

கையில் கிடைக்கும் தாள்களைக் கிழித்தெறியும் வயதிலேயே நான் வண்ணப் படங்களைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். புத்தகம் வாசிக்கும் பழக்கம் என் பாட்டியிடமிருந்துதான் எனக்கு வந்தது. பாட்டியும் அம்மாவும் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள். நான் விளையாடி அலுத்தபோது பாட்டிதான் அம்புலிமாமா, பாலமித்ராவை அறிமுகம் செய்து வைத்தார்.
பிறகு சித்திரக்கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு ஜாவர் சீதாராமன், தேவன் போன்றவர்கள் என் பாட்டியின் நூலகச் சேமிப்பிலிருந்து எனக்கு அறிமுகமானார்கள். விக்கிரமாதித்யன் கதைகளைப் படித்து முடித்த பிறகு என் தேடல் அதிகமானது. திருச்சிக்கு அருகில் இருக்கும் முசிறி என்கிற சிற்றூரில் உள்ள அரசு நூலகமே என் சரணாலயமானது. மர அலமாரிகளில் புத்தகங் களின் வரிசையும் பழைய மின்விசிறியும் தேய்ந்த மர இருக்கைகளும் மூலையில் இருந்த மண் பானையும் இன்றும் என் நினைவில் பத்திரமாக இருக்கின்றன.
‘என்ன பாப்பா, புத்தகம் படிக்க வந்தீயா?’ என்று கேட்டு, என் வாசிப்பு ஆர்வத்தை அதிகரித்த அந்த நூலகர்தான் என் முதல் குரு. ஆண்டுகள் செல்லச் செல்ல என் வாசிப்பு தீவிரமானது. அப்பாவிடம் கெஞ்சி பணத்தைப் பெற்று ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற பத்திரிகைகளை வாங்கிப் படித்தேன். பாடப் புத்தகங்களுடன் கதைப் புத்தகங்களையும் சுமந்து செல்வேன்.
முதல் மதிப்பெண்எடுக்கும் மாணவி என்பதால்அமுதா டீச்சரின் கடுமை யான தண்டனையிலிருந்து தப்பித்தேன். பிறகு அமுதா டீச்சரே என்னிடம் புத்தகங் களை வாங்கிப் படிக்க ஆரம் பித்துவிட்டார்! அவரிடம் இருந்த புத்தகங்களை எனக் குக் கொடுத்தார். அவர் மூலமே பாலகுமாரனும் ஜானகிராமனும் அறிமுகமானார்கள்.
அந்த அமுதா டீச்சர் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்ற பிறகு, எனக்கு ‘ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி’ அறிமுகமானது. பழைய சைக்கிளின் இருபுறமும் காக்கி பைகளில் புத்தகங்களை எடுத்துக்கொண்டுவரும், ஆறுமுக தாத்தாவின் சைக்கிள் மணி அமுதகானமானது!
ஒருகட்டத்தில் புத்தகங்கள் வாங்கும் செலவைச் சமாளிக்க டியூஷன் எடுக்க ஆரம்பித்தேன். தேர்வு நேரத்திலும் மன இறுக்கத்தைக் குறைக்க நான் புத்தகங்களைத்தான் நாடினேன். சாப்பிடும்போதுகூடப் படிப்பேன். ஒருமுறை என் சித்தப்பா, இந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக நான் சாப்பிட்ட தட்டை நகர்த்தி வைத்தார். அது தெரியாமல், தரையைத் துழாவி அடி வாங்கி னேன். இன்றும் இந்தப் பழக்கம் மாறவில்லை. புத்தகங்களே நண்பர்களாக இருந்ததால் எனக்கு நட்பு வட்டத்தின் தேவையே ஏற்படவில்லை.
என் கணவரின் மாமா சீதாராமன், எங்கள் வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்தார். அவரின் அறை பத்திரிகைகளாலும் புத்தகங்களாலும் நிரம்பி வழியும். அந்த அறை என் உலகைப் பொன்னுலகமாக மாற்றியது. என் முதல் குழந்தை, என் அப்பா ஆகியோரை இழந்த துக்கத்திலிருந்து என்னை மீட்டெடுத்தவை புத்தகங்களே!
பல்லாவரத்தில் உள்ள ‘மறைமலை அடிகள் நினைவு நூலகம்’ எனக்கு அசோகமித்ரன், கு.அழகிரிசாமி, எஸ்.ராமகிருஷணன், லக்ஷ்மி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன், சுபா, பட்டுக் கோட்டை பிரபாகர், லா.ச.ரா, தி.ஜானகிராமன், அ.கா.பெருமாள், சுஜாதா, கீதா பென்னட், சுமதி, வித்யா சுப்ரமணியன், வாஸந்தி, இந்துமதி, ஜோதிர்லதா கிரிஜா, தஸ்தாயெவ்ஸ்கி, மாப்பசான் போன்ற ஜாம்பவான்களை அறிமுகப்படுத்தியது. என் வாழ்க் கையில் ஏற்பட்ட பல தடைகளையும் எளிதில் கடக்க அவர்களின் எழுத்தே துணைநின்றது.
என்றும் என் ஆதர்சம் பால குமாரன்தான். அவர் என் நண்பர், குரு, தகப்பன் என எல்லாமுமாக இருக்கிறார். என் இணையரை இழந்து தவித்த இந்த ஓராண்டில் துயரத்தில் இருந்து என்னை மீட்டெடுத்தவை பா.ராகவனின் ‘யதி’யும் அம்பையின் கதைகளும் கணையாழியின் கடைசிப் பக்கங்களும்தாம்!