

முன்பெல்லாம் வீடுகளில் பெண்கள் ஏதேனும் முணுமுணுத்தபடி வளையவருவார்கள். சில நேரம் அது அவர்களுக்குப் பிடித்த ராகமாக இருக்கும். அபூர்வமான பழைய பாடல்களின் ராகங்கள் வாய் முணுமுணுத்தலாக வீட்டுக்குள் அங்குமிங்கும் அலையும். ராகங்கள்தாம் என்றில்லை. வாய்விட்டுச் சொல்ல முடியாத சோகங்களையும் சத்தமாக வெளிப்படுத்த முடியாத கோபதாபங்களையும் சன்னமான குரலில் சொல்லிச் செல்வார்கள். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் ‘அங்கே என்ன முணுமுணுப்பு?’ என்று ஆண்கள் கேட்பதுண்டு. அப்படி ஒரு தலைமுறை இருந்தது. ‘முணுமுணுத்த சாப்பாட்டைவிட, முரமுரத்த பட்டினி மேல்’ என்பது பழமொழி.
நண்பன் சொன்ன சம்பவம் ஒன்று. அப்பாவுக்கும் அம்மாவுக்கு மிடையே ஏதோ சண்டை. சண்டை முடிந்த பிறகும் அம்மா சமையல் அறையில் ஏதோ முணுமுணுத்தபடி இருந்திருக்கிறார். அப்பா, “என்ன முணுமுணுப்பு வேண்டியிருக்கிறது?” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அடுப்பில் சாதம் கொதித்தது. அடுப்புக்குள் விறகுச் சுள்ளிகளை உடைத்துத் திணித்தார் அம்மா.
“எதுக்கும்மா முணுமுணுக்கறே? சண்டைதான் முடிஞ்சு போச்சுல்ல...” என்றானாம் நண்பன்.
“உனக்குப் புரியாதுடா. இந்தா சடசடன்னு சுள்ளி எரியுதா? அதுவும் என்னை மாதிரி முணுமுணுக்குது. முணுமுணுக்காம பத்திக்கிட்டு எரிஞ்சா வீடே எரிஞ்சு போயிரும்டா. இந்த அடுப்பும் என் வயிறும் ஒண்ணுடா.”
பல தலைமுறைகளாக ஆண்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் உயர்த்திப் பேசத் தயங்கிய பெண்களுக்கு வடிகாலாக முணுமுணுத்தல் இருந்திருக்கிறது.
இப்போதெல்லாம் பெண்கள் முணுமுணுப்பதில்லை. எதையும் உரத்துப் பேசவும் உரிமைக்குரல் கொடுக்கவும் போராட்டக் களத்தில் முன்நின்று முழக்கமிடவும் பெண்கள் முன்வருகிறார்கள்.
‘எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்’ என்கிற பாரதியார் பாடலில், ‘கண்ணை இமையிரண்டு காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்’ என்கிற வரியில் வேலை சுமை காரணமாக வேலையாள்கள் முணுமுணுப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கண்ணன் அதைக்கூடச் செய்ய மாட்டானாம்! சீர்காழி இந்த வரியை இரண்டுமுறை பாடுவார்.
பெண்கள் மட்டுமன்றி வறுமையின் காரணமாக அநீதிக்கும் அடக்குமுறைக்கும் அடிபணிய நேர்கிற ஆண்களும்கூட முணுமுணுக்கவே செய்கிறார்கள்.
ஒரு தேசமே முணுமுணுத்தால் என்னவாகும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் பிரெஞ்சுப் புரட்சி. ‘பசிக்கிறதா, ரொட்டிக்குப் பதிலாக கேக்கைச் சாப்பிடலாமே’ என்று கேலி பேசிய பிரெஞ்சு மகாராணியின் ஆணவம், ஆத்திரமுற்ற மக்களின் முணுமுணுப்பாக எழுந்து முழக்கமாக வெடிக்கவில்லையா?
சபர்மதி ஆசிரமத்தில், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று முணுமுணுக்கப்பட்ட பாடல் ‘வந்தே மாதரம்’ என்கிற முழக்கமாகவும், ‘வெள் ளையனே வெளியேறு’ என்கிற நாடு தழுவிய கோஷமாகவும் ஒலிக்கவில்லையா?
பொது மக்களுக்கு எதிரான திட்டங்களை அரசாங்கம் கொண்டுவரும்போது, ‘இத்தகைய திட்டத்தில் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் முணுமுணுப்பு’ என்று நாளேடுகள் செய்தி வெளியிடுவதாகப் பார்க்கிறோம். முணுமுணுப்பு என்பது சிறு காட்டுத்தீ போன்றது. பொருள்படுத்தாது விட்டுவிட்டால் சகலத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கிவிடும்.
புதுவை ஆரோவில் கவிஞர் மீனாட்சி அக்காவுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, “எறும்புகள் முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறீர்களா?” என்றார்.
“அப்படி முணுமுணுப்பதாகவே இருக்கட்டும்! அது எப்படி நம் காதில் விழும்?” என்று கேட்டேன்.
“நேற்று என் வீட்டெதிரே மரங்களின் கீழே ஒரு எறும்பு வரிசை ஊர்ந்துகொண்டிருந்தது. மரங்களிலிருந்து கீழே விழுந்து கிடந்த சருகுகளின் மீது அந்த எறும்பு வரிசை ஊர்ந்தபோது சரசரவென்று ஒரு மெல்லொலி எழுந்தது. எறும்புகள் முணுமுணுத்தபடி செல்வதுபோல் அது எனக்குத் தோன்றியது” என்றார் கவிஞர்.
வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதையில் அரசமரம் தன் ஆயிரம் இலைகொண்டு நாவுகளால் (அரற்றியது) முணுமுணுத்தது என்று எழுதியிருப்பார்.
குணமாக்கும் முணுமுணுப்பு: எங்கள் கிராமத்தில் விஷக்கடிகளுக்கு எந்த மருத்துவமும் இன்றி குணப்படுத்தும் சக்திகொண்ட பெண்மணி இருந்தார். முதியவர் ஆனால் எழுதப் படிக்கத் தெரியாதவர். ஒரு தட்டில் விபூதியைப் பரப்பி, கற்பூரம் ஏற்றி ஏதோ முணுமுணுக்க ஆரம்பிப்பார். என்ன மொழியென்றே புரியாது. ஆனால், விஷக்கடி பட்டவர் குணமாகிவிடுவார். “அந்த மந்திரம் உங்களுக்குப் புரிகிறதா?” என்று அப்பாவிடம் கேட்பேன். “அவர் முணுமுணுப்பிலேயே குணமாக்கக்கூடியவர்” என்றார் அப்பா.
குற்றத்தின் மணியோசை: தி.ஜானகிராமன் எழுதிய ‘கண்டாமணி’ சிறுகதையில் மார்க்கம் என்பவர் நடத்துகிற மெஸ்சில் சாப்பிட வருகிறார் ஒரு பெரியவர். அவர் சாப்பிட்ட பிறகு மார்க்கம் குழம்பைக் கவனிக்கிறார். ஒரு பாம்புக்குட்டி செத்துக் கிடக்கிறது. மெஸ்சை நடத்தும் கணவனும் மனைவியும் பயந்துவிடுகிறார்கள்.
பாம்புக்குட்டியை அப்புறப்படுத்திவிட்டாலும் சாப்பிட்ட பெரியவருக்கு ஒன்றும் ஆகாமல் இருக்க வேண்டுமே! அவருக்கு ஒன்றும் ஆகாமல் இருந்தால் பஞ்சலோகத்தில் ஒரு பெரிய கண்டாமணி வாங்கி, கோயிலில் தொங்கவிடுவதாகக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்! மறுநாள் காலை பெரியவர் இறந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.
டாக்டர் வந்து பார்த்துவிட்டு மாரடைப்பால் இறந்ததாகச் சொல்லிவிடுகிறார். ஆனாலும், அவர் சாப்பிட்ட குழம்பில் ஏறிய விஷம்தான் அவரைக் கொன்றுவிட்டது. கடவுள் பழியி லிருந்து நம்மைக் காப்பாற்றிவிட்டார் என்று நிம்மதி அடைகிறார்கள்.
வேண்டிக்கொண்டபடி கண்டாமணி செய்து கோயிலில் தொங்கவிடுகிறார்கள். ஆனால், அது ‘டணார் டணார்’ என்று ஒலிக்கும்போதெல்லாம் செத்துப்போன பெரியவர் நினைவு வந்துவிடுகிறது. பெரியவர் செத்ததற்கு நீங்கள்தான் காரணம் என்று மனசாட்சி முணுமுணுக்கிறது. அதன் முணுமுணுப்பின் போரோசையாகக் கோயில் கண்டாமணி ஓசை எழுகிறது.
மார்க்கத்தால் இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. கோயில் தர்மகர்த்தாவிடம் வெள்ளி மணிகள் செய்து தருவதாகவும் கண்டாமணியைத் தன்னிடம் கொடுத்துவிடுமாறும் கேட்கிறார்.
தர்மகர்த்தா, “சித்தம் கலங்கிப்போச்சா?” என்று சிரிக்கிறார். மறுநாள் குளிக்கும்போதும் கோயில் மணிச் சத்தம் அவர் மனசாட்சியின் மீது மோதுகிறது!
டணார்!
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com