எங்கள் ஊர் கிறிஸ்துமஸ்: கர்த்தர் பிறந்தார் கறியும் சோறும் தந்தார்!

எங்கள் ஊர் கிறிஸ்துமஸ்: கர்த்தர் பிறந்தார் கறியும் சோறும் தந்தார்!
Updated on
3 min read

டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் அரையாண்டுத் தேர்வு படிப்புக்கு இடையில் கிறிஸ்துமஸ் தொடர்பான வேலைகளும் ஆரம்பித்துவிடும். ‘கிறிஸ்துமஸ் குடில்’ என அழைப்பதை எங்கள் ஊரில் ‘கர்த்தர் கூடு’ என்பார்கள். உண்மையில் அது கூடு அளவிற்குச் சிறியதாகத்தான் இருக்கும். குடில் அமைப்பதற்கான ‘சுக்குநாறிப் புல்’லை அவ்வப்போது மலைக்குச் சென்று பறித்து வருவோம். அதன் வாசனை சுக்குபோல இருப்பதால் இந்தப் பெயர். ஸ்டூலைத் தலைகீழாக வைத்து நான்கு கால்களிலும் சுக்குநாறிப் புல்லைக் கட்டினால் அதுதான் குடில். சில வீடுகளில் மட்டுமே குடில் வைப்பதற்கான சொரூபங்கள் இருக்கும். மற்றவர்கள் பழைய வாழ்த்து அட்டைகளில் இருக்கும் கிறிஸ்துமஸ் படங்களை வைத்துக் குடில் அமைப்பார்கள். இப்போது பரிசுப் போட்டிகள் வைக்குமளவிற்கு அது ஆடம்பரமாகிவிட்டது.

வால்நட்சத்திரம்: சிறுவர்கள் மூங்கில் கழியை வகிர்ந்து, நூலால் கட்டி, வால் நட்சத்திரம் செய்து, நடுவில் சிறு குண்டு பல்பு பொருத்தி, வண்ணக் காகிதம் ஒட்டித் தொங்கவிடுவார்கள். பிறகு கடைகளில் வால்நட்சத்திரம் வாங்க ஆரம்பித்துவிட்டோம். ஆறு முனை நட்சத்திரங்களும் ஐந்து முனை நட்சத்திரங்களும் உண்டு. நட்சத்திரம் செய்ய மூங்கில், வண்ணத்தாள், நூல், பசை வாங்குவது எல்லாம் அவ்வளவு எளிதானது அல்ல. இரவு முழுவதும் பல்ப் எரிந்தால் மின்சாரக் கட்டணம் கூடும் எனப் பல வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட அனுமதிக்க மாட்டார்கள். சில வீடுகளில் மின்சாரம்கூட இருக்காது. இவற்றை எல்லாம் கடந்துதான் சிறுவர்கள் நட்சத்திரங்களைச் செய்ய வேண்டும்.

அச்சு முறுக்கு: பண்டம் செய்வது என்பது கிறிஸ்துமஸுக்குத்தான். எங்கள் பாட்டி காலத்தில் ஓலைக் கொழுக்கட்டையும் பணியாரமும் மட்டும்தான் செய்வார்கள். எங்கள் அம்மா காலத்தில் வீடுகளில் அச்சு முறுக்கும் செய்யத் தொடங்கினார்கள். கொஞ்சம் வசதி வரவும் முந்திரிக்கொத்து, அதிரசம், முறுக்கு போன்ற பண்டங்களும் இணைந்துகொண்டன. கருப்பட்டி பணியாரம், சீனி சேர்த்த வெள்ளைப் பணியாரமாக மாறியது. ஆனாலும் கிறிஸ்துமஸ் என்றால் அச்சு முறுக்குதான். தோசை என்பதே கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற விழாக்களில் மட்டுமே உண்ணும் உணவாக இருந்தது. என் அப்பா காலத்தில் சில வீடுகளில் சாம பூசைக்குப் போகுமுன் தோசை சுடுவார்கள். பூசை முடிந்து வீடு வந்தபின் இறைச்சிக் குழம்பு வைத்து விடிவதற்கு முன் சாப்பிடுவார்கள்.

பள்ளித் தோழர் ஒருவர், கோயிலில் இருந்து ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக்குச் சென்று சில தோசைகளைச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் கோயிலுக்கு வந்துவிட்டார். கோயிலில் தான் இருந்தேன் என்று காட்டிக்கொள்வதற்கு செபத்தைத் தவறாகச் சொல்லிவிட்டார். தோசை குறைந்ததாக அக்காவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்குச் சென்று தோசை குறைந்ததைக் கண்ட அவர் அக்கா சாத்திவிட்டாராம்! அந்த அளவுக்குத் தோசை என்பது அரிதான பண்டமாக அன்றைக்கு இருந்தது. இட்லியும் பெரிய அளவில் கிடையாது. பல வீடுகளில் இட்லிக் கொப்பரை வாங்குவதற்கே காசு இருக்காது. எண்பதுகள் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வந்ததில்லை. கேரல் எனும் கிறிஸ்துமஸ் பாடல்களும் பாடியது இல்லை.

பனை ஓலைக் கொழுக்கட்டை
பனை ஓலைக் கொழுக்கட்டை

கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கமும் அப்போது கிடையாது. ‘கர்த்தர் பிறந்தார் கறியும் சோறும் தந்தார்’, ‘சூசையப்பர் பிறந்தார் சுசியம் தந்தார்’, ‘மாதா பிறந்தார் மாம்பழம் தந்தார்’ எனச் சும்மா ஏதோ பாடியது உண்டு. ஒரு காலகட்டம் வரை கிறிஸ்துமஸ், ஈஸ்டர் என விழாக்காலங்களில் மட்டுமே கறி எடுக்கும் வழக்கம் இருந்தது. வசதியானவர்கள் ஆட்டுக்கறி வாங்குவார்கள். ஏழைகள் பன்றிக்கறி வாங்குவார்கள். சில வீடுகளில் வளர்ப்புக் கோழிகளைச் சமைப்பார்கள். கடைகளில் கோழி விற்பனை அப்போது கிடையாது. சில வீடுகளில் மட்டுமே புதுத்துணி எடுப்பார்கள். பொட்டுவெடி, கம்பி மத்தாப்பு, கயிறு மத்தாப்பு, பாம்பு மாத்திரை, தரைச் சக்கரம், கொலவானம் எனப்படும் பொரிவானம் இவை எல்லாம் சிறார்களுக்கானவை. சில நேரம் பொரிவானம் வெடித்துக் காயங்களுடன் அலைந்த சிறார்களும் உண்டு.

முக்கோணமாக இருக்கும் ஓலைப்படக்கு, யானை வெடி, குதிரை வெடி, லெட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கெட் வெடி, குத்து வெடி போன்றவை பெரியவர்கள் வெடிக்கக் கூடியவை. ஊதுபத்தியால் திரியைக் கொளுத்தி விட்டு ஓடுபவர்கள், கையில் வைத்துக்கொண்டே வெடியைப் பற்ற வைப்பவர்கள், எட்ட நின்று பார்ப்பவர்கள், அப்படிப் பார்த்தாலும் காதைப் பொத்திக்கொள்பவர்கள், கண்களை மூடிக்கொண்டு கேட்க மட்டும் செய்பவர்கள் என விதவிதமான மக்கள் உண்டு. ரயில் வெடி விலை சற்றுக் கூடுதல் என்பதால் ஒருசிலர் மட்டுமே அதை வாங்குவார்கள். அதை வெடிக்கும்போது பார்வையாளர்கள் கூடுதலாக இருப்பார்கள்.

இரண்டு மரங்களுக்கு அல்லது இரண்டு தூண்களுக்கு இடையே நூலைக் கட்டி அதில் வெடியை இணைத்து நெருப்பை வைப்பார்கள். அது, ‘உய்’ என்று நூல் வழியாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வேகமாகச் செல்லும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று கும்மி அடிப்பதற்கென வீடுகளில் முளை வைப்பார்கள். எங்கள் தெருவில் இருந்த நேசமணி பாட்டி வீட்டில்தான் அனைவரும் முளை வைப்பார்கள். அதற்கென்று அலேசியார் கும்மிப் பாடல் உண்டு. பல பாட்டிகள் மனப்பாடமாகப் பாடுவார்கள். ஒரு காலகட்டத்தில் பாடுபவர்கள் இல்லை என்பதாலோ என்னவோ அந்த வழக்கம் நின்றுவிட்டது.

இரவு திருப்பலிக்கு முன் விளையாடு வோம். பட்டாசு வெடிப்போம். இரவு முழுவதும் தெருவே களைகட்டும்! சாமப்பூசை எனப்படும் நள்ளிரவு திருப்பலியில் சரியாக பன்னிரண்டு மணிக்குக் கோயில் மணி அடிப்பதுதான் யேசு பிறந்துவிட்டார் என்பதற்கான அடையாளம். கோயிலில் வைத்திருக்கும் குடிலும் எளிமையாகத்தான் இருக்கும். இப்போது மிகவும் பிரம்மாண்டமாக வைக்கிறார்கள்.

சாலையோர ஆலமரங்களுக்கு அடியில் குருத்து மணல் என்று சொல்லப்படும் மிருதுவான மணல் இருக்கும். கிறிஸ்துமஸ் அன்று மதிய உணவை அங்கே கொண்டுசென்று உண்டு, விளையாடிவிட்டு வருவோம். ஆலம் விழுதுகளை இணைத்துத் தற்காலிக வடம் (ஊஞ்சல்) கட்டி விளையாடுவோம். மாலை பெரும்பாலும் திரைப்படத்திற்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அவரவர் வசதிக்கு ஏற்ப நகரத்திற்குச் சென்று அன்று வெளியான புதிய திரைப்படத்தையோ ஊரில் இருக்கும் டென்ட் கொட்டகையிலோ படம் பார்த்துவிடுவார்கள். கால ஓட்டத்தில் தொலைக்காட்சி இந்த இடத்தை எடுத்துக்கொண்டது.

- bharathilahar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in