‘திருக்குறள்’ சாமிநாதன்

‘திருக்குறள்’ சாமிநாதன்
Updated on
2 min read

திருவண்ணாமலையில் கேப்டன் சாமிநாதன் என்கிற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இருந்தார். அவர் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்திருப்பதைப் பெருமையாக என்னிடம் கூறுவார். ஒழுக்கத்தின் மீதும் திருக்குறளின் மீதும் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார். திருவள்ளுவர் என்றால் அவருக்கு உயிர் மூச்சு. அவருடைய கடின உழைப்பின் காரணமாக எங்கள் ஊரில் திருவள்ளுவர் சிலை ஒன்று உருவானது. வேட்டவலம் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு, ‘திருவள்ளுவர் அகம்’ என்று பெயர் வைத்தார். அந்த வீடு செங்கற்களால், சிமெண்டால் கட்டப்பட்டதா என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறள்களால் கட்டப்பட்டது என்பது மட்டும் உறுதியாகத் தெரியும். வீடு முழுவதும் குறள்களை எழுதி நிரப்பி, இன்னும் திருவள்ளுவர் உயிரோடு வந்து ஆயிரம் குறள்கள் எழுதி இருந்தால்கூடத் தன் வீட்டுச் சுற்றுச்சுவர்களில் குறளை நிரப்ப இடம் விட்டிருந்தார். பகலில் எந்தச் சாலையிலும் சைக்கிளில் காட்சி தருவார். சாக்லெட் நிரப்பிய ஒரு பையை அதில் மாட்டி வைத்திருப்பார். நாளும் பொழுதும் திருக்குறளே வாழ்வானதால், அவர் வீட்டின் மாடிமேல் ஸ்பீக்கர் கட்டி, தினந்தோறும் திருக்குறளையும் அதன் பொருளையும் காலை ஐந்து மணிக்கு ஒலி பெருக்கியில் சொல்ல ஆரம்பித்துவிடுவார்.

அன்று அவர் வருத்தத்துடன் என்னைப் பார்க்க வந்தார். “இந்தச் சமூகம் எவ்வளவு கெட்டுப்போய்விட்டது... நான் மக்கள் நன்மைக்காகத் திருக்குறளைத் தினமும் சொல்லிவந்தேன். இதைப் பிடிக்காத யாரோ ஸ்பீக்கர், மைக் செட் அனைத்தையும் திருடிச் சென்றுவிட்டார்கள்” என்றார்.

அதற்கு நான், “பொருள்கள் காணாமல் போய்விட்டால் பரவாயில்லை. வீட்டில் திருக்குறளாவது பத்திரமாக இருக்கிறதே, நாம் கொடுத்து வைத்தவர்கள்” என்று சமாதானம் செய்தேன். பிறகுதான் தெரிந்தது அந்தப் பகுதியில் உள்ள லாரி டிரைவர்களும் பஸ் டிரைவர்களும் இரவில் வண்டி ஓட்டிவிட்டு அயர்ந்து தூங்கும்போது, திருக்குறள் தொந்தரவு செய்திருக்கிறது.

அதனால், ஸ்பீக்கரையும் மைக் செட்டையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்று. அதை கேப்டன் சாமிநாதனிடம் நாங்கள் சொல்லவில்லை. ஒருநாள் நான் ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோது, முந்தின நாள் இரவு ராமலிங்கம் தன் குடும்பத்தினரோடு தகராறு செய்துவிட்டு, கையில் காசு இல்லாமல் கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து திருக்குறள் சாமிநாதன் சைக்கிளை நிறுத்திவிட்டு, சாக்லெட் பையோடு உள்ளே வந்தார். உடனே என்னை ஒரு திருக்குறள் சொல்லச் சொன்னார். நானும் ஒரு குறளைச் சொல்லி முடித்தேன். ஒரு சாக்லெட்டை எடுத்து மகிழ்ச்சியாக எனக்குக் கொடுத்தார். அருகில் இருந்த ராமலிங்கத்தைப் பார்த்து, “தம்பி, நீ ஒரு திருக்குறள் சொல்” என்றார்.

எரிச்சலில் இருந்த ராமலிங்கம், “திருக்குறள் சொன்னால் என் பசி தீர்ந்துவிடுமா?” என்று கோபத்துடன் கேட்டார். போரில் சாய்ந்த ஒரு வீரனைப் போல் சாய்ந்தார் சாமிநாதன். அவரைப் பிடித்து நாற்காலியில் அமரவைத்தேன். அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தேன். எழுந்து ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தார். “இவன் மனிதனா? இனி இந்தப் பக்கமே வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

பொருளாதாரத்தின் அடிப்படையில் இல்லற வாழ்க்கையே இல்லாமல் போகிறவனுக்கு, தான் வாழ்வது என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது. பொருள், புகழ் சம்பாதிப்பவர்களுக்கு நீதி நூல்கள் கரம்பிடித்து அழைத்துச் செல்ல உதவியாக இருக்கின்றன. ஆனால், அன்றாடம் காய்ச்சிகளுக்கு இது பொருந்துமா என்பது இன்றுவரை விடை தெரியாத கேள்வியாகவே என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

- ஓவியர் பல்லவன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in