மார்கழி அனுபவம்: அரசியின் பூக்கோலம்!

மார்கழி அனுபவம்: அரசியின் பூக்கோலம்!
Updated on
2 min read

பூக்களின் அரசி என்றே அவளை அழைப்போம். குளிர்காலம் ஆரம்பித்தவுடன் பல வண்ணப் பூக்கள் பூத்து நிற்கும் வாசல்களின் அழகைக் காணும் போதெல்லாம் சேர்ந்தே வருகிறது பூக்களின் அரசியின் ஞாபகமும். நாங்கள் பனியின் சோம்பலில் துயில் கலையாமல் சூரியனை எதிர்பார்த்திருப்போம். ஆனால், அரசி எப்போது துயில் கலைந்தாள், எப்போது பூக்களின் வனத்திற்குள் சென்றாள் என்று யாராலும் சொல்ல முடியாது.

முதல் நாள் இரவே அனைத்து வீட்டு வாசல்களிலும் யுவதிகள் வண்ணப் பொடிகளுடன் கோலம் போடுவதை வேடிக்கை பார்ப்பதே அவ்வளவு மகிழ்ச்சி தரும். எல்லா வீட்டுப் பெண்களும் அரசி என்ன கோலம் போட்டிருக்கிறாள் என்பதைக் காணக் கூட்டமாக வருவார்கள். கோலமாவுடன் அவளின் கை மந்திர ஜாலம் புரியும். சுருண்டு விழும் நெற்றி முடியை ஒற்றை விரலால் தள்ளிவிடும் அவளுடைய விரல்களின் வேகத்தை எந்தக் கருவி கொண்டும் கணித்திட முடியாது.

அதிகாலை ஊருக்கு வெளியே உள்ள காட்டுக்குள் சென்று விதவிதமான பூக்களைப் பறித்து, பாவடை நிறைய சுமந்துகொண்டு வந்து, அவள் வீட்டு முற்றத்தில் உதறினால், பூக்காடாக மாறிவிடும்! அவள் போடும் கோலம் மட்டும் கண்களுக்குள் அடங்காது. அந்தப் பெரிய கோலத்தின் மீது, ஆங்காங்கே சாணி உருண்டையின் மீது பூக்களைச் செருகி வைப்பாள். பெரிய இதழ்கள் கொண்ட ஒரு மலரை எடுத்து ‘ராணிப்பூ’ என்று பெயர் சூட்டி, கோலத்தின் மையத்தில் வைப்பாள். ராணியைச் சுற்றிலும் மந்திரிப் பூ, தோழிப் பூ என வரிசையாக கொலு வைப்பாள். வண்ணப் பொடிகளும் வண்ணப் பூக்களுமாக அந்தக் கோலமே அற்புதமாக இருக்கும்!

அவள் வீட்டு வாசலை அலங்காரப்படுத்தியது போக, எஞ்சிய பூக்களை மற்றவர்களுக்குத் தரும்போது, அவள் கோலத்தைவிட கூடுதல் அழகாகத் தெரிவாள். அவளுடன் விளையாடுகிற போதும் பூக்கள் குறித்த பாடல்களைத்தான் பாடிக்கொண்டேயிருப்பாள். ‘ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்தது’ என்கிற விளையாட்டு இடம்பெறாத நாளே இருக்காது.

அந்த வயதில் எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் பூசணிப்பூ ஒன்றுதான். அவளோ ஒரு நூறு பூக்களின் பெயர்களையாவது தடையின்றி சொல்லிவிடுவாள். அவள் எப்படி, எங்கு விதவிதமாகப் பூக்களைப் பறிக்கிறாள் என்கிற ரகசியம் மட்டும் இன்றுவரை யாருமே அறிந்ததில்லை.

குளிர் மாதம் முழுவதும் வாசலில் வைத்த பூக்களை, மாலையில் சாணி உருண்டையுடன் சேர்த்து சுவரில் தட்டி, காய வைப்பாள். பொங்கலின் கடைசி நாளன்று அவள் வயதை ஒத்த பெண்கள் எல்லாம் புதிய ஆடைகளை அணிந்துகொண்டு, பூ எருவை எடுத்துக்கொண்டு, கும்மி பாட்டுப் பாடியபடியே குளக்கரைக்கு நடந்து செல்வார்கள்.

அங்கே அரசியும் ஒரு பாடலைப் பாடியபடியே எருவை நீரில் கரைப்பாள். நாங்கள் எல்லாம் குழல் இசைக்கு மயங்கிச் சென்ற எலிகளைப் போல, அவள் பின்னால் சென்று ஒவ்வொன்றையும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நிற்போம்.

இன்று பொங்கலின் கடைசி நாள். இன்றும் காட்டில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்த வீட்டின் வாசலும் பெரிதாகத்தான் இருக்கிறது. ஆனால், பூக்களைக் பறிக்கவோ பறித்த பூக்களைக் கோலத்தின் மீது வைக்கவோ அரசிதான் இந்த ஊரில் இல்லை. எந்த ஊரில் என்ன செய்துகொண்டிருப்பாளோ!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in