திண்ணைப் பேச்சு 34: இனிப்பும் விளையுமா?

திண்ணைப் பேச்சு 34: இனிப்பும் விளையுமா?
Updated on
2 min read

தஞ்சாவூர்க்காரர்களுக்கு அல்வா என்றால் அது திருவையாறு அசோகாதான். அல்வாவின் கூடப்பிறந்த தங்கச்சி. சமீபத்தில் சங்கரன்கோவிலில் நடந்த பொதிகை புத்தகத் திருவிழாவுக்குப் போனேன். அங்கே ருசியில் திருவையாறு அசோகாவையே தூக்கிச் சாப்பிட்டுவிடுகிற ஓர் அல்வா அனுபவம் கிடைத்தது.

இலக்கிய அன்பர் ஒருவர் சொக்கம்பட்டி அல்வா கடைக்கு அழைத்துச் சென்றார். சொக்கம்பட்டிக்கு அல்வாவை அதன் பூர்விகமான ராஜஸ்தானிலிருந்து அழைத்துவந்தவர் சொக்கம்பட்டி ஜமீன்தார். சுத்துப்பட்டு 750 கிராமங் களுக்குத் தலைவரான ஜமீன்தார் காசி யாத்திரை போயிருக்கிறார்.

ராஜஸ்தானில் ஒரு ராஜா வீட்டில் சாப்பிட்ட விருந்தில் அவருக்குப் பரிமாறப்பட்ட காசி அல்வா ரொம்பப் பிடித்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில் ராஜஸ்தானில் பஞ்சம் தலைவிரித்தாடியது. சொக்கம்பட்டி ஜமீன்தார் காசி அல்வா தயாரிக்கும் சமையல் கலைஞர்கள் குடும்பங்களை அழைத்து வந்திருக்கிறார். நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் வந்திருக்கிறார்கள்.

சொக்கம்பட்டி அல்வா கடையில் அறுபது வகையான அல்வா தினுசுகள் தயாரிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் தனி ருசி. ஜமீன்தார் காலத்துக்குப் பிறகு ராஜஸ்தானிலிருந்து (சிங் என்கிற பெயர் ஒட்டுடன் அறியப்பட்டவர்கள்) தென் மாவட்டங்களின் பல இடங்களுக்குக் குடிபெயர்ந்து விட்டனர். திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவும் அவற்றில் ஒன்று.

ஜமீன்தார் குடும்ப வாரிசுகள் சொக்கம்பட்டியில் மீண்டும் அல்வா கடையை அமைக்க விரும்பியிருக்கிறார்கள். பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்ட அவர்களை நேரில் சந்தித்து இந்தக் கலையின் நுட்பங் களைக் கண்டறிந்தார் சொக்கம்பட்டி ஜமீன் குடும்ப வாரிசுகளில் ஒருவரான கணேசன்.

அல்வா தயாரிப்புக் கூடத்தில் மிகப்பெரிய வாணலிகளில் அல்வா, பால்கோவா, காரச்சேவு, மிக்சர் வகைகள் தயாரிப்பதைக் காண்பித்தார். பால்கோவா கிளறும்போதே விசிறிவிட வேண்டும். அப்போதுதான் பக்குவம் வரும். சொக்கம்பட்டி அல்வாவில் முந்திரி சேர்ப்பது கிடையாது.

அல்வா கடையில் உட்கார்ந்து பலவிதமான அல்வாக்களை ருசித்தோம். காரவகைகளும் நாங்கள் தனிப் பிறவியாக்கும் என்பதுபோல் ருசித்தன.

வாழை இலைத்துண்டுகளில் உயிருடன் இருப்பதுபோல் தளதளத்த, சூடான அல்வாவின் ருசியை அங்கேதான் அனுபவிக்க வேண்டும்.

புதுமைப்பித்தன், தொ.மு.சி. ரகுநாதனிடம் தமக்கு அல்வா வாங்கி வருமாறு எழுதிய வெண்பா பிரசித்தம்.

‘அல்வா எனச் சொல்லி அங்கோடி விட்டாலும்

செல்வா நீ தப்ப முடியாதே - அல்வா

விருதுநகர்க் கெடியில் உன்னுடனே கட்டாயம்

வருது எனக் காத்திருப்பேன் நான்.’

தொ.மு.சி. ரகுநாதன் தாம் எழுதிய புதுமைப்பித்தன் பற்றிய நூலில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். கட்டாயம் அல்வா வாங்கித் தந்திருப்பார்!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, வில்லிபுத்தூர், திருச்செந்தூர் முதலான தென் மாவட்டங்களைத் தித்திப்புகளின் தேசம் என்றே குறிப்பிட்டுவிடலாம்.

வில்லிபுத்தூர் பால்கோவா மட்டுமன்றி ஜாங்கிரிக்கும் தனிச்சுவை உண்டு. தென்காசியில் விற்கும் ‘பால்பன்’ பல்லில்லாத முதியவர்களும் உண்டு மகிழலாம். பால்பன் வாயில் கடிபட்டவுடன் மட்டுமே சுரக்கும் ஜீரா பன்னுடன் சேர்ந்து தித்திக்கும்.

குதிரைக் குளம்படி வடிவத்தில் தேநீர்க் கடைகளில் விற்கப்படும் முட்டைக்கோஸ் வாங்கிச் சாப்பிட்டோம்.

“மேலகரம் மனோகரா இனிப்பைச் சாப்பிட்டதுண்டா?” என்று கேட்டார் இலக்கிய அன்பர். தஞ்சாவூரிலும் மனோகரம் என்கிற இனிப்பு கல்யாண விசேஷங்களில் வெல்லப்பாகில் செய்யப் படும் முறுக்கு வகையைச் சேர்ந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு மிகவும் பிடித்த இனிப்பு.

தூத்துக்குடியில் முந்திரிப் பருப்பில் தயாராகும் மக்ரூன் வாயில் பட்டதும் கரையும் இனிப்புகளின் கதாநாயகன்.

தஞ்சாவூரில் முந்திரிப் பருப்பில் செய்யப் படும் பருப்புத் தேங்காய் கோபுர வடிவில் செய்யப்படுவது நினைவுக்கு வந்தது.

கழுகுமலையிலும் கோவில்பட்டி யிலும் கிடைக்கும் கரிசல் இனிப்பான கடலை மிட்டாயின் சுவைக்கு ஈடு உண்டா?

கந்தூரித் திருவிழாக்களில் விற்கப்படும் முட்டாயி என்கிற தின்பண்டத்தை இரண்டு ஓலைப்பெட்டிகளில் கைபடாமல் அள்ளி பிறகு மூடித்தருவார்கள். அந்த இனிப்புக்கு இப்படி ஒரு மரியாதை.

தென்மலை சிவன் கோயிலில் உருளியில் செய்யப்படும் பாயசம் வெகு ருசியாக இருக்கும்.

அக்கார அடிசிலும் படித்துறைப் பாயசமும்

ஆண்டாள் தனது பாசுரம் ஒன்றில் அக்கார அடிசில் என்கிற இனிப்பை முழங்கையில் நெய்வழிய சாப்பிட்ட ருசியை வர்ணிப்பார்.

‘ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார’

எனும் வரிகளை மறக்க முடியுமா? குருவாயூர் பாயசமும் தெய்விக ருசிகொண்டது. பழனி பஞ்சாமிர்தத்தை முதல் தரிசனத்தின்போதே வாங்கிச் சாப்பிட்டுவிட வேண்டும் என்பார் பக்தர் ஒருவர்.

தென்காசி அருகில் உள்ள ஆயக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாயசம் நைவேத்யம் செய்து ஆற்றை ஒட்டிய படித்துறையில் பிரசாதமாக ஊற்றப்படும். இதற்குப் படித்துறைப் பாயசம் என்று பெயர். பாயசம் ஊற்றும் கல்லுக்குச் சீனிக்கல் என்று பெயர்.

அல்வா தயாரிப்பவரிடம் ஓர் அல்வாப் பிரியர், “நேத்தியவிட அதே அல்வாவில் இன்னிக்கு இனிப்புக் கூடுதலாக இருக்கே, அது எப்படி?” என்று கேட்டாராம்.

“நேத்திக்கு அல்வா செஞ்சு வச்சாச்சு. இன்னிக்கு அதிலே இனிப்பு விளைஞ்சிருக்கு” என்றாராம். “ஆஹா! இனிப்பு விளைஞ்சிருச்சு!” என்ன அருமையான சொல்லாடல். சொல்லும் இனிக்கிறதே!

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in