திண்ணைப் பேச்சு 37: ஓசை இல்லா உலகம் கேட்டேன்...

திண்ணைப் பேச்சு 37: ஓசை இல்லா உலகம் கேட்டேன்...
Updated on
2 min read

எவ்லின் மாசிலாமணி மேயர் என்கிற பெண்மணி சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார். தமிழக நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வந்திருந்தார். தாசப்பிரகாஷ் ஹோட்டலில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. வரவேற்பு அறையில் பேசிக்கொண்டிருந்தோம்.

“இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருக்கிறீர்கள்... என்ன மாற்றம் தென்படுகிறது?” என்று கேட்டேன்.

“மாற்றங்கள் பற்றிச் சொல்வதற்கு நிறைய உண்டு. ஆனால், மாறாதது ஒன்றே ஒன்று” என்று புன்னகைத்தார் எவ்லின்.

நான் ஆச்சரியமானேன்.

“இந்தியர்களின் சலசலப்பு மட்டும் அப்படியே இருக்கிறது. தமிழ்நாட்டிலும் காச்சு மூச்சு என்று கத்துகிறீர்கள்.”

எவ்லின் பேசும்போதே எங்கள் அருகில் நான்கைந்து பேர் நவீன உடை அணிந்து, மிகப்பெரும் நிறுவனங்களில் உயர்பதவி வகிக்கும் தோரணையில் உரையாடிக்கொண்டிருந்தனர். உரத்த குரல் இடிச்சிரிப்பு.

எவ்லின் முகம் சுளித்தார். என்னைப் பார்த்து, “அதோ, அந்த வேப்ப மரத்தடியில் நிழல் இருக்கிறது. அங்கு போகலாம்” என்று விருட்டென எழுந்து நடந்தார். அவரது பொன்னிறச் சிகை காற்றில் கோபத்துடன் பறந்தது.

“கொஞ்சம்கூட இங்கிதம் தெரியாதவர்கள்” என்றார் புருவம் நெறிபட.

“வீடுகளிலும் இதே கதைதான். கத்திப் பேசுவது எங்கள் பிறவிக் குணம்” என்றேன்.

“கத்திப் பேசுவது கலாச்சாரத்துக்கு அழகல்ல. பொது இடங்களில் ஒலிபெருக்கிகளின் ஓயாத சத்தம், பேருந்துகளில் அலறும் பாடல்கள், மேடைகளில் இசைக் கலைஞர்களின் இனிமையான சாரீரத்தை மைக்குகள் மூலம் நாராசமான ஒலிப் பிரவாகமாக மாற்றுவது...” என உடைந்த தமிழ் வாக்கியங்களில் சிதறியது அவர் ஆதங்கம்.

ஜெயகாந்தன் சபையில் ஓர் அன்பர், “நேரில் மென்மையாகவும் பிரியமாகவும் உரையாடும் நீங்கள், மேடைகளில் ஏன் அப்படிக் கர்ஜிக்கிறீர்கள்?” என்று கேட்டார். “மைக் பொய் சொல்கிறது’’ என்றார் ஜெயகாந்தன். ஒலியை மட்டுமல்ல, உணர்வுகளையும் ஊதிப் பெருக்கிவிடுகின்றன மைக்குகள்.

எடிட்டர் பி. லெனினுடன் ஒரு நீண்ட கார் பயணம் செல்ல நேரிட்டது. அவருடைய தந்தை இயக்குநர் பீம்சிங்கின் திரைப்பட அனுபவங்களைச் சுவைபடச் சொல்லியபடி வந்தார். திடீரென்று (பாகப்பிரிவினை திரைப்படத்தில் வரும்) ‘தந்தான தான தந்தனா ஏ’ என்று தெம்மாங்கு பாட ஆரம்பித்துவிட்டார். இருபுறமும் வயல்கள் அந்தத் தெம்மாங்கை ரசிக்கிற தினுசில் கார் குலுங்கியது.

“சார், படத்தைவிட உங்கள் தெம்மாங்கு கேட்க நன்றாக இருக்கே! வெறும் குரலில் மாயத்தை நிகழ்த்திவிட்டீர்கள்” என்று சொன்னார் கூடவந்த நண்பர். வயல் வரப்புகளில் கேட்கும் தெம்மாங்குகளை, திரைப்படங்களில் பல மடங்கு டெசிபல்களில் மைக்குகள் உயர்த்திவிடுகின்றன. இனிமையான ராக ஆலாபனைகளுக்கும் இதே கதிதான். எந்திரம்தான் பாடுகிறது. இப்படியான செயற்கைக்கு நாம் பழகிவிட்டோம்.

மைக் இன்றி மேடைப்பேச்சு சோபிப்பது இல்லை. ஜெயகாந்தன் ஒரு கதையில் அவனைக் கடுமையாகத் தண்டிக்க விரும்பினால், அவன் கண்ணாடியைப் பிடுங்கிக்கொண்டால் போதும் என்று எழுதி இருப்பார். நீண்ட நேரம் எரிச்சல் ஊட்டும் பேச்சாளர்களை நீங்கள் தண்டிக்க விரும்பினால், அவர்கள் முன்னிருக்கும் மைக்குகளை எடுத்துக்கொண்டால் போதும், பேசுவதை நிறுத்திவிடுவார்கள்.

காற்று மாசு மாதிரி ஓசை மாசு பரவிவருகிறது. நமது செவிப்புலன் செயற்கைச் சத்தத்தால் செயல் இழந்துவருகிறது. என் நண்பர் தனது சிங்கப்பூர் பயண அனுபவத்தை விவரித்தார். நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் எவ்விதப் பேச்சும் சத்தமும் இன்றி நடமாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துப் பிரமித்துவிட்டார்.

பூங்காவில், தொடர்வண்டியில், வணிக வளாகங்களில் பேசாத சித்திரங்கள்போல மனிதர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். அப்படியே சாலை ஓரம் தியானத்தில் உட்கார்ந்துவிடலாமா என்று யோசித்தேன். இதெல்லாம் கொஞ்ச நேரம்தான், பிறகு அந்த மௌனமே தாங்க முடியாததாகிவிட்டது.

நகரின் மற்றொரு பகுதி சிறிய தீவுபோல் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் உரத்த குரலில் மனிதர்கள் பேசியபடி இங்குமங்கும், சாலையின் குறுக்கும் நெடுக்கும் நடமாடினார்கள். ஆங்காங்கே தமிழ்க் குரல்களும் உச்சஸ்தாயியில் கேட்டன. இது எந்த இடம் என்று நண்பர் கேட்டிருக்கிறார். இந்த இடத்தின் பெயர் லிட்டில் இந்தியா, இங்கே இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்று பதில் வந்தது.

மௌனம் நமக்குப் புதிது அல்ல - ‘எங்கோ கதவைச் சத்தமாக மூடும் வெற்றரை கண்டுளம் பதைத்தேன்’ என்கிறார் வள்ளலார். ஜே. கிருஷ்ணமூர்த்தி சொன்னார், “எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால், இந்த உலகத்தில் உள்ள மக்கள் எல்லாரையும் ஒரே ஒருநாள் மௌனமாக இருக்குமாறு சொல்வேன்.”

மேலை நாடுகளில் சிறு குழந்தைகள் அதிகமாக அழுகின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது. குழந்தைகள் பிறந்ததும் அவர்களைத் தனி அறையில் கிடத்துவதால் தனித்துவமும் சுதந்திரமும் மிக்க மனிதர்களாக ஆக்க முடியும் என்று மேலைநாட்டவர்கள் கருதுகிறார்கள்.

இந்தியக் குழந்தைகள் தாய்மடியின் கதகதப்பில் வளர்வதால் அழுவது இல்லை. குழந்தை அழாமல் இருக்க தாயின் பழம்புடவை போதும். அந்த வாசத்தின் தாலாட்டில் குழந்தை தூங்கிப் போய்விடும். இந்தப் பத்திர உணர்வு குழந்தையின் ஆயுள் முழுவதும் அவர்களுடனே இருக்கிறது.

காந்தியின் ஒரு விரல்: மெரினாவில் பெருந்திரளான கூட்டம். மகாத்மா காந்தி பேசப்போகிறார். கூட்டத்தினரின் கூச்சலும் சத்தமும் அடங்கவே இல்லை. யார் யாரோ மைக்குகளில் கத்திப் பார்த்தார்கள். எப்படி இந்தக் கூக்குரலை அடக்குவது? காந்தி வந்தார். மேடையில் ஏறினார். மீண்டும் களேபரம்... கூக்குரல்... காந்தி மைக் அருகே வந்தார். ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்தார். அவ்வளவுதான், மொத்தக் கூட்டமும் மௌனத்தில் உறைந்தது.

(பேச்சுத் தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in