

பானுமதி பற்றிய கட்டுரை எழுதுவதற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் பானுமதி உட்கார்ந் திருக்கிறார். திரையில் வரும் நிழல் பானுமதி அல்ல. நிஜ பானுமதி.
வீட்டு உதவியாளர் அவருக்கு முன்னால் ஒரு கோப்பை பழச்சாறும் எனக்கு முன்னால் கம்மென்று மணக் கும் காபியும் கொண்டுவந்து வைத்தார்.
“உங்களுக்குத் தஞ்சாவூர் பூர்விகம் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் எல்லாம் காபி பிரியர்கள் அல்லவா? ஆகவேதான் உங்களுக்கு காபி கொண்டு வரச்சொன்னேன்” என்றார் பானுமதி.
“நீங்களும் காபி சாப்பிடலாமே?”
“வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று சினிமா. மற்றொன்று காபி” என்றார் பானுமதி.
அதற்குள் வெளியே ஏதோ களேபரம். பானுமதியின் உதவியாளர் பால்கனியில் இருந்து எட்டிப்பார்த்து விட்டு வந்தார்.
“அம்மா, உங்களைப் பார்க்க வந்தவங்க... வாசல் கேட்டுல முண்டியடிக்குது கூட்டம்!”
பானுமதி சட்டென்று எழுந்தார். நேராக பால்கனிக்குச் சென்றார். இரு கைகளையும் கூப்பி வணங்கினார். பிறகு மெல்லிய புன்சிரிப்புடன் கை அசைத்தார். அவ்வளவுதான் வந்து விட்டார்.
காபி பிரமாதமாக இருந்தது. காற்றில் நாகலிங்கப் பூக்களின் வாசனை.
என் முன்னால் உட்கார்ந்தவரைப் பார்த்தேன்.
திருத்தமான நெற்றி. அதில் நெருப்புக்கோடாக ஸ்ரீசூர்ணம். கத்தரித்த புருவங்கள். அளவான முகப்பூச்சு. பட்டுப்புடவை, கம்பீரமான தோற்றம். எழுபது வயது என்று நம்பவே முடியவில்லை.
“தமிழ்நாட்டு ரசிகர்கள் உங்களை அவர்கள் வீட்டுப் பெண்ணாகவே நினைக்கிறார்கள். அப்படி ஒரு தத்ரூபமான நடிப்பு!”
“இருக்கலாம்... ஆனால், நான் நடிக்கவே விரும்பவில்லை. அப்பாவின் வற்புறுத்தலால் நடித்தேன். வேண்டா வெறுப்பாக நடித்ததால் என் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஒரு அலட்சியம் வந்துவிட்டது. நான் காட்டிய இந்த அலட்சியமும் விலகலும்தான் என்னுடைய பாணி. அதாவது பானுமதி ஸ்டைல். இது ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லாரும் புகழ ஆரம்பிச்சாங்க. என்னடா இது வம்பாப் போச்சேன்னு நினைச்சேன்.
இதுதான் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட குரூரமான நகைச்சுவை. எத்தனையோ சோதனைகளை வாழ்வில் தாண்டி வந்துவிட்டேன். நாம எல்லாரும் ஆத்ம பரிசோதனை பண்ணிக்கணும். நாம யாரு, எதுக்காக வந்தோம், என்ன செய்துகிட்டிருக்கோம்னு யோசிக்கணும். பணம், புகழ்னு அலையறதைவிட இது முக்கியம்.
இதுல கவனமிருந்தா, மனசைத் தத்துவ விசாரத்தில் வைத்துக் கொண்டால் மற்றது தானாக வரும்! நான் அப்படித்தான் செய்தேன். புகழை உதாசீனப்படுத்தினேன். தானாக வந்தது. பணத்தை வேண்டாம்னு தள்ளினேன். அதுவா வந்து சேர்ந்தது.
‘அழகான பொண்ணு நான்
அதுக்கேத்த கண்ணுதான்
என்கிட்டே இருப்பதெல்லாம்
தன்மானம் ஒண்ணுதான்!’
‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் பானுமதி பாடிய பாடல் காதில் கேட்டது. அந்தப் படத்தைச் சிறுவனாக இருந்தபோது நாச்சியார் கோவில் டூரிங் கொட்டகையில் மணலில் உட்கார்ந்து பார்த்த ஞாபகம் வந்தது. இதைக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
கட்டுரையைப் படித்துவிட்டு, ‘நண்பரே, கட்டுரையில் நீங்கள் டூரிங் டாக்கீஸ் பெயர் பாலகிருஷ்ணா என்று குறிப்பிட மறந்துவிட்டீர்களே! நானும் நாச்சியார் கோவிலில் சிறுவனாக இருக்கும்போது அந்தக் கொட்டகை யில் அமர்ந்து பானுமதி படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன்’ என்று சிலா கித்துச் சொன்னார் நீதியரசர் சந்துரு.
தூக்குமர நிழலில்... கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிய சி.ஏ.பாலன் மீது நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்பு டையவர் என்று முத்திரை குத்தி, கேரள அரசு அவரைச் சிறையில் அடைத்தது. அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. பிற்பாடு அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலையாகி வந்தபின், தூக்குத் தண்டனைக் கைதியாகச் சிறைக் கொட்டடியில் மரணத்தை எதிர்நோக்கிக் கழித்த அனுபவங்களை, ‘தூக்குமர நிழலில்’ என்கிற புத்தகமாக எழுதினார். பிரபல வார இதழ் ஒன்றில் அது தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
பல்லாவரத்தில் இருந்த அவர் வீட்டுக்குப் போனேன். வெள்ளை வேட்டி, சட்டை. திருத்தமாகக் கத்தரித்த நரைத்த மீசை. செதுக்கியது போன்ற முகம். காலத்தின் செதுக்கல்.
“தோழர், வாருங்கள்!” என்றார். மலையாள வாசனை வீசும் தமிழ்.
மரண தண்டனைக் கைதி யாகச் சிறைச்சாலை யில் அவருக்கு நேர்ந்த எழுதித் தீராத அனு பவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் திரும்பத் திரும்ப அந்த அனுபவம் பற்றியே அவரிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன்.
“சிறையில் மரண தண்டனை ரத்து செய்யப் பட்டு, குற்றமற்றவராக விடுதலை பெற்று வந்ததும் மரண பயம் போய்விட்டதா?”
“மரண தண்டனை நிச்சயம் என்று தெரியும்போது சாவைப் பற்றிய பயம் போய்விடுகிறது. தூக்குமர நிழல் என்பது விரக்தி எனும் நிழல். வெளியே வந்த பிறகு வாழ்க்கை என்பது விலைமதிக்க முடியாத பொக்கிஷமாக இருக்கிறது. இப்போது வாழ்வு எனும் மர நிழலில்தான் மரண பயம் வருகிறது. இந்த அழகிய உலகத்தைவிட்டுப் பிரிந்து செல்ல யார் விரும்புவார்?”
முனிவர்களும் சித்தர்களும் தத்துவ ஞானிகளும் சொல்லிக் கொண்டிருக்கும் வாழ்வே மாயம் என்கிற கற்பிதத்தின் இன்னொரு பக்கத்தைக் காண்பித்தது சி.ஏ. பாலனின் எளிய கேள்வி.
வாலி நீ வாழி: தொண்ணூறுகளில் வெளிவந்த ‘புதிய பார்வை’ இதழில் என் இரண்டு வரிக்கவிதை பிரசுரமாகியிருந்தது.
‘அக்கரையில் ஒரு புல்லாங்குழல்
ஆற்றைக் கடக்கும் படகின்றி.’
அந்த இதழில் வாலி ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்கிற தொடர் ஒன்றை எழுதிவந்தார். ஆசிரியர் பாவை சந்திரன் பல வருட நண்பர். அவர் தொலைபேசியில் என்னை அழைத்து, வாலி உங்களைப் பார்க்க விரும்புகிறார். இன்று மாலை புதிய பார்வை அலுவலகம் வர முடியுமா என்று கேட்டார்.
போனேன். எனக்கு முன்னரே வாலி வந்திருந்தார். பாவை அறிமுகம் செய்தார். “நீர் கோபாலி. நான் வாலி. அவ்வளவுதான் பெரிய வித்தியாசமில்லை” என்று சிரித்தார் வாலி. “ஓய், என்னய்யா ரெண்டே வரியோட நிறுத்திட்டீர். பாக்கியையும் எழுதி முடிச்சுடும்” என்றார். “அவ்வளவுதான் சார் கவிதையே” என்றேன்.
ரவா தோசையும் காபியும் சாப்பிட்டோம். ‘எழுதும்’ என்றார். ‘அக்கரையில் ஒரு புல்லாங்குழல் ஆற்றைக் கடக்கும் படகின்றி; இக்கரையில் ஒரு குயிலோசை எழுந்து பறக்கும் சிறகின்றி’ என்று நீளமான கவிதையை எழுதிக் காட்டினேன். “பிரமாதம்யா, நான் ஒரு புதுக்கவிதை முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.
எல்லாரும் அபிப்பிராயம் சொல்லணும்’’ என்றார். கலைஞன் மாசிலாமணி, பாவை சந்திரன், கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, இன்னும் இரண்டு பேர். வாலி வீட்டில் தடபுடலான விருந்து. அவர் அன்று எங்களிடம் காட்டிய புதுக்கவிதை நோட்டுகள்தாம் ‘அவதார புருஷ’னாக வெளிவந்தது. அதில் நான் செய்த திருத்தங்களை ஏற்று, ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்கிற அவரது தொடரில் (புத்தகமாக வந்துவிட்டது) என்னைப் பற்றிப் புகழ்ந்து தள்ளிவிட்டார். எவ்வளவு பெரிய மனசு!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com