உதவிய கரங்கள்: சென்னையை மீட்டெடுத்த மனிதம்

உதவிய கரங்கள்: சென்னையை மீட்டெடுத்த மனிதம்
Updated on
2 min read

மிக்ஜாம் புயல் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத சேதத்தை சென்னையில் ஏற்படுத்தியிருக்கிறது. உயிர் இழப்புகள், வீடு, வாகனம், விலங்குகள் சேதம் என மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மெதுவாக மீண்டெழுந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து வாழ்வை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இவற்றுக்கிடையே மிக்ஜாம் புயல் பல மனித நேயமிக்க நிகழ்வுகளை நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறது.

கரம் கொடுத்த வியாசை தோழர்கள்: வியாசர்பாடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கிய மக்களை மீட்டதில் அங்குள்ள தன்னார்வ அமைப்பான ‘வியாசை தோழர்கள்’ பங்கு அளப்பரியது. மிக்ஜாம் புயலால் முல்லை நகர், சத்யமூர்த்தி நகர், எம்.கே.பி. நகர், பி.பி. ரோடு பகுதிகளில் உள்ள மக்களை மீட்டதுடன், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கவும் இந்த இளைஞர்கள் வழிசெய்திருக்கிறார்கள். கொட்டும் மழையில் ஓடி, ஓடி உழைத்த இந்த இளைஞர்கள் கரோனா காலத்திலும் மக்களின் நாயகர்களாக வலம்வந்தனர். மேலும், வியாசர்பாடி பகுதி குழந்தைகளுக்காக இரவுப் பள்ளிகளை இந்த அமைப்பினர் நடத்திவருகிறார்கள். வடசென்னை இளைஞர்களை வன்முறையின் பக்கம் பயணிப்பவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படத்துறைக்கு ‘வியாசை தோழர்கள்’ தங்கள் செயல்கள் மூலம் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தயாளனின் தயாளம்: துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் தயாளன். துரைப்பாக்கத்தில் மிக்ஜாம் புயலால் மழை நீரில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவலர்களுள் முக்கியமானவர் தயாளன். மீட்புப் பணியின்போது பெற்றோரிடமிருந்து ஒரு குழந்தையை வாங்கிக்கொண்ட தயாளன், வாஞ்சையுடன் அழைத்துவந்த காட்சிக்கு நிகர் எதுவும் இல்லை. ஊடகங்களால் எடுக்கப்பட்ட தயாளனின் ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மழை வெள்ளத்தில் தங்கள் பாதுகாப்பைப் பொருள்படுத்தாமல் சேவையில் ஈடுபட்ட தயாளன் உள்ளிட்ட அனைவரும் வணக்கத்துக்கு உரியவர்கள்.

விலங்குகளைக் காத்த உள்ளங்கள்: புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு விடுகின்றன. இது விலங்குகளுக்கும் பொருந்தும். இக்கட்டான பேரிடர் காலங்களில் மக்களை மீட்டெடுப்பதற்கு இடையிலும் சிலர் நாய், பூனை போன்ற விலங்குகளையும் காப்பாற்றி அடைக்கலம் அளித்திருக் கிறார்கள்! வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நாய்களையும் அவற்றின் குட்டிகளையும் பாதுகாத்து வண்டியிலும் படகிலும் ஏற்றிவந்து, உணவளித்த காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது.

நிஜ நாயகர்கள்: மிக்ஜாம் புயல் சென்னையில் நிகழ்த்திய தாண்டவத்தால் சாலைகளில் டன் கணக்கில் குப்பை தேங்கியிருந்தது. குவிந்த குப்பையை நேரம், காலம் பார்க்காமல் சுத்தம் செய்த தூய்மைப் பணியாளர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். குப்பையை நீக்குவதற்கு சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் தூய்மைப் பணியாளர் கள் அரசின் ஆணைக்கு இணங்கி, சென்னைக்கு வந்து தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தனர். தற்காலிகப் பணியாளர்களாக உள்ள இவர்களை, நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க தமிழக அரசுக்குப் பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழ, தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அவரவர் ஊர் திரும்பியுள்ளனர் இந்த நிஜ கதாநாயகர்கள்.

மனிதம் காத்த மீனவர்கள்: பெரும் மழையினால் இடுப்பளவு தண்ணீரில் இறங்க முடியாமல் தவித்த சென்னையின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஏராளம். அதுவும் கீழ்த் தளத்தில் குடியிருந்தவர்களின் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துகொள்ள, ‘எங்க வீட்டுக்கு வாங்க... பார்த்துக்கொள்ளலாம்’ என மேல்தளவாசிகள் உதவிய கதைகள் ஏராளம். இதற்கிடையில் வெள்ள நீரில் சிக்கிக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளை மீட்க, மீனவர்கள் களத்தில் இறங்கினர். சற்றும் சோர்வு அடையாமல் திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் படகு மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் சேர்த்தனர். 2015 சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டதில் எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே இப்போதும் தங்கள் சேவையைத் தொடர்ந்து மனிதத்தைக் காத்துள்ளனர் மீனவ மக்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in