

‘நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை...’ என்கிற ‘சிகப்பு ரோஜாக்கள்’ படப் பாடலைக் கேட்கும்போது படபடக்கும் அந்தப் பெண் திரைக்கலைஞரின் இமைகளோடு சேர்த்து ஓராயிரம் நினைவுச் சிறகுகளின் ஓசை மனதிற்குள் கேட்கும். அவற்றில் ஒன்று பள்ளிப் பருவம்.
தாயின் கருப்பைக்குள் இருந்த வெதுவெதுப்பை இரண்டு இடங்களில் என் மனம் கண்டடையும். பூமியின் முதல் காற்றைச் சுவாசித்த என் ஊருக்குள் நுழைகிற போதும், பள்ளி வளாகத்திற்குள் நுழைகிற போதும் ஏற்படுகிற சுகமே அலாதியானது.
பள்ளியில் படித்த காலத்திலேயே கவிதை, கதை என எழுத ஆரம்பித்துவிட்டேன். என்னுடன் பயின்ற சக மாணவர்கள் இளமையின் ஊஞ்சலில் ஆடியபடி இருக்க, அவர்களுக்குக் காதல் கவிதைகள் எழுதித் தரும் பணியை நான் சிரமேற்கொண்டிருந்தேன்.
இதற்கு ஒரு செட் பரோட்டா, ஆம்லெட் எனக் கவிதையின் நீளத்துக்கு ஏற்ப சன்மானமாகப் பெற்றுக்கொள்வேன். காதல் வெற்றி பெற்றால் சுக்கா, வறுவல் என்று எண்ணிக்கை அதிகமாகும். இதில் எனக்குப் பிடித்த மாணவியர் என்றால், கவிதை வரிகளின் எண்ணிக்கையும் அழகும் அதிகரித்துவிடும்.
பக்கத்துக் கிராமத்தில் இருந்து புதிய மாணவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பில் சேர்ந்திருந்தான். ‘நிழல்கள்’ திரைப்படத்தின் கதாநாயகனைப் போன்ற தோற்றமும் அதே பாணியில் சிகை அலங்காரமும் வைத்திருந்தான். அவன் பெயரும் அந்தக் கதாநாயகனின் பெயராகவும் அமைந்திருந்தது இனிய ஆச்சரியம்.
எல்லாரையும் தொற்றியிருந்த காதல் அவனையும் பற்றிக்கொண்டுவிட்டது. வெட்கமேறிய முகத்துடன் ஒருநாள் என்னிடம் வந்தான். பார்த்தவுடனே புரிந்துவிட்டது, இன்றைக்கு பரோட்டா, ஆம்லெட் உறுதி என்று.
ஆள் யாரு என்று அவனிடம் கேட்டேன். முதல் இரண்டு வரிசை மகளிருக்கும், அடுத்து ஆண்களுக்கும் என ஒதுக்கப்பட்டிருந்தது. நான் ஆண்களுக்கான முதல் வரிசை பெஞ்ச். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த மாணவியைச் சுட்டு விரலால் காண்பித்தான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.
அந்த மாணவிக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட போட்டி. அவள் தினமும் ஒவ்வொரு நிறத்தில் செருகிவரும் செம்பருத்திப் பூவுக்கே பல கவிதைகள் எழுதி, நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.
அவனிடம் அந்தப் பெண்ணுக்குக் கவிதை கொடுத்தே ஆக வேண்டுமா என்று கேட்டேன். அவன் கோபத்துடன் என்னைப் பார்த்தான். அவனைச் சமாதானப்படுத்தும் விதத்தில், “நீ பரோட்டாகூட வாங்கித் தர வேண்டாம். கவிதை எழுதிக் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன்.
இரண்டு நாள்கள் மெளனமாக இருந்தான். மூன்றாவது நாள் முக மலர்ச்சியுடன் வந்தான். காரணம் கேட்டேன். தன்னைப் பார்த்து அவள் சிரிப்பதாகச் சொன்னான். அவனுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அடுத்த கவிதை கேட்டான். நான் திகைத்தேன். இரண்டு கவிதைகளுக்கும் சேர்த்து பரோட்டா, ஆம்லெட், சுக்கா வாங்கித் தருவதாகச் சொன்னான்.
என் இலக்கியத் திறனை எல்லாம் முழு அளவில் கைக்கொண்டு கவிதை எழுதிக் கொடுத்தேன். காதலின் வேகம் அவனைச் சிந்திக்க விடாமல், நடுச் சாலையில் சக மாணவியர் மத்தியில் தனது அன்பின் மடலை அளிக்க முயன்றது. அவள் அருகில் இருந்த வேறொரு மாணவி அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டாள். படித்துப் பார்த்தவள் அதைக் கிழித்தாவது எறிந்திருக்கலாம். நேரே தன் தோழியின் வீட்டுக்குச் சென்று கொடுத்துவிட்டாள்.
மறுநாள் தலைமை ஆசிரியர் என்னை அழைத்தார். அங்கே நண்பனின் பெற்றோரும் கடிதம் கொடுத்த பெண்ணின் பெற்றோரும் நின்றிருந்தனர். அருகில் இந்தப் பிரச்சினைக்குக் காரணமானவர்களும் நின்றிருந்தார்கள். இவர்கள் பிரச்சினையில் என்னை ஏன் அழைத்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் பயமாக இருந்தது.
தலைமை ஆசிரியர் கோபத்துடன் என்னைப் பார்த்தார்.
“சார்தான் ஷெல்லியாக்கும்! காதல் கவிதைகளை எழுதி சப்ளை செய்யறது உன் வேலைதானா? உன்னோட பேரன்ட்ஸைக் கூட்டிட்டு வரச் சொல்லவா?” என்று கேட்டார்.
“ஐயோ... சார்... பரோட்டா ஆம்லெட்டுக்கு ஆசைப்பட்டுத்தான் கவிதைகளை எழுதிக் கொடுத்தேன். இனி அப்படிச் செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்றேன்.
ஒரு தாளில் இனிக் கவிதை எழுத மாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு, அப்படிக் கவிதை எழுதிக் கொடுத்தால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்று எச்சரித்து என்னை அனுப்பி வைத்தார். அத்துடன் எனக்கான இலவச பரோட்டா ஆம்லெட்டுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி விழுந்தது.
- maharajanswaminathan@gmail.com