

அண்மையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டபின் பார்க்கும் இடமெல்லாம் பளீரென்று துல்லியமாகத் தெரிந்து என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
இத்தனை நாள் பார்வையின் மங்கல், மனசின் மங்கலாக இருந்தது. இப்போது எண்ணத்திலும் காட்சியிலும் புதியதோர் தெளிவு. புதியதோர் ‘பளீர்’.
ஏற்கெனவே என்னைப் போல் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட நண்பர் ‘பார்க்கிறதெல்லாம் பிறந்த குழந்தையின் கண்போல் பிரகாசமாகத் தெரியுமே’ என்றார்.
அவர் சொன்ன உவமை பிடித்திருந்தது. பிறந்த குழந்தையின் கண்ணேதான்! எங்கும் ஒளிவெள்ளம்!
கண்புரை சிகிச்சையும் சரபோஜி மன்னரும்: தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் கண் மருத்துவத்தில் தனி ஈடுபாடுகொண்டிருந்தார். அதிலும் கண்புரை அறுவைசிகிச்சைகளை அருகிலிருந்து கவனித்தார். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் செல்வோர் அங்கு மிகப் பெரிய கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பழைய பழுப்பேறிய மருத்துவ கிரந்தங்களைக் காணலாம்.
அவற்றுள் ஒன்றுதான் இரண்டாம் சரபோஜி மன்னர் தாமே உதவியாளர்களைக் கொண்டு எழுதிய கண் மருத்துவம் குறித்த படங்களுடன் கூடிய பதிவேடு. கண்புரை அறுவை சிகிச்சையைச் செய்துகொண்ட 44 நோயாளிகள் குறித்த தகவல்களை (Case Histories) எழுதி வைத்திருக்கிறார். பல வண்ணங்களில் விளக்கப் படங்களும் இப்பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன. அறுவை சிகிச்சைக்கு வலி நிவாரணிகள் தரப்பட்டுள்ளன.
சிகிச்சை முடிந்து நலம் பெற்று செல்வோருக்குக் கையில் பணமும் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர் நடத்திய தன்வந்திரி மஹாலில் ஆங்கில மருத்துவர்களும் சித்த மருத்துவர்களும் பணியாற்றியுள்ளனர்.
மூன்று நாள் மட்டுமே பார்வை கிடைத்தால்... மிகச் சிறுவயதிலேயே (19 மாதங்களில்) பார்க்கும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்துவிட்ட ஹெலன் கெல்லர் பற்றி நாம் அறிவோம். எழுதுவதன் மூலம் தன் எண்ணங்களை வெளிப்படுத்திய ஹெலன் கெல்லர், தமது சுயசரிதையையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘எனக்கு மூன்று நாள் மட்டுமே பார்வை கிடைத்தால்...’ என்கிற கட்டுரை உலகப் புகழ்பெற்றது. இதிலிருந்து சில பகுதிகள்...
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதரும் சில நாள்களுக்காவது பார்வையற்றவராகவும் காதுகேளாதவராகவும் இருந்தால், இருட்டு அவர்களுக்குப் பார்வையின் மேன்மையையும் நிசப்தம் அவர்களுக்கு இவ்வுலகின் இனிய நல் ஒலிகளையும் உணர்த்தும். ஒருமுறை காட்டில் நடந்துவிட்டுத் திரும் பிய தோழியிடம், ‘என்ன பார்த்தாய்?’ என்று கேட்டேன். அவரோ ‘குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை’ என்றார்.
ஒரு மணிநேரம் கானகத்தில் நடந்த பிறகும் அவரால் எதுவுமே பார்க்க முடியவில்லையா? இலைகளின் விதவிதமான வடிவங்கள், பிர்ச் மரங்களின் வழுவழுப்பான உடல்களையும் பைன் மரங்களின் சொரசொரப்பான மேனியையும் தொட்டு மகிழ்ந்திருக்கிறேனே!
‘ஏதேனும் அதிசயம் நடந்து எனக்கு மூன்று நாள்கள் மட்டும் பார்வை கிடைத்தால், நான் எவற்றை எல்லாம் காண விரும்புவேன்?’
முதல் நாள் குழந்தைப் பருவம் முதல் என்னைக் கவனித்துக்கொண்ட என் ஆசிரியர் ஆன் சல்லிவனைத்தான் பார்க்க விரும்புவேன்.
என் நண்பர்களை எல்லாம் வரவழைத்து அவர்களின் முகங்களைப் பார்ப்பேன். என்னுடன் விளையாடும் ஒரு குழந்தையின் பட்டுக் கன்னங்களைத் தொட்டுப் பார்க்க விரும்புவேன்.
என் பிரிய நாய்க்குட்டியைப் பார்க்க வேண்டும். வீட்டுப் பொருள்களின் வண்ணங்களைக் காண விரும்புகிறேன். மேயும் குதிரைகள், வண்ணமயமான சூரிய அஸ்தமனத்தைக் காண என் இதயம் விரும்புகிறது.
இரண்டாம் நாள்: சூரியோத யத்தைக் காண விரும்புகிறேன். இயற்கை அருங்காட்சி யகத்துக்குச் சென்று, இதுவரை கையால் தொட்டு உணர்ந்தவற்றை எல்லாம் கண்ணால் காண விரும்புவேன். ஓவியக் கலைக்கூடங்களைக் காண்பேன்.
இரண்டாம் நாள் மாலை நாடகத்தைக் காண்பேன். வீடு திரும்பும் வழியில் செடிகள் பளபளக்கும் நடைபாதையை ரசிப்பேன்.
மூன்றாவது நாள்: நகரின் உயரமான கட்டிடத்தில் நின்று உலகைக் காண்பேன். மாலை ஆனதும் மறுபடி நாடகம் பார்க்கப் போய்விடுவேன். ஏனென்றால் இன்று நள்ளிரவு மீண்டும் என் பார்வை போய்விடும் அல்லவா?
நீங்கள் பார்வையற்றவராக இருக்க நேர்ந்தால் உங்களுடைய மூன்று நாள் திட்டம் வேறு மாதிரி இருக்கும். ஒன்று மட்டும் நிச்சயம். உங்கள் கண்கள் பார்வைபடும் இடமெல்லாம் தொட்டுப் பார்க்கத் துடிக்கும். கடைசியில் அழகான புத்துலகம் உங்கள் முன் விரியும்.
நான் சொல்ல விரும்புவது இதுதான். நாளையே பார்வை இழக்க நேர்வதாக நினைத்து உங்கள் கண்களைப் பயன்படுத்துங்கள். உங்களின் மற்ற அவயவங்களையும் அவ்வாறே பயன் படுத்துங்கள். எல்லாவற்றைக் காட்டிலும் பார்வை ஒன்றே பரவசம் தருவதாக இருக்கும்.
கனவு மீன்களும் ஒருவேளைச் சாப்பாடும்: பல ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சை அரண்மனை தர்பார் ஹால் போகும் வழியில் சலங்கை கட்டிய குச்சியைத் தட்டிக்கொண்டு, கண் தெரியாத பெரியவர் கைநீட்டி நின்றிருப்பார்.
அவரிடம் பெரியவரே மறுபடி உங்களுக்குப் பார்வை கிடைத்தால் என்ன பார்க்க வேண்டும் என்று கேட்டேன்.
“வெயிலைப் பார்க்கணும் தம்பி. வெயில்லதான நின்னுகிட்டிருக்கேன்.”
“உங்களுக்குக் கனவு வருமா?”
“ஓ, வருமே... நிறைய மீன்களைப் பிடிக்கிற மாதிரி கனவு வந்தா மறுநாள் காசு நிறைய கிடைக்கும். ஒருவேளை வயிறாரச் சாப்பிடுவேன்.”
வெளிச்சம் என்பது விழிகளில் இல்லை: மதுரையில் வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியர் மனோகர் தேவதாஸ் பார்வை குறைந்துகொண்டே வந்தபோதும், உடல்நலம் குன்றிய காதல் மனைவி மஹிமாவுக்குப் பணிவிடை செய்தபடி அவர் வரைந்த ஓவியங்கள் அற்புதமானவை. மதுரைக் காட்சிகளைத் தத்ரூபமாக கறுப்பு - வெள்ளைப் படங்களாகத் தீட்டினார். ஆறு நூற்கள். 21 பதிப்புகள். ராயல்டி தொகைகளை அவர் பயின்ற கல்லூரிக்கும் சங்கரா நேத்ராலயா, அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் கொடுத்துவிட்டார்.
சொத்துகளின் ஒரு பகுதியை விற்று மேற்படி மருத்துவமனைகளில் அறக்கட்டளை நிறுவியிருக்கிறார். ஒரு சிறு குழாய் அளவே தெரியும் பார்வையை வைத்துக்கொண்டு, மதுரையின் பழைய காட்சிகளையும், மரபுச் சின்னங்களையும் வரைந்து நம்மைக் காண வைத்தார். அவரைப் பொறுத்தவரை வெளிச்சம் என்பது விழிகளில் இல்லை. அவர் விரல்களில் இருந்தது. நகக் கண்கள் என்று அதனால்தான் சொல்கிறோமோ?
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com