

தென் தமிழ்நாட்டு ஊர்களின் பொருளாதார அடிநாதமாக இருந்தது பனைத் தொழில். உடலுக்குப் பதமான நீர் என்பதால் பதநீர். பதநீரை வடிகட்டுவதற்குப் பனையின் ஓலைப் பகுதியில் இருக்கும் வலை போன்ற பட்டையைப் பயன்படுத்துவார்கள். எங்கள் ஊரில் அதற்குச் சில்லாட்டை என்று பெயர்.
சில ஊர்களில் இதன் பெயர் பன்னாடை. பயனற்ற பொருள்களைப் பதநீரில் இருந்து வடிகட்ட இது பயன்படுகிறது. வடிகட்டிய பின் பயனற்ற பொருள் இதில் தங்கிவிடும். இதனால் பயனற்ற குணங்களை மட்டுமே கொண்ட ஒருவரைக் குறிக்க, பன்னாடை எனச் சொல்லும் வழக்கம் வந்தது.
பதநீருடன் கொல்லாம்பழம், இளம் புளியங்காய் (நொண்டங்காய்) எனக் கிடைப்பதை எல்லாம் அரிந்து போட்டுச் சாப்பிடுபவர்கள் உண்டு. பனையின் அனைத்துப் பகுதிகளுமே பயன்படக்கூடியவைதாம் என்றாலும், அதிலிருந்து கிடைக்கும் முதன்மைப் பொருளாக இருப்பது கருப்பட்டி.
காலை பதநீரைப் பானையில் ஊற்றி விடிலியில் வைத்துக் காய்ச்சுவார்கள். விடிலி என்பது பதநீர் காய்ச்சுவதற்காக இருக்கும் சிறு அடுக்களை. ஓலைக்கூரைதான் போட்டிருப்பார்கள். உள்ளே சிறு பரண் போன்ற அமைப்பு இருக்கும். அதில்தான் தேவையான பொருள்களை வைத்திருப்பார்கள்.
பதநீரை வடிகட்டி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். காயும் பதநீர் பொங்கி வெளியே வரும். இதைத் தடுக்க ஆமணக்கு விதையைத் தட்டிப் போடுவார்கள். அதில் இருக்கும் எண்ணெய், பொங்கி வருவதைக் குறைக்கும். சில இடங்களில் ஆமணக்கு விதைக்குப் பதிலாகத் தேங்காய்த் துண்டுகளைப் போடுவார்கள்.
தண்ணீரின் அளவு குறைய குறைய பதநீர் கூழ் பதத்திற்கு வரும். அதற்குக் கூப்பயனி (கூழ் பதநீர்) என்று பெயர். கூப்பயனிக்குள் கிழங்கு போட்டு அவித்துச் சாப்பிடுவார்கள். சிறுவர்கள் புளி போட்டுச் சாப்பிடுவார்கள். புளிப்பும் இனிப்புமாக நன்றாக இருக்கும்.
கூப்பயனி ஒரு பதத்திற்கு வந்ததும் நன்றாக மட்டை வைத்து ஒரே பக்கமாக ஏறக்குறைய படகில் துடுப்பு போடுவதுபோலக் கிளறுவார்கள். அதற்குத் துளாவுதல் என்று பெயர். பின் அதைச் சிரட்டைகளில் ஊற்றி, கருப்பட்டி செய்வார்கள். உடனே சாப்பிட இந்தக் கருப்பட்டி மிகச் சுவையாக இருக்கும்.
கடைகளில் வாங்கும் கருப்பட்டிகள் புகை போட்டுப் பக்குவப்படுத்தப்பட்டவை. பானையில் கருப்பட்டியை ஊற்றி அதன் மேலே ‘வண்டு கட்டி’ (துணியால் மூடுவது) விடுவார்கள். சுக்கு சேர்த்துச் செய்தால் சுக்குக் கருப்பட்டி. சுக்குக் கருப்பட்டி வாயில் போடுமளவுக்குச் சிறிதாகத்தான் இருக்கும்.
மணலில் பல்லாங்குழி போன்று சிறு சிறு குழிகள் அமைத்து, அதன் மேல் துணியை விரித்து, சுக்குக் கருப்பட்டி செய்வார்கள். சில்லுக் கருப்பட்டி/சுக்குக் கருப்பட்டி செய்வதற்கென்றே தனியாகப் பதநீர் காய்ச்சுபவர்களும் உண்டு. அப்படிச் செய்யும்போது தெளிய வைத்து, மண்டி இல்லாமல் காய்ச்சினால் வெள்ளையாக இருக்கும்.
தாச்சியில் (தாழி) இருக்கக்கூடிய கருப்பட்டியை ஒரு தகடு வைத்து வழிப்பார்கள். குழந்தைகள் அருகில் இருந்தால் உருட்டிச் சாப்பிடக் கொடுப்பார்கள். இல்லை என்றால், கருப்பட்டியின் மேல் வைத்துவிடுவார்கள். அது கருப்பட்டியுடன் ஒட்டி க்கொள்ளும். கடைக்கு அம்மாவுடன் செல்லும் குழந்தைகளுக்குக் கடைக்காரர் பெரும் பாலும் இந்த உருண்டைப் பகுதியைத்தான் பிய்த்துக் கொடுப்பார்.
இலவசமாகக் கிடைக்கும் பொருள், விலையில்லாப் பொருள். விளையாட்டில் கலந்துகொள்வார்; ஆனால், அவரால் விளையாட்டில் எந்த விளைவும் ஏற்படாது என்பதான நபரை ‘போடு கருப்பட்டி’ எனச் சொல்லும் வழக்கம் இதில் இருந்து வந்ததே. கூப்பயனி பருவத்திற்குச் சற்று முன்பு எடுத்து, அதில் உடைத்த புளியைக் கொட்டையோடு போட்டுப் பானையில் வைத்து மூடி, துணி கொண்டு கட்டிவிடுவார்கள்.
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஊறிய புளியின் நார்களில் கற்கண்டு பரல்கள் இருக்கும். வெய்யிலில் காய வைத்து, பிசுபிசுப்பு நீங்கியதும் கற்கண்டாகச் சேமித்துக்கொள்ளலாம். ஆண்டுக்கணக்கில் கெட்டுப் போகாது.
இப்போது நகரங்களில் சீனி மாதிரி கருப்பட்டிப் பொடி கிடைக்கிறது. கருப்பட்டியைக் காய்ச்சிக் கிடைக்கும் இன்னொரு பொருள் பனங்கற்கண்டு. இது ஆண்டுக் கணக்கில் கெடாது. அதனால், இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் எனலாம்.
கோடைக் காலத்தில் நுங்கு வரத் தொடங்கிவிடும். மும்பையில் இதை ‘ஐஸ் ஆப்பிள்’ என்கிறார்கள். பெண் பனையில் உருவாகும் பாளையில் இருந்து நுங்கு காய்க்கிறது. நுங்கை வெட்டாமல் அப்படியே மரத்தில் விட்டால் அது பனங்காயாக மாறும். பின் பழமாக மாறும். பனங்காயைக் கருப்பட்டி சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவார்கள். பனம்பழத்தைச் சுட்டுச் சாப்பிடும் வழக்கமும் உண்டு.
இளமையான பனைமரம், ‘பனங்கிழங்கு’ என உண்ணப்படுகிறது. கிழங்கு பிடுங்கும் போது தவினும் (விதை) கிடைக்கும். ஆனால், வெட்டுவதற்குத்தான் சிரமம். பனை மரத்தை வெட்டும்போது மட்டும் குருத்து கிடைக்கும். அது சுவையாக இருக்கும்.
இவ்வாறாகப் பயன்படும் பனை, வீடு கட்டும் பொருளாகவும் இருந்திருக்கிறது. ஏழைகள் பனை ஓலை கொண்டு தங்கள் கூரைகளை வேய்ந்தார்கள். சுற்றுச்சுவர்கூட மட்டை வைத்துக் கட்டியிருப்பார்கள். சிறிது வசதியானவர்களின் ஓட்டு வீடுகளில் பனை மரத்தில் உத்திரங்கள் இருக்கும்.
பனை ஓலை, மட்டை, நார்களில் செய்யப்பட்ட பலவகைப் பெட்டிகள், சுளவு/சுளகு (முறம்), உறி, பானை இறக்கி வைக்கும் பிரிமணை, பாய், கயிறு, விசிறி, கால்மிதி எனப் பல வீட்டு உபயோகப் பொருள்கள் பனையால் செய்யப்பட்டன. கட்டில் கட்டுவதற்கான சட்டம்கூடப் பனங்கம்பாகவே இருந்தது.
பனை ஓலைகளில் சிறுவர்கள் காற்றாடி, பொம்மை போன்றவற்றைச் செய்து விளை யாடினார்கள். பெரியவர்கள் காடுகளில் போடுவதற்கு என்றே பனை மட்டையால் செய்த செருப்பு வைத்தி ருப்பார்கள். அதில் முள் குத்தாது. இவ்வாறு நுனி முதல் அடி வரை பயனுள்ள மரம் பனையே!
- bhathilahar@gmail.com