இனிக்கும் நினைவுகள் | கறுப்புச் சட்டை சாமியும் கறுப்புச் சட்டை மாமாவும்

இனிக்கும் நினைவுகள் | கறுப்புச் சட்டை சாமியும் கறுப்புச் சட்டை மாமாவும்
Updated on
2 min read

கார்த்திகை வரும்போதே அதுவரை கோபம்கொள்ளும் மழையைச் சாந்தமாக்கி, லேசான குளிரை உடல்மீது போர்த்தும். அப்போது மனதில் கிளர்ந்து எழும் இனிய நினைவுகளில் இரண்டு கறுப்புச் சட்டைக்காரர்கள் முக்கியமானவர்கள். அருகில் உள்ள கிராமத்திற்கு சைக்கிளில் சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியரை, ‘வாத்தியாரே’ என்று அழைப்பவர்கள், கார்த்திகை மாதம் ஆரம்பித்தவுடன் ‘வாத்தியார் சாமி’ என்று அழைக்கும்போது எனக்கு அதுவரை இல்லாத பெருமிதம் பொங்கும். மளிகைக்கடை மூப்பனார், பழக்கடைத் தேவர் எனத் தொழில் சார்ந்த பெயர்களுக்குப் பின்னால் வரும் சாதிப் பெயர்கள் அழிந்து, ‘மளிகைக்கடை சாமி’, ‘பழக்கடை சாமி’ என அனைவரும் சாமிகளாக ஊருக்குள் உலாவரும் சமத்துவ மாதம்தான் இந்தக் கார்த்திகை!

ஊரே ‘கறுப்புச் சட்டை, கறுப்பு வேட்டி’ அணிந்துகொண்டு ஐயப்ப கோஷம் பாடுவதுபோலத் தோன்றும். பதினெட்டு வருடங்கள் மலைக்குச் சென்றுவந்த என் அப்பாவை அனைவரும் குருசாமி என அழைக்கும்போது, மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். என்னுடன் பிறந்தவர்களுக்கு மணிகண்டன், மஞ்சுளா தேவி போன்ற பெயர்களுக்குப் பின்னாலும் சபரிமலை சரித்திரம் உண்டு. எனக்குப் பல வருடங்களுக்குப் பின்னால் பிறந்த என் தங்கை, அப்பா மலையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அன்று பிறந்ததால் ‘மஞ்சமாதா’ என்று பெயர்பெற்றார். ‘மணிகண்டன்’ என்கிற என் தம்பிக்கும் இப்படி ஒரு பெயர்ச் சரித்திரம் உண்டு.

சாமிக்கு மாலை போடுவதில் அப்பாவுக்கு ஒரு வசதியும் இருந்தது. மலைக்குச் சென்று திரும்பும்வரை வீட்டின் லெளகீகத் தேவைகளை முழுவதுமாக நிறைவேற்றுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். ஜவுளிக்கடை சாமியின் இரண்டாவது மாடி, சாமிகளின் தங்குமிடமாக மாறிவிடும். காலையில் ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் சாமிகள் குளித்து, ஊருக்குள் நுழையும் இடத்தில் உள்ள அம்மன் கோயிலில் சாமி கும்பிடுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். ஒவ்வொரு சாமியும் குறிப்பிட்ட சரணத்தில் பாடத் தொடங்கி, குறிப்பிட்ட சரணத்தில் முடிப்பதற்குள், அடுத்த சரணத்தை யார் தொடங்குவது என்பதில் சண்டையே வந்துவிடும்.

அனைவரையும் சமாதானம் செய்வதற்கு ஆசிரியப் பணி அப்பாவுக்குக் கைகொடுக்கும். அங்குதான் அன்றைய வீட்டுச் செலவுக்கான பணத்தை என்னிடம் அப்பா தருவார். அதை அம்மாவிடம் கொடுக்கும்போது, அவர் கொடுக்கும் திட்டுகளையும் வாங்க வேண்டும். ஒரு குருசாமியை அம்மா இப்படித் திட்டுவதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அப்பா வீட்டிற்கு வராது இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எல்லா ஊர்களிலும் இளைஞர்களைத் தமது வித்தியாசமான கருத்துகளால் கவர்பவர்களைப்போல, எங்கள் ஊரிலும் பக்கத்து வீட்டில் மாமா ஒருவர் இருந்தார். அவரும் கறுப்புச் சட்டைதான் அணிவார். மற்றவர்களைப் போல் அல்லாமல், ஆண்டு முழுவதும் கறுப்புச் சட்டையில்தான் இருப்பார்.

ஆனால், அவரை யாரும் சாமி என அழைக்க மாட்டார்கள். அவர் மழைக்குக்கூடக் கோயிலுக்குள் ஒதுங்காதவர். அவர் வேறு வண்ணச் சட்டைகள் அணிந்து அவர் குடும்பத்தினரே பார்த்ததில்லை. ‘கறுப்புச் சட்டைக்காரர்’ என்றே ஊர் அவரை அழைத்தது. ஒரு கார்த்திகை மாதத்தில்தான் இந்த வண்ணங்களுக்குள் உள்ள கொள்கை வேறுபாடு புரிய ஆரம்பித்தது. இருவருமே வேறு வேறு திசைகளில் உள்ளவர்கள், ஏன் ஒரே வண்ண ஆடையை உடுத்திக்கொள்கிறீர்கள் என்கிற கேள்விக்கு இருவருமே, ‘அங்கதான் நீ யோசிக்கணும்’ என்கிற ஒரே பதிலைச் சொன்னார்கள்.

இந்தச் சாமிகளுக்குள் எனக்கு மிகவும் பிடித்த மாமா மகன் ஒருவர் உண்டு. வருடம் முழுவதும் சிவந்திருக்கும் அவர் கண்கள், கார்த்திகை பிறந்ததும் வெண்ணிறம் அடையும். எனக்கு சிவாஜியை, காமராஜரை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் ஆசான். அவர் ஒரு வருடம் என்னிடம், ‘மாப்ளே, ஒவ்வொரு வருடமும் கன்னிசாமி நம் ஊரிலிருந்து செல்ல வேண்டும். மலையில் மஞ்சமாதா கன்னிசாமி வராத வருடத்தில் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சபதம் எடுத்து, சாமிக்கு அருகில் இருப்பதால், நம்மால் பிரச்சினை வந்துவிடக் கூடாது. அதனால் நீதான் இந்த வருடம் கன்னிசாமி. குருசாமிகிட்ட பேசி, சம்மதமும் வாங்கிவிட்டேன்’ என்றார். நா

னும் கன்னிசாமியாகச் சென்றேன். திடீரென்று ஜவுளிக்கடை சாமியும் தன் மகளைக் கன்னிசாமி ஆக்கிவிட்டார். சரணம் சொல்லும்போது எனக்கு என் எதிரில் நிற்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து நாக்கு குழறுவதை, குருசாமி கண் திறந்து ஒருமுறை முறைப்பார். இந்த ஒருமாத விரதத்தின் இறுதி நாளன்று இருமுடி கட்டி மலைக்குச் செல்லும் வைபவம் நடக்கும். ஜவுளிக்கடை கன்னிசாமியிடம், ‘இருமுடி மேல மாலை யைப் போடு’ என்று என் அப்பா குருசாமி சொன்னார். அந்தப் பெண்ணோ அருகில் நின்ற என்மீது மாலையைப் போட்டுவிட்டார்! எல்லாருக்கும் அதிர்ச்சி. அமைதியாக நின்றிருந்தார்கள். உடனே குருசாமி, ‘அறிந்தும் அறியாமலும் செய்த தவறைப் பொறுத்தருள வேண்டும் சாமியே’ என்று கோஷமிட்டு, நிலைமையை இயல்புநிலைக்குக் கொண்டுவந்தார்.

அன்றிலிருந்து ஜவுளிக்கடை சாமி என்னை ‘மருமகனே’ என்றுதான் அழைப்பார். அந்தப் பெண் திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி, இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும், நாங்கள் சந்திக்கும் கணத்தில் நாணம் இருவரின் விழிகளுக்குள்ளும் ஓடி, புன்னகையாக மலரும்! நான் கறுப்புச்சட்டை சாமியாகிவிட்டதில் பக்கத்து வீட்டுக் கறுப்புச் சட்டை மாமாவுக்கு ரொம்ப வருத்தம். வாழ்வின் விளிம்பிற்கு வந்து நிற்கும் என் அப்பாவுக்கும் கறுப்புச் சட்டை மாமாவுக்கும் இப்போது தங்களது சிந்தனையில் நிற்பது ஒன்றே ஒன்றுதான். தன் உடல் மீது கறுப்பு வேட்டியைப் போர்த்த வேண்டும் என என் அப்பாவும், கறுப்புக் கொடி போர்த்த வேண்டும் என்று பக்கத்து வீட்டு மாமாவும் காத்திருக்கிறார்கள். முன்பைவிட அதிக எண்ணிக்கையில் கார்த்திகை மாதத்தில் கறுப்புச் சட்டை சாமிகள் தென்பட்டாலும், நான் கடந்துவந்த அந்தச் சாமிகளிடையே இருந்த ஏதோ ஒன்று இன்று இவர்களிடம் இல்லை!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in