

வீட்டின் மூட்டை முடிச்சுகள் எல்லாம் வரவேற்பறையின் மொத்த இடத்தையும் அடைத்திருக்க, கிடைத்த இடத்தில் நான் உட்கார்ந்திருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் என் அப்பா. வேறு ஒரு குடும்பம் வீட்டின் மற்ற அறைகளை ஆக்கிரமித்திருந்தது, அவரது பார்வையில். இரண்டு நாள்களுக்கு முன்பு சாமான்களை மூட்டைக் கட்டி முடித்திருந்தோம். அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகியிருந்தது. குறைந்தபட்ச பொருள்களோடு அம்மா, தம்பி, தங்கைகள் சென்றுவிட்டனர். மூன்றாம் நாள் வீட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் லாரியில் ஏற்றிக்கொண்டு போக அப்பா வந்திருந்தார்.
நாங்கள் குடியிருந்தது ஆர்.டி.ஓ குவார்ட்டர்ஸ். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேறு ஊரிலிருந்து மாற்றல் பெற்றுவந்த உயரதிகாரியின் குடும்பம், லாரியோடு எங்கள் வீட்டு முன்வந்து நின்றது ஓர் இரவுப்பொழுது. நாங்கள் வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகத் தவறான தகவலின் பேரில் இவர்கள் வந்துவிட்டிருந்தனர். அந்த உயரதிகாரி என்னைத் தனியே அழைத்து, “எதிர்பாராமல் நேர்ந்த தவறு. இந்த இரவில் எங்கே செல்ல முடியும்? ஓர் அறையில் மூட்டைகளுடன் நீங்கள் தங்கிக்கொண்டால், நான் நன்றிக்குரியவனாக இருப்பேன்” என்று கேட்டுக்கொண்டபோது, அதைத் தவிர வேறு வழியேதும் எனக்கு இல்லை.
நடந்தது தெரியாமல் கோபப்பட்ட என் தந்தை, அந்த உயரதிகாரி என்னைப் பற்றிப் பெருமையாகச் சொன்னவுடன் மகிழ்ச்சியடைந்தார். நாங்கள் சாமான்களை எடுத்துக்கொண்டு சென்றோம். நான் அந்த ஊரிலேயே ஓர் அறை எடுத்துத் தங்கிக்கொண்டேன். இந்த இட மாற்றல் நிகழ்ந்த பல மாதங்களுக்குப் பிறகு, குனியமுத்தூர் நாச்சிமுத்து ஐயா, நான் தங்கியிருந்த அறைக்கு வந்து ஒரு கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்.
இந்தியன் வங்கியில் இருந்து வந்த கடிதம் அது. எனக்கு வழங்கப்பட்டிருந்த பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்ட தகவல் அது. முன்னதாகப் பதிவு அஞ்சலில் ஆர்.டி.ஓ. குவார்ட்டர்ஸ் முகவரிக்குச் சென்ற பணி நியமன உத்தரவை நாங்கள் அங்கே இருக்கவில்லை என்பதால் அஞ்சல் அலுவலகம் திருப்பி அனுப்பிவிட்டிருக்கவே, பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால், அண்ணன் ரங்கராஜன் முயற்சியால் ஒரு விண்ணப்பம் கொடுத்து மீண்டும் நியமன உத்தரவு பெற்றேன்.
அதற்கு முக்கியக் காரணம், பணி நியமன ரத்துக் கடிதம் சாதாரண அஞ்சலில் செல்லவே வீட்டு ஜன்னல் வழி வீசப்பட்டு வரவேற்பறையில் விழுந்திருந்தது. அடுத்து வந்த குடும்பம் அதைப் பழம்பொருள்கள் அடைத்து வைக்கும் அறையாக்கி விட்டிருக்கவே, இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் பார்த்திருக்கிறார்கள். பெருமுயற்சி மேற்கொண்டு என் வசம் அதைச் சேர்ப்பித்தனர். இல்லாவிட்டால் வேலை கிடைத்ததும் தெரிந்திருக்காது, பறிபோனதையும் அறிந்திருக்க முடியாது.