அந்தக் கால விளையாட்டுகள்: கிந்தி முடிந்ததும் சில்லாங்குச்சி

அந்தக் கால விளையாட்டுகள்: கிந்தி முடிந்ததும் சில்லாங்குச்சி
Updated on
2 min read

அந்தக் காலத்தில் செலவே இல்லாமல் பிள்ளைகளாகக் கூடி விளையாடினார்கள். விளையாட்டில் பல வகை உண்டு. நாள் முழுக்கச் சொல்லிக்கொண்டே போகலாம். வெறும் பனையோலை, சோளத்தட்டை, சிறுகுச்சிகள், புளியங்கொட்டைகள் போன்றவையே அந்தக் காலத்தில் விளையாட்டுப் பொருள்களாக இருந்தன. அரசர்களின் காலத்திலிருந்து இப்போது வரைக்கும் அழியாமல் இருப்பது கண்ணாமூச்சிதான். எல்லாரும் கண்ணைத் திறந்திருக்கையில் ஒருத்தி மட்டும் கண்ணை மூடிக்கொண்டு, ‘சாட், பூட், த்ரீ...’ என்று கூட்டத்தில் ஒருத்தியைத் தொடுவாள்.

தொடப்பட்ட பெண்தான் கண்ணைப் பொத்திக்கொள்வாள். மற்ற எல்லாரும் ஓடி ஒளிந்துகொள்வார்கள், அவள் தொட வேண்டும். இதுதான் எங்கள் காலத்து கண்ணாமூச்சி. செதுக்கு முத்து. இந்த விளையாட்டுக்குத் தரையில் ஒரு வட்டம் வரைந்துகொள்வார்கள். அதனுள் ஆளுக்கு 20 முத்து என்று புளியங்கொட்டையை எண்ணிப் போடுவார்கள்.

தடிமனான ஒரு கல்லால் அடித்து இந்தப் புளியங்கொட்டையை வட்டத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும். யார் தன் பங்குக்கும் மேலாகக் கொட்டையை வெளியேற்றுகிறார்களோ அவர்களே ஜெயித்தவர்கள். இதில் சிலர் புளியங்கொட்டைக்குப் பதிலாக மாங்கொட்டையைப் போட்டு அடிப்பதும் உண்டு. மாங்கொட்டைக்கு வட்டம் பெரிதாக இருக்கும்.

கிந்தி. இந்த விளையாட்டுக்குப் பட்டையாக மண்ணில் கோடு கிழித்து, சிறு பாத்தி போன்று ஒரு பக்கம் ஐந்து பாத்தி, மறுபக்கம் ஐந்து பாத்தி எனப் போட்டுக்கொள்வார்கள். இந்தப் பாத்திக்குள் ஒரு ஓட்டுச்சில்லைப் போட்டு நொண்டியவாறே பத்துப் பாத்திக்குள்ளும் அந்த ஓட்டைத் தள்ள வேண்டும்.

இடையே காலை மாத்தி ஊன்றிவிடக் கூடாது, தடுமாறக் கூடாது, பாத்தியின் கோடுகளில் காய் விழுந்துவிடக் கூடாது. இந்த மூன்றில் ஒன்று நடந்துவிட்டாலும் அவர்கள் தோற்றவர்களாவார்கள்.

சோளத்தட்டையை உரித்தால் அதனுள்ளே இப்போது உள்ள தெர்மாகோல் போல் உருண்டையாக நீளமாக ஒன்று இருக்கும். அதை நாங்கள் ‘பல்பு’ என்போம். அதை நம் வசதிக்கு ஏற்றவாறு ஒடித்துக்கொள்ளலாம். ஒரு பனையோலையை எடுத்துச் சிறு துண்டாக உரசி அதில் இரண்டை எடுத்துக்கொள்வார்கள்.

பிறகு கார முள்ளை எடுத்து (அப்போதெல்லாம் கருவேலிகள் இல்லை) இரண்டு ஓலைகளையும் சேர்த்துக் குத்தி, அந்த முள்ளைச் சோளத்தட்டை பல்புவில் குத்திக்கொண்டு, கையில் பிடித்தபடியே ஓடுவார்கள். அப்போது இந்த இரண்டு ஓலைகளும் விர்ரென்று சுற்றும்.

அதைப் பார்க்கப் பார்க்க ஓடுபவர்களுக்கு உற்சாகம் பெருக்கெடுக்கும். இந்தச் சோளத்தட்டை பல்புவை வைத்து விதவிதமான வண்டி, பொம்மை போன்றவற்றைச் செய்தும் விளையாடுவார்கள்.

சில்லாங்குச்சி. மரங்களில் சிறுகொப்புகளை வெட்டி அதில் இரண்டு குச்சிகளை எடுத்து வழுவழுப்பாக்குவார்கள். ஒரு குச்சி நீளமாக இருக்கும். இன்னொன்று சிறியதாக இருக்கும். சிறிய குச்சியைக் கையில் பிடித்து இன்னொரு குச்சியால் வேகமாக அடிப்பார்கள். அடிபட்ட குச்சி தூரத்தில் போய் விழும். எவ்வளவு தொலைவுக்கு விழுகிறதோ அதைப் பொறுத்தே வெற்றி.

இந்தக் குச்சியால் மரத்தில் இருக்கும் கொய்யாக்கனி, மாங்கனி, ஏன் பலாக்கனியைக்கூட விழவைக்க முடியும். அந்தக் காலத்தில் வயலுக்கும் புஞ்சைக்கும் சாப்பாடு கொண்டு போவதற்கு டிபனோ தூக்குப்போனியோ கிடையாது. மண் கலயம்தான். சில நேரம் இந்தப் பிள்ளைகள் அடிக்கும் சில்லாங்குச்சி கலயத்தை ஓட்டை போட்டுவிட, அதிலிருக்கும் கஞ்சி சிந்திவிட... பிறகென்ன பெரிய சண்டைதான்.

‘தவுடுகண்ணி பொட்டைக்கண்ணி’ என்று ஒரு விளையாட்டு. இதில் ஒரு குழுவுக்கு எட்டுப் பேராக இரண்டு குழுவாகப் பிரிந்துகொள்வார்கள். உரசிய ஓட்டை மேலே தூக்கிப்போடுவார்கள். ஓட்டின் வெளிப்பக்கம் விழுந்தால் முதல் எட்டு பேர் போய் ஒளிந்துகொள்வார்கள்.

மறு எட்டு பேரில் இரண்டு பேர் உட்கார்ந்தவாறு ஒருத்தியைக் குறுக்கப் படுக்கவைத்து, பழைய சேலையால் மூடி மறைத்துவிடுவார்கள். மற்றவர்கள் முதல் குழுவின் கண்ணில் படாமல் ஒளிந்துகொள்ள வேண்டும். சேலையால் மூடி மறைத்த பிறகு, “வாங்க வாங்க மறைஞ்சி இருக்கவங்க வாங்க” என்று கூப்பிட, ஒளிந்திருக்கும் எட்டுப் பேரும் ஓடிவருவார்கள். அப்படி வருகிறவர்கள் படுத்திருப்பவள் யார் என்று சொல்லிவிட வேண்டும்.

அப்படிச் சொல்லிவிட்டால் அவர்கள் ஜெயித்தவர்களாகிவிடுவார்கள். அதற்காகப் படுத்திருப்பவளை, “ஆடு, ஆடு” என்பார்கள். இவளும் மற்ற இரண்டு பேர் மூடிப் பிடித்துக்கொண்டிருக்கும் சேலை மறைப்புக்குள் இருந்து ஆடுவாள். பிறகு பாடச் சொல்வார்கள்.

பாடினால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் சேலைக்குள் இருப்பவள், “ம்... ம்...” என்று முனங்குவாள். சிலர் அவள் ஆடும் ஆட்டத்திலேயே இன்னார் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சிலர் முனங்குவதை வைத்து கண்டுபிடித்துவிடுவார்கள். இப்பபடியாக நாள் முழுக்க விளையாட்டுகள் தொடரும். அலுப்பே தெரியாது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in