என்ன பேசினார் சோ?

என்ன பேசினார் சோ?

Published on

1977 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. வீட்டருகே நடக்க இருந்த அரசியல் கூட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்று விரும்பினேன். அப்போது நானும் என் அண்ணன், தம்பிகளும் மாமா வீட்டில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தோம்.

எல்லாரும் தி.நகர் பேருந்து நிலையம் அருகே பத்திரிகையாளர் சோ பேசுவதைக் கேட்க புறப்பட்டோம். பல குடித்தனங்கள் ஒன்றாக இருந்த அந்தக் காலத்து அடுக்குமனையில் இரவு எட்டரை மணிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருந்தது.

இரவு வெகு நேரம் கழித்துத் திரும்பி வந்தோம். எப்படியோ வாசல் கதவைத் திறந்து மாடிக்குச் சென்று, மாமா வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த மாமா, எல்லாரையும் திட்டினார். “யாரும் இனி இங்கே இருக்க வேண்டாம்... இது என்ன வீடா, சத்திரமா? நாளையே அவரவர் சொந்த ஊருக்குப் போயிருங்க” என்றார்.

பதில் பேசாமல், படுக்கையில் சாய்ந்தோம். எங்கும் அமைதி. வீட்டினுள் இருட்டு. என்னை அழைத்தார் மாமா. நான் பதில் கொடுக்கவில்லை. கொஞ்சம் அழுத்தமாக மீண்டும் அழைத்தார். “மாமா, இனிமேல் மீட்டிங் எல்லாம் போக மாட்டேன்... நேரத்துக்கு வீடு திரும்புவேன்” என்றேன்.

“சே, அதை யாரு கேட்டா? சோ பேசற மீட்டிங்குக்குத்தானே போனீங்க? சோ என்னடா பேசினார்? அதை ஒருத்தரும் சொல்லலியே...” என்றாரே பார்க்கலாம்!

அடுத்த அரை மணி நேரம் இதை நினைத்துச் சிரித்துக்கொண்டே இருந்தோம். இன்றுவரை சோ என்ன பேசினார் என்பதை மாமாவுக்குச் சொல்லவில்லை. அன்று நாங்கள் காத்திருந்தவரை கூட்டத்திற்கு சோ வரவுமில்லை!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in