காணாமல் போகும் சொற்கள் - ‘ஆவலாதி’ சொல்லலாமா?

காணாமல் போகும் சொற்கள் - ‘ஆவலாதி’ சொல்லலாமா?
Updated on
1 min read

‘ஆவலாதி’ என்கிற இந்தச் சொல்லை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வயதானவர்கள் இன்றும்கூடப் பயன்படுத்தலாம். மக்களின் மிக நுட்பமான உணர்வுகளை, மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்தும் வழியாக ‘வட்டார வழக்குகள்’ இருந்துவந்திருக்கின்றன. தங்களது கோபம், ஏமாற்றம் போன்றவற்றை மிகவும் அழகாக வெளிப்படுத்த உதவும் சொற்களையோ சொல்லாடல்களையோ வட்டார வழக்குகளில் மக்கள் பயன்படுத்திவந்தனர். அதற்கு இணையாகத் தமிழில்கூட மிகச் சரியான அர்த்தம் உள்ள சொல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சில வட்டார வழக்குச் சொற்கள் காலப்போக்கில் மறைந்துவருகின்றன. வட்டார வழக்குகளுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் புதுமைப் பித்தன். அவருடைய ‘ஒரு நாள் கழிந்தது’ சிறுகதையில் நெல்லை வட்டார வழக்கு அழகு கொஞ்ச வலம்வரும். ஆனால், அவர்கூட ஆவலாதி என்கிற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அதற்கான வாய்ப்பு அந்தக் கதையில் வரவில்லை.

ஆவலாதி என்றால் என்ன? தற்போதைய வழக்கப்படி புகார் சொல்வது என்கிற அர்த்தத்துக்கு அருகே வருமே தவிர, உண்மையான அர்த்தம் அல்ல. ஆவலாதி என்பது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு சொல். தங்கள் மனதுக்கு மிகவும் நெருங்கியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களைப் பற்றி ஏதாவது எதிர்மறையான விஷயம் சொல்ல வேண்டியிருந்தால், அதை ‘ஆவலாதி சொல்லுதல்’ என்பார்கள். அதையும் வேறு யாரோ தெரியாதவரிடம் சொல்லிவிட முடியாது. நெருக்கமானவரிடம் சொல்வதுதான் ஆவலாதி. மகன் ஒரு பேனாவைத் தொலைத்துவிட்டான், புது பேனா வாங்கித் தர முடியாது என்று அப்பா சொல்லிவிட்டார்.

இதைத் தன் நெருங்கிய நண்பர்களிடம் வருத்தத்தோடு சொல்வதே ஆவலாதி. ஆவலாதி சொல்வதில் அன்பு இருக்கும், செல்லக் கோபம் இருக்கும். ஆனால், ஆத்திரமோ வெறுப்போ இருக்காது. மனைவி கணவர் மேல் சொல்வது, குழந்தைகள் பெற்றோர் மேல் சொல்வது எல்லாம் ஆவலாதி. இதுதான் ஆவலாதி சொல்லின் வேர். வீட்டுப் பெரியவர்கள் கைக்குழந்தை ஏதாவது ஒலி எழுப்பும் போது, "பாரு, எப்படி ஆவலாதி சொல்லுது" என்று செல்லமாகச் சொல்வது வழக்கம். ஆனால், இந்த அழகான ஆவலாதி சொல்லைப் பயன்படுத்த நெல்லையில் ஆள்கள்தாம் இல்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in