

கண்கவர் வண்ணங் களில், அழகான வடிவங்களில் மேசைப் பொருள்கள், விளக்குகள், தட்டுகள், கோப்பைகளை நீங்களே தயாரிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? முடியும் என்கிறார் செராமிக் பாண்டங்களை உருவாக்கும் ரெசினா. தொழில்முறை மண்பாண்டம் தயாரிக்கும் முறையிலிருந்து சற்று வேறுபடுகிறது ‘ஸ்டுடியோ பாட்டரி’ முறை.
சென்னையைச் சேர்ந்த ரெசினா பொறியியல் முடித்தவர். கலை, கைவினைப் பொருள்கள் தயாரிப்பதில் கொண்ட ஆர்வத்தால், மென்பொருள் வேலையைச் செய்துகொண்டே மண்பாண்டங்கள் தயாரிப்பு குறித்த படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஆரம்பத்தில் சிறிய அளவிலான பொருள்களைத் தயாரித்து வந்தவர், 2022இல் மென்பொருள் வேலை யைத் துறந்து முழு நேரமாக செராமிக் பொருள்களை உருவாக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். ‘பாட்டரிகாரி’ என்கிற இன்ஸ்டகிராம் பக்கத்தை நிறுவி, அவர் தயாரிக்கும் செராமிக் பாண்டங்களை விற்பனை செய்கிறார்.
“வழக்கமான மண்பாண்டங்கள் தயாரிக்கும் முறையைப் போல் அல்லாமல் சற்று எளிமையாக செராமிக் பொருள்கள் தயாரிப்பது ‘ஸ்டுடியோ பாட்டரி’ முறையில் சாத்தியம். பொருள்கள் செய்வதற்கான மூலப் பொருள்கள், வடிவமைப்புக்கான சக்கரம், நெருப்புக்கான கருவிகள் போன்ற வற்றைக் கொண்ட சிறிய பகுதிதான் ‘ஸ்டுடியோ’.
இதைப் பயன்படுத்திக் கோப்பைகள், குவளைகள், தட்டுகள் எனத் தேவைக்கேற்பப் பொருள்களை உருவாக்கலாம். மண்பாண்டங்கள்போல் அல்லாமல், வெவ்வேறு வண்ணங்களில் ‘ஸ்டுடியோ பாட்டரி’ முறையில் பொருள்களை உருவாக்கலாம் என்பதால் இவை தனித்துவம் பெறுகின்றன.
அலங்காரப் பொருள்கள், சமையல் அடுக்குப் பாத்திரங்கள், உணவுப் பாத்திரங்கள், பரிசுப் பொருள்கள், விளக்குகள் எனப் பல்வேறு வகையான செராமிக் பொருள்களைத் தயாரிக்கலாம். சிறு தொழிலில் ஈடுபட விரும்பும் பெண்கள் மத்தியில் ‘ஸ்டுடியோ பாட்டரி’ முறை மிகப் பிரபலம்.
சக்கரம், சூளை போன்ற பொருள்கள் அடங்கிய அமைப்பை செட் செய்ய சுமார் 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகலாம். ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் நீங்களே ஒரு சிறிய பகுதியை செட் செய்து உங்களது தொழிலை ஆரம்பிக்கலாம்” என்றார்.
கவனிக்க வேண்டியவை: “ஒரு செராமிக் பொருளைச் செய்துமுடிக்க மூன்று வாரங்கள் ஆகலாம். தொடர் பயிற்சியும் பொறுமையும் புதுமைகளை உருவாக்கும் முனைப்பும் இருந்தால் செராமிக் பொருள்கள் உருவாக்குவதில் நிபுணத்துவம் பெறலாம். செராமிக் தயாரிப்புப் பணிகளை யூடியூப் போன்ற தளங்களைப் பார்த்துச் சுயமாகக் கற்றுக்கொள்ளலாம் என்றாலும் இதில் நிபுணத்துவம் பெற முறையான படிப்பு அவசியம்.
மண்பாண்டங்கள், செராமிக் தயாரிப்புக்கான சிறப்புச் சான்றிதழ் படிப்புகளைச் சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. வேறு பணியில், படிப்பில் கவனம் செலுத்தியபடி இது போன்ற குறுகிய காலப் படிப்புகளைப் படிப்பதன் மூலம் கூடுதலாக ஒரு புதிய திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
அது உங்களை ஒரு தொழில்முனைவோராக மாற்றவும் வாய்ப்புள்ளது. உங்களது கற்பனைத் திறனை மெருகேற்றவும் கைவினைக் கலையை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவும் செராமிக் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடலாம். ஆர்வமும் முயற்சியும் இருந்தால் நீங்களும் ஒரு ‘ஸ்டுடியோ பாட்டரி’யை உருவாக்கலாம்” என்கிறார் ரெசினா.