

‘எழுதப்படாத ஹைகூ கவிதைகள் நிலவொளியில் வெளவால்கள்’ என்கிறார் ஒரு ஜப்பானியக் கவிஞர். என்ன அழகான கற்பனை! வெளவால்களைக் கண்டாலே முகம் சுளிக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அவற்றை ரசித்து நிலா வெளிச்சத்தில் பார்க்கும்போது எழுதப்படாத ஹைகூ கவிதைகளாகத் தோன்றுகிறது என்று வர்ணிக்கும் அந்த ஜப்பானியக் கவிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காக்கையை ‘கண்ணுக்கினிய கருநிறக் காக்கை’ என்று பாரதி பாடவில்லையா! எனக்கு வெளவால்களைப் பிடிக்கும். புராதனக் கட்டிடங்களிலும் கோயில் மண்டபங்களிலும் அவை தலைகீழாகத் தொங்குவது பிடிக்கும். அவற்றின் வாசனை பிடிக்கும். அவற்றின் வெல்வெட் இறக்கைகள் பிடிக்கும். மணிக்கண்களைக் குழந்தைபோல் உருட்டுவது பிடிக்கும்.
வெளவால் பறப்பதால் அது பறவை அன்று. அது விலங்கு. அது பாலூட்டி வகையைச் சேர்ந்த பறக்கும் விலங்கு. பறப்பதற்கு ஒருவித நுண் அலைகளை அவை பயன்படுத்துகின்றன. அந்த நுண் அலைகள் ஒரு பொருளின் மீது பட்டுத் திரும்பி வருவதை உணர்ந்து எவற்றின் மீதும் மோதிக்கொள்ளாமல் பறக்கின்றன. வெளவாலை வைத்துதான் ராடார் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. கிராமத்தில் எங்கள் எதிர்வீட்டுத் திண்ணையில் படுத்திருக்கும் தாத்தா, இரவு நேரத்தில் பழந்தின்னி வெளவால்கள் ஆகாயத்தில் பறந்துபோவதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்.
‘துரிஞ்சல்கள்’ என்கிற பெயரில் சிறியவகை வெளவால்கள் இருக்கின்றன. ‘அடர்ந்த காடுகளில் ராட்சச வெளவால்கள் மரத்தடியில் தூங்கும் மனிதர்கள், விலங்குகள் மீது தங்களின் பெரிய இறக்கைகளால் விசிறிவிட்டு அவர்களைச் சுகமாகத் தூங்கச் செய்துவிடும். பிறகு அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும்’ என்று வெளவால் பற்றி தாத்தா சொல்லும் கதைகளில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கான ‘பேட்மேன்’ திரைப்படம் பிரசித்தம். வெளவால் ஓர் அமானுஷ்யத் தோற்றம் கொண்டது. திகில் படங்களில் இருண்ட குகைகளில் வெளவால்கள் பறந்துபோவதைக் காட்டுவார்கள்.
புதுமைப்பித்தன் தமது ‘காஞ்சனை’ என்கிற பேய்க் கதையில் இரவு வேளையின் அமானுஷ்யத்தை நான்கே வரியில் சித்தரித்திருப்பார். ‘மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன். மனித நடமாட்டமே இல்லை. எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஒடுங்கியது. பிரம்மாண்டமான வெளவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.’ கிராமத்தில் நானும் அப்பாவும் வாடகைக்கு வீடுதேடிப் போனோம். நாழி ஓடுகள் வேய்ந்த நாலுகட்டு வீடு. ஒரு பெரியவர் கையில் குறடுடன் வீட்டின் விறாந்தையில் மரச்சட்டங்களின் இடுக்கிலிருந்து வெளவால்களைப் பிடித்துக் கீழே போட்டுக்கொண்டிருந்தார்.
“வாங்க வாத்யாரய்யா. இந்த வெளவாலுங்க ராத்திரிபூரா பின்னாடி நம்ம தோப்புல பழம், காய் எல்லாம் கடிச்சுட்டு பகல்ல நல்லா தூக்கம் போடுதுங்க… இதுங்கள வேட்டையாடிக்கிட்டு இருக்கேன்...” “தயவு செய்து வெளவால்களைக் கொல்லாதீ்ர்கள்” என்றார் அப்பா கெஞ்சும் குரலில். தாத்தா கேட்பதாக இல்லை. நாங்கள் அந்த வீட்டுக்குக் குடிபோனோம். வெளவால்கள் குறுக்கும் நெடுக்கும் பறக்கும். “எவ்வளவு அழகா இருக்கு பார்த்தாயா?” என்று சொல்லி அப்பாதான் வெளவால்களை நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். ஒருநாள் என்னிடம், “நம் உறவினர் வீட்டில் உனக்கு ஒரு அதிசயம் காட்டுகிறேன் பார்!” என்றார் அப்பா. அதிசயம்தான். உறவினர் வீ்ட்டுப் பின்கட்டில் ஓர் அறையின் மேற்கூரை முழுவதும் வெளவால்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
அப்பாவிடம் அவர் சொல்லிக் கொண்டி ருந்தார். வீட்டில் வெளவால் இருந்தால் அதிர்ஷ்டமாம். ஆகவே வெளவால்களை அவர் விரட்டுவதில்லையாம். “வெளவால்களுக்கு நம்மைப் போல இங்கே வாழ்வதற்கு உரிமை உண்டு. அதிர்ஷ்டம் என்று சொல்வதெல்லாம் மூடநம்பிக்கை” என்றார் அப்பா. இரவு திண்ணையில் படுத்துக்கொண்டோம். வெளவால்கள் எங்கள் தலைக்கு மேல் விர்விர் என்று பறந்தன. உறவினர், “கடைசிப் பொண்ணை நினைச்சாதான் கவலையா இருக்கு. என் பையன்கள் எல்லாம் என்னை மாதிரி நல்ல சிவப்பு. அவ என் அம்மா மாதிரி நிறம் கம்மி. அவளை எப்படிக் கரையேத்த போறேனோ?” “அப்படி எல்லாம் பேசாதீர்கள். நிறத்துல என்ன இருக்கு? குழந்தை புத்திசாலியாக இருக்கிறாள்.
அவளுக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பான்” என்றார் அப்பா. அந்தப் பெண் ஒரு சொம்பில் பாலும் மூன்று டம்ளரும் கொண்டு வந்தார். என்னைப் பார்த்து, “உனக்கு வேணுமானால் ஆற்றிக் கொடுக் கட்டுமா? சூடா இருக்கு” என்று சொன்னார். அவர் மனம்போல் பால் வெண்மையாக இருந்தது. சென்னையில் நாங்கள் குடியிருந்த வீட்டின் ஜன்னலில் எங்கிருந்தோ ஒரு வெளவால் வந்து தொற்றியது. அழகாக விரிந்த இறகுகள் எனக்குப் பால்ய காலத்து நினைவைக் கொண்டுவந்துவிட்டன. அந்தப் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகி இருக்குமா? அந்தக் கிராமத்துக்குக் கிளம்பிவிட்டேன். வீட்டில் இப்போது வேறு யாரோ குடியிருந்தார்கள். திண்ணையில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
“இந்த வீட்டுக்காரர் என்னி டம் வீட்டை ஒத்திக்குக் கொடுத்துவிட்டு வெளி நாட்டுக்குப் போய் விட்டார். நீங்கள் அவருக்கு உறவா?” என்று கேட்டார் அவர். “இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா?” “தெரியாது. ஒரு நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டதால் இந்த வீடு கிடைத்தது. வீட்டின் பின் அறையில் வெளவால்கள் இருக்கு. அவற்றைத் துரத்தக் கூடாதாம். வெளவால் இருந்தால் அதிர்ஷ்டமாம்!” “அவரின் கடைக்குட்டிப் பெண் பற்றித் தெரியுமா?” “அந்தப் பெண்ணுக்கு மனநிலை பிசகி விட்டது. வெளியே அனுப்பிவிட்டார்”. “வெளியே என்றால்?” “கோயில்ல கொண்டுபோய் விட்டுட்டார்.” “நான் அந்த வெளவால் அறையைப் பார்க்கலாமா?” அழைத்துப் போனார். வெளவால் வாசம். அதே வெளவால் கூட்டம் கூரையெங்கும் தலைகீழாக. ‘நிலைமாறாத நோக்குகளால் காட்சி தலைகீழாகிறது வெளவாலுக்கு நாமும் நமக்கு வெளவாலும்’ என்கிற கவிஞர் கரிகாலன் கவிதை நினைவுக்கு வந்தது.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com