகளில் ஒரு சிறிய பென்சில் காணாமல் போய்விட்டது. அதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், காந்தி அந்தப் பென்சில்தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.

அதற்கு அவர் சொன்ன காரணம்: “சென்னை சென்றபோது ஜி. நடேசன் என்கிற அன்பர் வீட்டில் தங்கியிருந்தேன். அவரது பேரன் எனக்குப் பரிசாக அந்த பென்சிலைக் கொடுத்தான். எவ்வளவு விலை உயர்ந்த பென்சிலும் எனக்கு வேண்டாம். அந்தப் பென்சிலைக் கொண்டுவாருங்கள்!”

காந்தியின் சீடர்கள் கஷ்டப்பட்டு பென்சிலைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்து தந்தார்கள். பிறகுதான் காந்தி எழுத ஆரம்பித்தார்.

எளிய பொருள்களின் மீது இமாலய மதிப்பு கொள்ளவேண்டும் என்பதை இவ்வாறு உணர்த்தினார் மகாத்மா. சாரணியக் கருத்துகள் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தாலும் சாரணிய நோக்கம் எனக்குப் பிடித்தமானது.

தயாராக இருங்கள்!

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in