

கூவம்
கலைந்த மழை மங்கல்
சிதறும் தூறல் திரை
நனைந்த மக்கல் கூரைகள்
கூரைமீது ஈரப் புகையெழுச்சி
மங்கிய காட்சியில் மரம் பச்சை
பனிப்புகை குழம்பல்
கூவத்துச் சாக்கடைப் பாய்மீது
மழைச்சாரல் சிதறும் முத்து
நீர்ப்பரப்பில் எருமை முகத்துமூச்சு
நாற்றத்துக்குள் எருமைக் குளியாடல்
நனைந்த மண்ணில் பதிந்த காலடி
சகதி சேர்ந்த சேற்றுக் கோலம்
கூவத்தில் எருமைகள்
அசையாத மூச்சு
உடலேணி ஏறி - அவள்
உள்ளத்தோணி பற்றி
நாற்ற உலகிடையே ஏறிவர் பவனி
ஓ, அது
பேசாத பேச்சு!
மழைச்சாடல்
மூட்டம்
இருள்
மோனம்
கூவம் - தஞ்சை ப்ரகாஷ்
இந்தக் கவிதையில் அழுக்கும் குப்பையும் சகதியும் கும்பியுமாகச் செல்லும் கூவத்தைப் போலவே பெருக்கெடுத்துப் பாயும் வார்த்தைகள். புரிதல் இன்றி உணர்த்தலே உருவாய்க்கொண்டு சாக்கடைப் பாய் விரிக்கும் சாகசம் செய்திருப்பார். காவிரி, கங்கை போன்ற நதிகளைப் போற்றிப் பாடும் கவியுள்ளம் கூவத்தைப் பாட ஒப்பாத நிலைமாற்ற தஞ்சை ப்ரகாஷ் எண்ணினார் போலும், எழுதிவிட்டார். மகா நதிகளின் கரை ஓரம்தான் கலைகளும் இலக்கியமும் தழைத்துச் செழித்தன. மனித நாகரிகமும் வேர்பிடித்து விருட்சமானது. கூவம் என்கிற மகா நதியோரம்தான் தருமம் செழித்தது. வந்தாரை வாழவைக்கும் தாய்மடியாக விரிந்தது. இன்று அந்த மகா நதியை மகா சாக்கடையாக்கிவிட்டு, அதன் கரையோரம் கையறு நிலையில் நிற்கிறோம்.
கூவம் நதியிலே துவைத்துக் குளித்து தூய்மை உடலோடும் மனத்தோடும் கரையேறி இறைவழிபாடு செய்து திரும்பியோர் உண்டு. வள்ளலார் முதலான சித்தர்கள் வாழ்வின் தூய்மைக்கும் வழிகாட்டச் செய்த அந்த மகாநதியைத் துர்நாற்றம் வீசும் கழிவு நீரோட்டமாக மாற்றிவிட்டோம். சென்னை மாநகர் முழுக்க ஓடிக்கொண்டிருந்த நதிகளில் எல்லாம் சாக்கடை கலந்து, நாறுவது எல்லாம் கூவம் என்றானது. கூவம் வீதிக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் மட்டும் புகவில்லை. மனித மனங்களுக்குள், அரசியல், இலக்கிய, தத்துவத்துக்குள் எல்லாம் புகுந்து எல்லாவற்றையும் தன்னின் அம்சங்களுடன் ஊடாடும் தனிப்பிறவிகள் ஆக்கிவிட்டது.
கவிஞர் ரவி சுப்பிரமணியன் தன் கவிதை யொன்றில் வண்டல் நகரின் அழகிய சிறு செடியைக் கொண்டுவந்து சாக்கடை பூமியில் நட்டதும், அது முதலில் கருத்துச் சுருங்கி பிறகு மணமும் மாறி மற்றொரு மாநகரச் செடியாகத் தளுதளுத்து வளர்ந்துவிட்டது என்கிறார். செடிகள் என்பவை குறியீடு. குறிக்கப்படுபவர்கள் மனிதர்கள். தமிழகத்தின் தனித்தன்மை மிக்க மாவட்டங்களில் இருந்து வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு வந்தவர்கள் மொழியிலும் நடை, உடை பாவனைகளிலும் ஒரு கலப்பட வார்ப்பாக மாறிவிடுகிறார்கள். அவ்வாறு நிகழாமல் தன் சுயத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் மனிதர்களும் உண்டு. சாக்கடைகள் இன்றி சென்னையின் சரித்திரத்தை நீங்கள் எழுதிவிட முடியாது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத் தில் ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டி சென் னையை வணிக நகரமாக்க முற்பட்டனர். அப்போதுதான் திறந்தவெளி சாக்கடைகள் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீராம் குறிப்பிடுகிறார். மூடப்படாத இந்தச் சாக்கடைகள் சுகாதாரக் கேடுகளை விளை வித்துவிட்டன. சென்னை மாகாண கவர்னரே டைபாய்டு நோய்க்குப் பலியாகிவிட்டார்.
ஆங்கிலேய அரசு ஒரு சுகாதாரத் திட்ட வரைவைத் தயாரித்து இங்கிலாந்துக்கு அனுப்பி யது. அங்கு அதைப் பரிசீலித்த ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், இந்தியப் பெருநகரங்களில் மூடப்படாத சாக்கடைகள் சென்னையில் மட்டும் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவற்றை மூடுமாறு பரிந்துரைத்தார். சென்னையின் திறந்தவெளி சாக்கடைகளை மூடுவதும் அவற்றின் சீரான ஓட்டத்திற்குமான கட்டமைப்பும் உடனடித் தேவை என்பதை வலியுறுத்தி, அவர் விக்டோரியா மகாராணியாருக்கும் இந்திய வைஸ்ராய்க்கும் கடிதம் எழுதினார்.
இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதில் இடர்ப்பாடுகள் எழுந்தன. மெல்ல கூவம் முதலான ஆறுகள் மக்கள் பயன்பாட்டுக்கு லாயக்கற்றதாக மாறிக்கொண்டிருந்தன. அதற்குமுன் கூவத்தில் படகுகள் ஓடின. ஆங்கில அரசின் கெடுபிடிகளிலிருந்து தப்பிக்க பாரதியார் மைலாப்பூரிலிருந்து பக்கிங் ஹாம் கால்வாயின் சரக்குப் படகொன்றில் புதுவைக்குத் தப்பிச் சென்றதற்கான சான்றுகள் உள்ளன. பாரதிதாசன் சென்னையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியே ஆற்று நீரில் படகுப் பயணம் மேற்கொண்டதைப் பாடலாகப் புனைந்திருக்கிறார்.
சென்னையிலே ஒரு வாய்க்கால்
புதுச்சேரி நகர்வரை நீளும்
அன்னதில் தோணிகள் ஓடும்
எழில்
அன்னம் மிதப்பதுபோல்
என்னரும் தோழரும் நானும் ஒன்றில்
ஏறி அமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி
பின்பு தீவிரப்பட்டது வேகம்...
என்று கவிதையும் தோணியாகச் செல்கிறது. மாலை வெயிலையும் சஞ்சீவி பர்வதச் சாரல் பாடல்களையும் பாடி, ரசித்தபடி இரவு பெளர்ணமி வெளிச்சத்தில் தோணி செல்கிறது. இவ்வுலகில் தொழிலாளர் இன்றி இன்பம் ஏது என்று புகழ்கிறார். முத்து மாலையை இழுத்துச் சிதறிவிட்டாற்போல் சிந்திக்கிடக்கும் நட்சத்திரக் குப்பையைப் பார்த்தபடி மகாபலிபுரம் கடற்கரை சேர்கிறார். நட்சத்திரக் குப்பையாம். ஆ, நன்று இந்தக் கற்பனை. பாரதிதாசன் வாழ்ந்த புதுவையின் சாக்கடை நீர் தூய பளிங்கு நீராகச் செல்லும் என்று புதுவைத் தமிழறிஞர் அமரநாதன் கூறுகிறார். சைடு வாய்க்கால்கள் என்று அழைக்கப்பட்ட அந்தச் சாக்கடைகளின் இருமருங்கும் வீடுகள் இருந்தன. 74களில் இருந்த நிலை இப்போது மாறிவிட்டது.
தஞ்சாவூரில் சந்துகள்தோறும் சாக்கடைகள் இருந்தன. நகர் முழுவதும் இருந்த பாதாளச் சாக்கடைகளுடன் அவை இணைக்கப்பட்டுத் தெருக்கள் கழிவுநீர் தேங்காமல் காப்பாற்றப்பட்டன. மழைநீர் வடிகால், சாக்கடைக் கட்டமைப்பு, குடிநீர் ஏற்பாடு என நீர் மேலாண்மையால் பழைய தஞ்சாவூர் சிறந்து விளங்கியது. மராட்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்ட சாக்கடைகள் இன்றளவும் ஓடுகின்றன. ‘ஜல சூத்திரம்’ என்கிற நீர் மேலாண்மை பற்றிய நூலில் தஞ்சையின் நீராதாரம், கழிவுநீர்ப் போக்கிகள் கட்டமைப்பு குறித்த அரிய செய்திகள் உள்ளன.
தலைநகர் சென்னையில் குவிகின்ற மக்கள் கூட்டம் அதைக் குடியிருக்க தகுதியற்ற இடமாக மாற்றிவிட்டது. எல்லாக் குப்பையையும் சாக்கடையில் கொட்டுவது, எல்லாக் கழிவையும் நீர்நிலைகளில் விடுவது போன்ற தனிமனித அலட்சியமும் அண்மையில் சென்னையில் சாக்கடைநீர் எங்கும் நீக்கமற நிறைந்து வழிந்ததற்குக் காரணங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் சீற்றத்துக்கு முன்னால் எல்லா மனித எத்தனங்களும் பயனற்றுப் போகின்றன. சென்னையை மீட்டெடுக்க முடியும் என்கிற நம்பிக்கை கவிஞர் ரவி சுப்பிரமணியனின் மற்றொரு மாநகரச் செடியாக நமக்குள் முளைக்கிறது. இச்செடியைக் கவனமாகப் பாதுகாத்து எழிலுடன் பூத்துக் குலுங்கச் செய்யும் பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல நமக்கும் இருக்கிறது.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com