

பாரதி பயன்படுத்திய உவமைகளி லேயே பெரியது காதலை எழுத அவர் பயன்படுத்திய உவமை. காதல் கவிதைகளை அரும்பு காலக் கவிதைகள், பருவக் காலக் கவிதைகள், பிரிவு காலக் கவிதைகள் என மூன்று வகைப்படுத்தலாம். பிரிவு காதல் கவிதைக்கு மென் உணர்வுகள் அதிகம். உணர்வு மென்மையாக இருக்கையில் கற்பனை எனும் செடி நன்றாகச் செழித்துப் பூக்கும்.
1910 முதல் 1913ஆம் ஆண்டு வரை பாரதியார் தம் படைப்புகளில் உச்சம் தொட்ட காலம் எனலாம். பாரதியின் சுயசரிதம் என்று சொல்லக்கூடிய ‘ஞானரதம்’ இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது. பாரதி ஏழ்மையில் வாழ்ந்த காலமது. இந்தக் காலத்து பாரதியின் சிறுதுளி வாழ்க்கைதான் ஞானரதம்.
இந்நூலின் முகவுரையில் இவ்வாறு எழுதுகிறார் பாரதி: “இந்நூலை நானாக எழுதவில்லை. எல்லாம் நடத்தும் பரமாத்மா ஞான தீரமில்லாத ஏழையேனைக் கொண்டு ஞானரதத்தில் ஏற்றினான்.”
ஞானரதம் கதை இதுதான்: பின் மாலைப் பொழுதில் திருவல்லிக்கேணி வீரராகவ முதலி தெருவில் ஒரு வீட்டு மேடையின் மீது விரிக்கப்பட்டுள்ள மஞ்சத்தில் படுத்துத் தூங்குகிறார் பாரதி. அவரது கனவில் ஞானரதம் வருகிறது. அதில் ஏறிப் பயணம் செய்கிறார்.
அந்த ரதம் உபசாந்தி லோகம், கந்தர்வலோகம், ஸத்யலோகம், தர்மலோகம் எனும் நான்கு லோகங்களுக்குச் செல்கிறது. அங்கு மண்ணுலகில் இல்லாத பல காட்சிகளைக் காண்கிறார். பிறகு விழிக்கையில் அவர் திருவல்லிக்கேணியில் மெத்தையிலிருந்து கீழே விழுந்து கிடப்பது தெரியவருகிறது. இத்துடன் ஞானரதம் முதல் பாகம் முடிகிறது.
ஞானரதத்தில் முக்கியமான லோகமாகக் கந்தர்வலோகத்தை பாரதி காட்சிப்படுத்து கிறார். கனவில் அங்கே செல்கிறார். அங்கே இவருக்கு ஒரு தோழி கிடைக்கிறாள். அவள் பர்வதகுமாரி. அவள் பாரதிக்குக் கந்தர்வலோகத்தைச் சுற்றிக் காட்டுகிறாள். இருவரும் பந்தாட்டக் களத்திற்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு காதல் ஜோடியை அறிமுகப்படுத்துகிறார்.
ரசிகா, கரீடாரமன் இருவரும் கந்தர்வக் குழந்தைகளுடன் பூப்பந்து விளையாடுகிறார்கள். பந்தாக அவர்கள் ரோஜாப் பூவை எறிகிறார்கள். இந்த விளையாட்டில் கரீடாரமன் ரசிகா மீது கோபித்துக்கொண்டு சொல்கிறான்: “இனி நான் உன்னோடு விளையாட வரப்போவதில்லை”. “ஏன்?” எனக் கேட்கிறாள் ரசிகா. “நீ பந்தை மட்டையைப் பார்த்து வீசாமல் என் முகத்தைப் பார்த்து வீசுகிறாய்” என்கிறான்.
அவள் வீசுவது பூ. கரீடாரமன் மீது காதல்கொண்டு அவள் பூப்பந்தை வீசுகிறாள். மென் இதழ்கள் கொண்ட ரோஜாப்பூ அது. அந்தப் பூ அவனுடைய முகத்தில் படுவது அவனுக்குக் கோபத்தை வருவிக்கிறது. ரசிகா, கரீடாரமன் மீது பூப்பந்து வீசியதைக்கொண்டு பார்க்கையில் ரசிகாவுக்குக் காதல் அரும்பிவிட்டது. அவள் வயதுடைய கரீடாரமனுக்குக் காதல் அரும்பவில்லை.
கரீடாரமன், ரசிகா மீது கோபித்துக்கொள் வதைப் பார்த்து விளையாடிக்கொண்டிருந்த கந்தர்வக் குழந்தைகள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். பாரதி கந்தர்வலோகத்தில் குழந்தைகளின் குதூகலக் கொண்டாட் டத்தைப் பார்த்தவாறு நிற்கிறார்.
எல்லாரும் வயிறு குலுங்கச் சிரிக்க, ஒருவன் மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் தனியே அமர்ந்திருக்கிறான். அவன்மீது பாரதியின் கவனம் குவிகிறது. பர்வதகுமாரியிடம் இந்தச் சிறுவன் யாரென்று பாரதி கேட்கிறார்.
அவள் சொல்கிறாள், “இவன் என் தம்பி சித்தரஞ்ஜனன். இவன் குழந்தையாக இருந்தபோது எங்கள் குலதெய்வம் காமதேவனுடைய அருள் பெற்றவனானான்.
இதனால் இவன் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவதிலே விருப்பமில்லாமல், கவிதைகள் புனைவதில் விருப்பம் கொண்டிருக்கிறான். இப்பொழுதுகூட அவன் கவிதைதான் புனைந்துகொண்டிருக்கிறான். வாருங்கள், அவனிடம் சென்று எழுதிய கவிதையைக் கேட்போம்.” இருவரும் அவனிடம் செல்கிறார்கள்.
பர்வதகுமாரி சித்தரஞ்ஜனனிடம் கேட்கிறாள்: “தம்பி, நீ குழந்தைகளோடு சேர்ந்து விளையாடாமல் என்னவோ எழுதிக் கொண்டிருந்தாயே, அது என்னவென்று சொல்ல இயலுமா?”
சித்தரஞ்ஜனன் குலதெய்வம் காமன் அருள் பெற்றவன். இவனுக்குக் காதல் கவிதைதான் எழுதவரும். ஒரு காதல் பருவத்தன் எழுதும் ஒரு காதல் கவிதையை, காதலி படிக்கவே விரும்புவான். இவளோ சகோதரி.
எழுதிய கவிதையை அவளிடம் சொல்ல சித்தரஞ்ஜனன் தயங்குகிறான். கந்தர்வலோகத்திற்கு விருந்தாளியாக வந்திருக்கும் பாரதிக்காக, பர்வதகுமாரி இரங்கிக் கேட்கிறாள். சித்தரஞ்ஜனன் தயங்கி அவன் எழுதிய கவிதையைச் சொல்கிறான். அந்தக் கவிதையின் சாராம்சம் இவ்வாறு இருக்கிறது.
‘மேகத்திலிருந்து இடி இறங்கி ஒருவன் பக்கத்தில் விழுகிறது. அந்த இடியால் அவன் வெந்துபோகிறான். அவன் ஒன்றும் சொல்லாது வெறுமென இருக்கிறான். இன்னொரு இடத்தில் ஆலங்கட்டி மழை ஒருவன் தலையிலே விழுகிறது. அவன் மேகத்தின்மீது சினங்கொண்டு கடுஞ் சொல்லால் மேகத் தைச் சபிக்கிறான்.
கரீடாரமனின் செய்கை இப்படியாக இருக்கிறது. வாசனை பொருந்திய ரோஜாப் பந்தைத் தன் மீது எறிந்துவிட்டாளென்று ரசிகாவைக் கோபித்துக்கொள்கிறான் இந்தக் கரீடாரமன். அவளோ வடிவேறிய வேல்களை எறிவதைப் போல அவளது விழிகளை என் மீது எறிந்துகொண்டி ருக்கிறாள், அதை அவன் காண்கிறானில்லை’ என்பது அப்பாடலின் பொருள்.
‘இடியேறு சார்பிலுற உடல்வெந்தோன்
ஒன்றுரையா திருப்ப ஆவி
முடியேறி மோதியதென் றருள்முகிலைக்
கடுஞ்சொற்கள் மொழிவான் போலக்
கடியேறு மலர்ப்பந்து மோதியதென்
றினியாளைக் காய்கின் றானால்
வடியேறு வேலெனவெவ் விழியேறி
யென்னாவி வருந்தல் காணான்.’
இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ள ‘இடியேறு சார்பிலுற உடல்வெந்தோன் ஒன்று ரையா திருப்ப, ஆவி முடியேறி மோதியதென் றருள்முகிலைக் கடுஞ்சொற்கள் மொழிவான் போல’ என்கிற உவமை பாரதியார் பயன்படுத்திய உவமைகளில் நீண்டதாகும்.
பாரதி கனவில் வந்த சித்தரஞ்ஜனன் வேறு யாரோ அல்ல, பாரதிதான். ஒருதலைக் காதல் கொள்ளும் பருவத்தினருக்கு, பாரதி ஒரு காதல் பாத்திரம்!
- rajamanickam29583@gmail.com